Items filtered by date: Monday, 20 November 2017

யாழ்ப்பாணம் மணல்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த பதினாறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இந்த வழக்கில் அரச சட்டத்தரணியான நாகரட்ணம் நிஷாந், குறித்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

அத்துடன் குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி கர்ப்பமாகியதில் நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்றும் அவருக்கு உள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து குற்றவாளிக்கு 15 ஆண்டுகால கடுழிய சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபா அபராதமும் கட்டத் தவறின் 18 மாத கடூழிய சிறையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 இலட்சம் ரூபா நஷ்டஈடும் செலுத்த தவறின் 18 மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

Published in உள்நாடு

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை உடனடியாக களைக்குமாறு ஜனாதிபதியிடம் உத்தியோகப்பூர்வமாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சைட்டம் தனியார் கல்லூரியில் கல்விப்பயிலும் மாணவர்களில் வைத்திய கல்வியை கற்க தகுதியுடைய மாணவர்களுக்கு மாத்திரம் அரச வைத்திய பீடங்களில் கல்விகற்க சந்தர்ப்பம் அளிக்குமாறும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Published in உள்நாடு

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கக் கூட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

முதலாவது கூட்டம் திருகோணமலை நகர மண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில், கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணிக்கு இரண்டாவது கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மூன்றாவது கூட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில், தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி மாலை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இடைக்கால அறிக்கை பற்றி தெளிவுபடுத்தவுள்ளனர்.

Published in உள்நாடு

147 கிராம் ஹெரோய்னை வைத்திருந்தார் மற்றும் வியாபாரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரொருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

லொக்குநாரங்கொடகே சமிந்த ஜகத் என்பவருக்கே மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று, பொரலஸ்கமுவ, அங்கில்லகத்த பகுதியில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வாசிக்கப்பட்டபோது, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த ஹெரோய்ன் வைத்திருந்த மற்றும் வியாபாரம் செய்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி நிஷரூபணமாகியுள்ளதாகவும் அவரைக் குற்றவாளியாக இனங்கண்டுள்ளதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில், குற்றவாளிக்கு உட்சபட்ச தண்டனை வழங்குமாறு கோரப்பட்டதுடன், குற்றவாளியின் வழக்குரைஞரால், குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் கோரப்பட்டது. அதன்பின்னரே மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

Published in உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களில் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச உட்பட அறுவருக்கு எதிரான வழக்கின் பிரதிவாதிகளுள் ஒருவரான சேனானி சமரநாயக்க, இந்தியாவுக்குச் செல்ல அனுமதி கோரியுள்ளமை தொடர்பான உத்தரவு நவம்பர் 29ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

2013ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2014ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாமல் எம்.பிக்குச் சொந்தமான கவர் கோப்பரேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று, 30 மில்லியன்
ரூபாய் பணச்சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்நிறுவனத்தின் உரிமையாளரான நாமல் ராஜபக்‌ச, பணிப்பாளர்களான இந்திக பிரபத் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, சேனானி சமரநாயக்க ஆகிய ஐவருக்கு எதிராகவும் கவர் கோப்ஸ் நிறுவனத்துக்கு எதிராகவுமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டிசெம்பர் முதலாம் திகதியிலிருந்து 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆன்மிக வழிபாடுகளின் நிமித்தம், தமது சேவை பெறுநர் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்றும் அதற்கு அனுமதியளிக்குமாறும் அவருடை சட்டத்தரணி கோரிநின்றார்.

குறித்த பிரதிவாதி, ஏற்கனவே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார் என்றும் அனுமதிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டது.

எனினும், பிரதிவாதியின் பிணையாளர்கள் முன்னிலையாகவேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய அடுத்த அமர்வில், பிணையாளர்களை முன்னிலைப்படுத்துவதாக பிரதிவாதியின் சட்டத்தரணி அறிவித்ததையடுத்து, உத்தரவு 29ஆம் திகதி வழங்கப்படும் என, நீதிபதி அறிவித்தார்.

Published in உள்நாடு

நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தற்போது குறைவடைந்திருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் 50 ஆயிரத்து 962 பாரிய குற்றச்செயல்கள் பதிவாகியிருந்தன. 2016ஆம் ஆண்டில் இது 36 ஆயிரத்து 937 ஆக குறைவடைந்தது. இது 37 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் முதல் 10 மாத காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 350 ஆக குறைவடைந்துள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்திருந்த போதிலும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 2014 ஆம் ஆண்டில் பாரிய குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளை 50 வீதம் தீர்க்க முடிந்துள்ளது என்றும் 2017 ஆம் ஆண்டில் இதனை 72 சதவீதமாக அதிகரிக்க முடிந்தது என்றும் தெரிவித்த அமைச்சர், இது பொலிஸ் தரப்பில் பெறப்பட்ட பாரிய முன்னேற்றமாகும் எனவும் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு
காலி – கிந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வெள்ளி இரவு இப்பகுதியில் இடம்பெற்ற முறுகல் நிலையை அடுத்து இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மோதலுடன் தொடர்புடைய ஏனையோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் பொலிஸார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
இந்நிலையிலேயே, இதுவிவகாரம் குறித்து பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைத் தலங்களின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொது மக்கள் மத்தியில் அசாதாரண நிலையை தோற்றுவிப்பதே இதன் நோக்கம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published in உள்நாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விலைப்போயுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை விமர்சித்த முன்னாள் பிரதியமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன், வடமாகாண கல்வியமைச்சர் பாடசாலையொன்றில் தேசிய கொடியினை ஏற்ற மறுத்திருப்பது அவரது கொள்கையின் வெளிப்பாடேயாகும். இதனை தவறு என விமர்சிக்க எவருக்கும் தகுதியில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், “மஹிந்த அரசில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் புதிய அரசை உருவாக்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய கொடியை ஏந்தியது புதிய அரசின் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கையிலாகும்.

