Items filtered by date: Monday, 13 November 2017

முன்னாள் ஜனாதிபதியின் ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத், நீல் பண்டார அப்புஹின்ன மற்றும் பியதாஸ குடாபாலகே ஆகிய மூவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று சட்டத்தரணிகளூடாக நீதிமன்றத்தில் ஆஜரான போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் போர்வையில் பொது சொத்துக்களை தவறாக கையாண்டதாக இவர்கள் மூவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Published in உள்நாடு
நிதி அமைச்சர் மங்கள  சமரவீரவின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது மக்களிடத்தில் பணம் பறிக்கும் முயற்சியாக உள்ளதே தவிர மக்களுக்கு சலுகைகளை வழங்குவதாக இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வில் சில்வா தெரிவித்தார்.
 
அதேநேரம் தற்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சியி ஆகியவற்றின் தனியாட்சியிலும் கூட்டு ஆட்சியானலும் இந்த நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் நேற்று இடம்பெற்ற ஜே.வீ.பி.யின் 28 ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவுநாள் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அழிவு பயணத்தை நீடிப்பதாகவே வரவு செலவு திட்டம் உள்ளது. வரி ஈட்ட மட்டுமே உதவும். மக்களிடத்தில் பணம் பறிக்கும் முறைமையே காணப்படுகின்றது.  சிறிது சலுகைகள் உள்ளது போல தெரிந்ததும் பயனில்லை.  விளையாட்டில் பாதனிகளுக்கு மாத்திரம் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மக்கள் தேவையற்ற விடயங்க‍ளுக்கே சலுலை. தேசத்தை கட்டியெழுப்பும் மெனிக் வரி நீக்கப்பட்டுள்ளது,
 
சிறிய தொகையை பாதிக்கும் வரியை நீக்கிவிடடு அனைவரும் வரி செலுத்தும் முறைமை ஒன்றை கொண்டுவந்துள்ளனர். காபன் வரி என்று புதிய வரியொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி செலவுகளும் அதிகரிப்பபடுதற்கு வழி சமைக்கப்பட்டுள்ளது. இனிக்பு குடிவகைளுக்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் இது மக்கள் மீது வரி செலுத்தி உயர்வதையே முதலாளிதுவம் செய்யும்.அரசாங்கம் என்று வந்துவிட்டாள் மக்கள் பணத்தை திருடுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இவர்களால் உற்பத்திகளை வலுவாக்கவோ தொழிற்சாலைகளை உருவாக்கவோ ஒருபோதும் முடியாது என்பதே உண்மை நிலைப்பாடு.
 
இன்று திருட்டை தேடவந்தவர்களால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சர் அரச வங்கிகளை மட்டுபடுத்த முயற்சித்த சூழ்ச்சிகளும் வெளியாகியுள்ளது. ஆட்சியாளர்கள் கூட்டு திருடர்களாக மாறியுள்ளதையே வங்கித் திருட்டுச் செயற்பாடுகள் தெரிவிகின்றது. இவர்கள் ஆயுத கொள்ளையர்களை பார்க்கிலும் மிக பயங்கரமானவர்கள் என்றார்.
Published in உள்நாடு

வேறும் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரைற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “கட்சியை ஐக்கியப்படுத்தும் நோக்கில் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கான கொள்கைகள் முன்னதாக பின்பற்றப்பட்டது.

தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கட்சி கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். வேறு அரசியல் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவற்றை ஆதரிக்கும் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க முடியாது“ என அவர் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு
"ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்களையும், சிரேஷ்ட தலைவர்களையும் களையெடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் சஜித்பிரேமதாஸவே அவரின் அடுத்த இலக்காகும். தனது மருமகனான ருவான் விஜேவர்தனவை உயர்பீடத்தில் அமர்த்துவதற்கான வியூகமே இது.
 
ரணிலுடன் முட்டிமோதத் தயார்! எனவே, கட்சியிலிருந்து வெளியேறப்போவதில்லை. அதற்குள் இருந்தவாறே போராடுவேன். நெருக்கடி வலுக்குமாயின் கட்சித் தலைவருடனும் மோதுவதற்கு தயாராகவே இருக்கின்றேன். பொதுவேட்பாளராக களமிறங்கவேண்டியநிலை ஏற்பட்டால் அதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்''
 
ரணிலுடன் முட்டிமோதத் தயார்!இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
ரணிலுடன் முட்டிமோதத் தயார்! சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் சுடர்ஒளிக்கு அவர் வழங்கிய செவ்வி  வருமாறு:
 
ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களே உங்களை பதவி நீக்குமாறு கடும் அழுத்தம் கொடுத்தனர். இதற்கு காரணம் என்ன?
அவ்வாறு இல்லை. கட்சியின் உயர்மட்டத்தால் நேரடியாக செய்யமுடியாமல்போனதை, பின்வரிசை எம்.பிக்கள் ஊடாக செய்விக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 
 
தேசிய அரசின் செயற்பாடுகள் தொடர்பில் உங்கள் பார்வை எவ்வாறுள்ளது?
 நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியும், சுதந்திரக்கட்சியும் காணாமல்போகும் நிலையிலுள்ளன. சுதந்திரக் கட்சி பலவீனமடைந்தால் மாற்று வழியாக மஹிந்தவின் கட்சி பலமடையும். ஆனால், ஐக்கிய  தேசியக் கட்சி பலவீனமானால் அதன் உறுப்பினர்களுக்கு மாற்றுவழி எதுவும் இல்லை. ஆகமொத்தத்தில் தேசிய அரசின் பயணமானது குழப்பமாகவே உள்ளது.
 
அப்படியாயின் தேசிய அரசு என்பது அர்த்தமற்றுப்போயுள்ளது என கருதுகின்றீர்களா?
ஆம். தேசிய அரசின் செயற்பாடுகள் பலனற்றவையாகவே காணப்படுகின்றன. சாதகமான முறையில் பயணிக்கக்கூடியதாக இருந்தும், அந்தவழியில் செல்வதற்கு முயற்சிக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரத்துடன் ஜனாதிபதி தனியான தீர்மானங்களை எடுத்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. அரசு தவறான பாதையில் பயணிக்கும்போது அதை   நல்வழிநோக்கு திசைதிருப்ப முயற்சிக்கும் ஒருவராக தற்போதைய ஜனாதிபதி செயற்படாமை எமது நாட்டின் துரதிர்ஷடமாகும்.
 
புதிய அரசமைப்பு இரண்டு வருடங்களுக்குள் கொண்டுவரப்படும் என தேசிய அரசின் முதலாவது நீதி அமைச்சராக பதவியேற்கும்போது நீங்கள் உறுதியளித்திருந்தீர்கள். ஆனால், அமைச்சுப் பதவியில் இருந்து தூக்கப்பட்டதன் பின்னர் உங்கள் நிலைப்பாடு மாறியுள்ளதே?
 
புதிய அரசமைப்பை உருவாக்குதல் அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதுள்ள அரசமைப்பில் திருத்தங்களை கொண்டுவருதல் என எமக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன.
 அரசமைப்புசபையை ஸ்தாபிக்கமுடியாது என்றும் அது சட்டத்துக்கு முரணõனது என்றும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். 1972 ஆம் ஆண்டில் சோல்பரி யாப்பில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியம் இல்லாததாலேயே அரசியலமைப்பு சபை நிறுவப்பட்டது. அப்போது சோல்பரி யாப்பை இரத்துச் செய்துவிட்டு 72 இல் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டது.
 
இதனை அடிப்படையாகக்கொண்டு 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன குடியரசு யாப்பை உருவாக்கினார். புதிய அரசமைப்பொன்று எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றாமலேயே அரசமைப்பு சபை உருவாக்கப்பட்டது. இதற்கு  நான் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. குழு உறுப்பினர் என்ற வகையில் பங்கேற்றும் இருந்தேன். 
 
ஆனால், அதனூடாக முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள்தான் தவறானவையாக இருக்கின்றன. அரசமைப்புச் சபையில் சுதந்திரமாக செயற்படுவதற்கு அதன் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப் படுவதில்லை. அதற்கு மாறாக பிரதமரின் ஆலோசகர்கள், அரச  சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டவர்கள், என பல தரப்புக்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். 
 
1978 ஆம் ஆண்டு குடியரசு யாப்பை உருவாக்குகின்ற போது இவ்வாறான அழுத்தங்கள் எவையும் இருக்கவில்லை.  78 ஆம் ஆண்டு யாப்பினை பேராசிரியர் ஏ.ஜே.வில்ஸன் தயாரித்துக் கொடுத்தார். அவர் தந்தை செல்வநாயகத்தின் மருமகன் என்பதையும் சகலரும் அறிவார்கள். அவர் உருவாக்கிய யாப்பினை ஜே.ஆர். ஜயவர்தன முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.
தற்போதைய அரசமைப்பு முயற்சிகளை எம்மால்  சுயாதீனமாக முன்னெடுக்க முடியவில்லை. சுமந்திரனும், ஜயம்பதியும் இணைந்து தயாரித்த அறிக்கையை சமர்ப்பித்து நடவடிக்கைகளை குழப்பிவிட்டனர். இவ்விருவரும் நல்லதொரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தாலும் எதிர்ப்புகள் வலுத்திருக்கும். காரணம், இவ்விருவரும் பிறப்பிலிருந்தே பெடரல்வாதிகளாவர்.
 
