Items filtered by date: Wednesday, 08 November 2017

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இந்தியாவினால் முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குமெனவும். இலங்கை நோக்கி வரும் எண்ணெய் தாங்கிய கப்பலுக்கு மேலதிகமாக எண்ணெய் தேவைப்படுமாயின் அதனை வழங்குவதற்கு இந்தியா தயார் எனவும் இதன்போது இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நரேந்திர மோடியின் கரிசனைக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

40,000 மெற்றிக்தொன் எரிபொருளுடன் “நெவஸ்கா லேடி“ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நள்ளிரவுக்குள் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்திற்கு குறித்த எரிபொருள் அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், நாளை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Published in உள்நாடு

கொழும்பு பிரதான நீதவான் நீதமன்றத்தின் வழக்குப் பொருட்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் அலைபேசியைப் பரிசீலிப்பதற்காக பொலிஸ் கணனிப் பிரிவுக்கு அனுப்புவதற்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

2012ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 3ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், தாஜுதீனின் நொக்கியா ஈ 71 -1 அலைபேசியில் இருந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கே, சீ.ஐ.டியினரால் அனுமதி கோரப்பட்டிருந்தது.

மேலும், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தாஜுதீனின் காரை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் கோரியுள்ளமை தொடர்பிலும் சாலிகா விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சுவரைப் புனரமைக்கவுள்ளமை தொடர்பிலும் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று சமர்பிக்கப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டி சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இருந்து தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டார்.

முதலில் அது விபத்து என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் படுகொலை செய்யப்பட்டு காருடன் எரிக்கப்பட்டிருந்தமை சீ.ஐ.டியினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மன்றில் ஆஜராகாமையால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோரப்பட்டது.

கடந்த அமர்வில் பிணை பெற்றுக்கொண்ட சமரசேகர, குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் சென்றபோது சுகவீனமடைந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகி்ச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் பின்னர் மேலதிக சிகிக்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் மாற்றப்பட்டார் என்றும் சமரசேகரவின் சட்டத்தரணியால் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமைக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பிரபலமான வழக்கு என்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து மருத்துச் சான்றிதழ் தர வைத்தியர்கள் மறுக்கின்றனர் என்றும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

யாருக்கும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்று அறிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி என்பதால் முறைமையை அறிந்திருக்க வேண்டும் என்றும் அறிவித்தார்.

சமரசேகரவுக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைடுத்து, அடுத்த அமர்வில் மருத்துச் சான்றிதழைச் சமர்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி, வழக்கை இம்மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Published in உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கண்டால் பாரிய அச்சமாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவரை விசேட சோதனைக்கு உட்படுத்தியப் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க உத்தரவுப்பிறப்பிக்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநெல் வலியுறுத்தினார்.

வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கை மீது அரசமைப்பு நிர்ணய சபையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“நாடாளுமன்றத்திற்கு குண்டு வீசவேண்டுமென விமல் வீரவன்ஸ அண்மையில் கூறியிருந்தார். ஆரம்பித்தல் ஜே.வி.பியில் இருந்தபோது அக்கட்சிக்கு குண்டு வீசிவிட்டு சென்றார். பி.பீ.ஜெயசுந்தர போன்வர்களுடன் இணைந்து விமல் குண்டு வீசியதனாலேயே நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தது. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் இல்லாது போனது.

தற்போது நாடாளுமன்றத்திற்கு குண்டு வீசப் போவதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது பாரிய அச்சுறுத்தலான விடயமாகும். விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்திற்கு வரும்போது நாடாளுமன்றத்தின் முதலாவது வாசலில் இருந்தே விசேட பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

வாகனம் உட்பட அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தபட்டப் பின்னரே நாடாளுமன்றின் உள்ளே பிரவேசிக்க அனுமதியளிக்க வேண்டும் என்பதுடன், நாடாளுமன்றத்திலும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்“ என அவர் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Published in உள்நாடு

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் காயங்கள் மற்றும் சித்திரவதை பற்றிய விபரங்களை சர்வதேச ஊடகமொன்றுக்கு காண்பித்துள்ளனர். கால்கள், நெஞ்சுப் பகுதி போன்றவற்றில் சித்திரவதைகள் மூலம் ஏற்பட்ட காயங்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மீளவும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கையின் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மறுத்துள்ளார். இலங்கையில் இவ்வாறான சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தான் தயாராகவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொடவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய போது அவர் இதனைக் கூறினார்.
 
அனிக்கா விஜேசூரியவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுனில் நெத்திகுமார தனது உறவினர் என மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளதாகவும், அதனை நிரூபித்தால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயார் எனவும் ரவி குறிப்பிட்டுள்ளார்.
 
அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால், பிணைமுறி தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Published in உள்நாடு

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்க முன்னதான இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப்பொருட்களுக்கான வரிக் குறைப்பை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்குவரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பொருட்கள் தற்போதைய வரி (1KG       ரூபா)  குறைக்கப்பட்ட வரி(1KG ரூபா)  புதிய வரி(1KG    ரூபா)
நெத்தலி 11 10 1
உருளைக்கிழங்கு 40 39 1
பெரிய வெங்காயம் 40 39 1
பருப்பு (முழுமையானது) 10 09 1
வகைப்படுத்தப்பட்ட பருப்பு 15 12 3
கருவாடு 102 50 52
பாம் ஓயில்  / ஏனைய மரக்கறி எண்ணெய் 110 15 95
பாம் ஓலென் 115 15 100
பாம் ஸ்ரீயன் 110 15 95
சுத்தம் செய்யப்பட்ட பாம் ஓயில் 135 25 110
சுத்தம் செய்யப்படாத மரக்கறி எண்ணெய் 130 25 105
சுத்தம் செய்யப்படாத பாம் கேனல் ஓயில் 130 25 105
சுத்தம் செய்யப்படாத பாம் கேனல் ஓயில் 145 35 110
தேங்காய் எண்ணெய் சுத்தம் செய்யப்படாத மற்றும் சுத்தம் செய்யப்பட்ட 130  25 105
Published in உள்நாடு

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்க முன்னதான அத்தியாவசியப்பொருட்கள் தொடர்பிலான விலைக்குறைப்பினை நிதி மற்றும் ஊடத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார்.

நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், பருப்பு , தேங்காய் எண்ணெய், சுத்தம் செய்யப்படாத எண்ணெய், கருவாடு, ஏனைய வகை பருப்பு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யப்படாத எண்ணெய் 1 லீற்றர் 110 ரூபாவிலிருந்து 95 ரூபாவாக 15 ரூபாவினாலும் , தேங்காய் எண்ணெய் 1 லீற்றர் 130 ரூபாவிலிருந்து 105 ரூபாவாக 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

கருவாடு 1 கிலோகிறாம் 102 ரூபாவிலிருந்து 52 ரூபாவாக 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு ஆகியவற்றிற்கு 1 ரூபாவினால் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய பருப்பு வகை 1 கிலோகிறாம் 15 ரூபாவிலிருந்து 12 ரூபாவாக 3 ரூபாவினால் இறக்குதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு
Page 1 of 3

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top