ஆனால், நல்லாட்சி என்று சொல்லப்படும் புதிய அரசு உருவாகி மூன்று வருடங்கள் முடியும் தருணத்திலும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை என்பதனை பறைசாற்றவே வடமாகாண கல்வியமைச்சர் தேசிய கொடியை ஏற்றவில்லை என்று கருதுகிறோம்.

அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகளின் செல்வாக்கின் ஊடாக மக்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு போதும் விடுதலைப் புலிகளின் காலத்தில் தேசிய கொடியினை ஏந்தியதும் இல்லை.

இன்று வடமாகாண கல்வி அமைச்சரை விமர்சிப்பதற்கு அவர்களுக்கு தகுதியும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பேச்சாளர் ஐக்கிய தேசிய கட்சிக்கு விலைபோயுள்ளார் என தோன்றுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தங்களது நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கான உரிமை இருக்கின்றது என்பதே ஜனநாயக ரீதியான அரசியலாகும்.

அத்தோடு, இந்த அரசில் இருக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமருடனான சந்திப்பை ஏற்படுத்தி அழுத்தங்களை வழங்கி அரசியலமைப்பு மாற்றத்தை ஏன் உடனடியாக ஏற்படுத்த முடியுமா என கேள்வி எழுப்ப வேண்டும். அதைவிடுத்து பாதிக் கிணறு தாண்டிவிட்டோம் என்றும் அரசில் அமைச்சராக இருந்து கொண்டு அமைச்சு வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு அரசுக்கு எதிரான ஊடக அறிக்கைகளை மட்டும் வெளியிடுவது எவ்வகையில் நியாயமானதாகும்“ என கேள் எழுப்பியுள்ளார்.

Published in உள்நாடு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நாளை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
நாளை காலை 11.15 மணியளவில் கொல்லூர் அருகே உள்ள அரசிரூர்  விமான தளத்தில் வந்திறங்கும் பிரதமர், அங்குள்ள விடுதி ஒன்றில் தயாராகிக் கொண்டு மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்குச் செல்வார்.
 
நாளை காலை 11.50 மணியளவில் அங்கு பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படும். முகாம்பிகை அம்மனை தரிசித்த பின்னர், அவர், சண்டிக ஹோமத்திலும் பங்கேற்பார். மதிய போசனத்தையும் அங்கேயே முடித்துக் கொண்டு, 2.20 மணியளவில் மீண்டும் விமான இறங்குதளத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வார்.
 
 பிரதமரின் வருகையையொட்டி மூகாம்பிகை அம்மன் ஆலயப் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன் நாளை காலை 10 மணி தொடக்கம், பிற்பகல்1.30 மணிவரை ஆலயத்துக்குள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஒகஸ்ட் மாதம் 27ஆம் நாள் இந்த ஆலயத்தில் வழிபாடுகளை செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெங்களூரு சென்றிருந்தார்.
 
எனினும், கடும் மழை மோசமான காலநிலையால் ஆலய தரிசனத்தை கைவிட்டு கொழும்பு திரும்பும் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published in உள்நாடு
வடக்கு மாகாண கல்வியமைச்சர் தேசிய கொடியை ஏற்க மறுப்பு தெரிவித்த  சம்வம் தொடர்பிலான எனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினால் இந்த விவகாரத்தில் நான் எடுக்கும் தீர்மானம் பக்கசார்பானதாக கருதப்படும்.
 
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். 
 
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்த சம்வம் தொடர்பிலான புகைக்படங்கள், சர்வவேஸ்வரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான தரவுகளையும் சட்டமா அதிபருக்கு சமர்பிக்கவுள்ளேன். சட்டமா அதிபரின் தலைமைத்துவத்தின் நிலைப்பாட்டின் பிரகாரம் இந்த விடயம் குறித்த எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.
 
எவ்வாறாயினும் இந்த விவகாரத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால் இது தொடர்பிலான மாகாண சபை உறுப்பினர்களின் நிலைப்பாடு, முதலமைச்சரின் நிலைப்பாடு என சகல விடயங்களும் ஆராயப்படும். எனவே இந்த விவகாரத்தில் தேசிய கொடி தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் முக்கியமான ஒன்றாக அமையக்கூடும்.
இது தொடர்பில் வடக்கு முதலமைச்சரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமது நிலைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
 அவர்களும் தேசிய கொடி தொடர்பில் மாற்று கருத்தினையோ கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதனால் இது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
 
இந்த விவகாரம் தொடர்பில் நான் தனிப்பட்ட நிலைப்பாடொன்றினை கொண்டுள்ளேன் அதனை பகிரங்கமாக கூறமுடியாதுள்ளது. அதனை கூறினால் நான் ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற போது பக்கசார்பானவன் என்று கருதப்படுவேன் என்றார்.

 

Published in உள்நாடு

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top