அரசமைப்புச் சபையிலிருந்த உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டிருந்தால் தேவையான விடயங்களை உள்வாங்கி நல்லதொரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கலாம்.தவறான முறையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தாலும் நல்லதொரு அரசமைப்புவந்தால்போதும் என்பதாலேயே பொறுமைகாத்திருந்தேன். ஆனால், தற்போது அரசமைப்புச் சபை குப்பைமேடாக மாறியுள்ளது. இதனால்தான் எதிர்க்கின்றேன். மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்துகுவிகின்றன.
 
ஜயம்பதி, சுமந்திரன் என நீங்கள் கூறினாலும் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டின்கீழேயே இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என விமலின் கட்சி குற்றஞ்சாட்டுகிறதே?
 
உண்மைதான். ஜயம்பதியும்இ சுமந்திரனும் பிரதமரின் ஆட்கள். அவர்கள்தான் முறைமுக சக்திகள். தனக்குள்ள அதிகாரங்களை பிரதமர் இவ்விருவருக்குமே வழங்கியுள்ளார். இதனால்தான் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு பிரதமர் பொறுப்புக்கூறவேண்டும்.
 
எதிர்ப்புகள் வலுத்தாலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை அரசு கைவிடவில்லை. தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது. அப்படியானால் புதிய அரசமைப்பு உருவாகும் என்றுதானே அர்த்தம்? 
 
ஒருபோதும் அது நடக்காது. அதற்கான சாத்தியப்பாடுகளும் இல்லை.
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடையாது. புதிய அரசமைப்புக்கு ஆதரவாக கைதூக்கினால் மக்கள் மத்தியில் செல்லமுடியாத நிலை ஏற்படும்.அத்துடன், மைத்திரி அணியிலுள்ள பலரும் மஹிந்த பக்கம் தாவுவதற்கு சந்தர்ப்பம்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, புதிய அரசமைப்பு என்பது சாத்தியப்படாத ஒரு விடயமாகும்.
 
அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ளீர்கள். ஆனாலும், ஐக்கிய தேசியக்கட்சியுடன்தான் உங்கள் அரசியல் பயணம் தொடர்கின்றது. கட்சிக்குள் அப்படி என்னதான் நடந்தது? நடக்கின்றது?
 
 என்னிடமிருந்து அமைச்சுப் பதவி திட்டமிட்ட அடிப்படையிலேயே பறிக்கப்பட்டது. அதற்காக நான் கட்சியைவிட்டு செல்லவில்லை.
ரணிலுடன் முட்டிமோதத் தயார்!கட்சிக்காகவும், கட்சியிலுள்ள பின்வரிசை உறுப்பினர்களின் உரிமைகளுக்காகவும் நான் போராடியிருந்தேன். அது மிகப்பெரிய தவறு என்பதை இன்று புரிந்துகொண்டுள்ளேன்.
 
ரணிலுடன் முட்டிமோத தயார்!கட்சிக்குள் பின்வரிசை உறுப்பினர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராக நான் போராடினேன். இதனால் தேர்தலில் என்னை தோற்கடிக்கவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது. அதற்காகவே சம்பிக்க ரணவக்க  ஐக்கிய தேசிய முன்னணிக்கு அழைக்கப்பட்டார். கொழும்பில் பௌத்த வாக்குகளை இரண்டாக உடைத்து என்னை வெளியேற்றுவதே இதன் உள்நோக்கமாகும்.
 
அத்துடன், ரோஸி சேனாநாயக்கவை முடக்கவேண்டிய தேவை கட்சித் தலைவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே ஹிருணிக்கா களமிறக்கப்பட்டார். ஐ.தே.கவின் மூத்த உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேராவை வெட்டவேண்டிய தேவை கட்சித் தலைவருக்கு ஏற்பட்டது. அந்த நோக்கில்தான் அமைச்சர் ராஜிதவின் மகனையும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் கம்பஹாவில் ஐ.தே.க.சார்பில் களமிறக்கினார்கள். அவர்களுடன் காவிந்த ஜயவர்தனவையும் போட்டியிடவைத்து கிறிஸ்தவ வாக்குகளை உடைத்தனர்.
 
ரணிலுடன் முட்டிமோதத் தயார்!அதன் பின்னர் என்னை இலக்கு வைத்தார்கள். சவால்களை நான் பொறுமையுடன் எதிர்கொண்டேன். ஐ.நா.வின் வெசாக் தின நிகழ்வை இலங்கையில் நடத்திக்காட்டி எனது தனியாள் பலத்தினைக் வெளிப்படுத்தினேன். இதனால் ஐ.தே.கவுக்கு அச்சம் ஏற்பட்டது. அடுத்ததாக பிணைமுறி விவகாரத்தை வைத்து ரவிக்கும் கடிவாளம் போட்டுவிட்டனர்.
 
தன் கட்சியில் பல தலைவர்கள் இருந்த போதிலும் ஜே.ஆர். ஜயவர்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது மருமகன் என்ற காரணத்தினால் முன்னிலை வழங்கினார். இதேபாணியில்தான் ரணில் தற்போது திட்டம்போடுகிறார்.
 
கட்சியில் எம்மைப் போன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரையில் பிரதமரின் மருமகனான இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு முட்டுக்கட்டை ஏற்படும் என்பதாலேயே சிரேஷ்ட உறுப்பினர்கள் களையெடுக்கப்படுகின்றனர். அடுத்த இலக்கு சஜித்தான்.
 
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தரலின் போது கூட்டுஎதிரணி சார்பில் நீங்கள் பொதுவேட்பாளராக களமிறக்கப்படவுள்ளீர்கள் என தகவல் வெளியாகியுள்ளது இது உண்மையா?
 
 நான் அவ்வாறான ஒரு எண்ணத்தில் இருக்கவில்லை. ஆனாலும், அவ்வாறானதொரு பேச்சு எழுந்தவுடன் சிறிகொத்தவுக்குள் இருப்பவர்களுக்கு அது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
 இதுவரையில் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாட்டு மக்களுக்காக முன்னிலையாகவேண்டிய நிலைமை வருகின்றபோது தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுப்போன். பொதுவேட்பாளராகவோ அல்லது தனிவேட்பாளராகவோ களமிறங்குவேன். காரணம், நான் மக்களுக்காக அரசியல் செய்பவன். மக்களே எனக்கு முக்கியம்.
 
புதிதாக பதவியேற்ற நீதி அமைச்சர், நீதிமன்ற கட்டமைப்புக்குள் பல புதுவித மாற்றங்களை ஏற்படுத்துவார் என சூளுரைத்துள்ளார். எனவே, உங்கள் பார்வையில் நீதி அமைச்சின் தற்கால நிலைப்பாடு எவ்வாறுள்ளது?
 
 நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட மூன்று சட்டமூலங்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த சட்டமூலங்கள் மூன்றையும் நானே தயாரித்தேன். ஆனால், சிறந்த மாற்றங்கள் வருமாயின் அதற்கு நான் ஒத்துழைப்பு வழங்குவேன். ஆனால், இன்றுவரையில் ஒரு சதமளவு மாற்றங்கள் கூட நீதி அமைச்சில் ஏற்படுத்தப்படவில்லை. 
 
தமிழ் மக்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது? 
இந்த அரசின், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சி வெகுவிரைவில் எந்த சாதகமும் இன்றி முடிந்துவிடும். அதனால் அரசின் நல்லிணக்க முயற்சிகளும் பயனளிக்கப்போவதில்லை.
ஜப்பான் மீது அமெரிக்கா மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியதை எவரும் மறக்க முடியாது. ஆனாலும், அந்த நாடு உரிய தருணத்தில் அமெரிக்காவுடன் பொருளாதார பாதுகாப்பு ஒப்பந்தத்தினை       கைச்சாத்திட்டு முன்னேற்றம் கண்டது.அடுத்தபடியாக தென்னாபிரிக்கா மிக மோசமான போராட்டத்தின் பின்னர் வெகுவாக நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து இன்று அபிவிருத்திப் பாதையில் பயணிக்கின்றது.  ரணிலுடன் முட்டிமோதத் தயார் ஆனால் எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தம் அவ்வாறானதல்ல.       சிவில் யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர்      சிங்கள, தமிழ் பிரச்சினை இருக்கவில்லை. சாதிப்பிரச்சினையால் யாழ்ப்பாணம்கூறுபட்டு கிடந்தது.
 
ஆரம்பத்தில் பிரபாகரன் ஒரு சிங்களவர்மீதும் கைவைக்கவில்லை. மாறாக, குலபேதத்துக்கு எதிராகவே போராடினார். அதனால்தான் துரையப்பா உள்ளிட்டவர்களை கொலைசெய்தார்.
இந்நிலையிலேயே, தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினை பெற்றுகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிரபாகரனுக்கு ஏற்பட்டது. அதனால்தான் அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்கள் அவரை தமிழ்த் தலைவராக மாற்றி, சிங்கள மக்களுக்கு எதிரானவராக உருவாக்கினர்.
 
அமிர்தலிங்கம் மாத்திரமல்ல, அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் யோகேஸ்வரனும்தான்.  அங்கிருந்துதான் இனவாதம் ஆரம்பித்தது. அதற்கு                 சான்றாக  கூறக்கூடிய காரணம் பிரபாகரனால் அதிகம் கொல்லப்பட்டவர்கள் தமிழ்த் தலைவர்களேயாவர். 
 
பிரச்சினைகளை தீர்ப்பதில்  தமிழ்த் தலைமைகளுக்கு ஆர்வம் இருக்கவில்லை. தமது வீட்டுப்பிரச்சினைகளை மாத்திரமே பார்த்தார்கள்.  அதற்கு ஜே.ஆர்.ஜயவர்தனவும் வலுச்சேர்த்தார். அதனால் அந்த தீ நாடு முழுவதும் எரிய ஆரம்பித்தது. அதனைதான்   1983 ஆம் ஆண்டு குழப்பம் என்கின்றோம். கொழும்பில் தீர்த்துக்கொள்ளக்கூடிய     சிறிய விடயங்களை நாடு முழுவதுமான பற்றி எரியவிட்டு ஜே.ஆர். ஜயவர்தனவும் வேடிக்கை பார்த்தார்.
 
இன்றும் கூட எமது நாட்டில் சமாதானம் உருவாவதை சர்வதேச சக்திகளும் புலம்பெயர் அமைப்புக்களும் விரும்பவில்லை. புலம் பெயர் அமைப்புக்கள் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடத்தில் கப்பம் சேகரித்து தமது பிழைப்பை நடத்துகின்றன.
 
எனவே, இலங்கையில் சமாதானம் தோன்றினால் புலம்பெயர் அமைப்புக்களுக்கு இலாபம் குன்றிவிடும். அண்மையில் சுமந்திரனை கொலை செய்ய  முற்பட்டதும் தமிழ் புலம்பெயர் அமைப்புகள்தான். தமிழ் மக்கள் பிரச்சினை தீரவேண்டும் என்று சுமந்திரன் கூறுவதாலேயே அவரை கொல்ல முற்படுகின்றார்கள். அரச புலனாய்வு பிரிவிடத்தில் அந்த தகவல் உள்ளது.
 
எவ்வாறாயினும் இங்குள்ள தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தருவார்கள் என மக்கள் நம்புவதும் அது முட்டாள்த்தனமாகும். இன்று வடக்கில் போன்று எந்த மாகாணத்திலும் போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றமையினை எவரும் தேடிப்பார்ப்பதில்லை. அது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு நானே அறிவுறுத்திள்ளேன். தமிழ்த் தலைவர்கள் எவருக்கும் அந்த அக்கறையில்லை. 
 
சர்வதேச நீதிமன்ற பொறிமுறை இலங்கையில் நிறுவப்படுவது அவசியம் என்று கருதுகின்றீர்களா?
 
சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பொன்று இலங்கையில் உருவாக்கப்படுமாயின், நாட்டில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாகவுள்ள இராணுவத்தினரின் குடும்பங்கள் வீதியிலிறங்கும்.
எனவே, இதற்கு தமிழ் மக்கள்தான் காரணம் என்ற எண்ணம் தோன்றி மீண்டும் ஒரு முரண்பாட்டு நிலைமை தோன்றும். 
 
அதனால் தவறிழைத்தவர்களை தண்டிக்க இலங்கையில் இருக்கும் சட்டதிட்டங்களே போதுமானவையாகும். அதனை கொண்டு நீதிமன்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தற்போதும் தவறிழைத்த பலர் சிறையில் உள்ளனர். அதனால் முதலில் நாட்டினை பாதுகாத்துக் கொண்டு பின்னர் எமது தமிழ், சிங்கள, முஸ்லிம் பிரச்சினை குறித்து சிந்திக்க வேண்டும்.  
 
அண்மையில் அமைச்சர் மனோ கணேசன் இந்த நாட்டில் சிங்களம் அல்லாதவர்களும் ஜனாதிபதியாக வேண்டும் என கூறியிருந்தார். மனோ கணேசனின் அரசியல் அறிவு குறித்து நான் அறியவில்லை. ஆனால் அவரிடத்தில் ஒரு கேள்வி உள்ளது. இந்த நாட்டில் சிங்களம் அல்லாத ஒருவருக்கு ஜனாதிபதியாவதற்கு இருக்கும் தடைதான் என்ன? 
உண்மையில் 2005 ஆம் ஆண்டில் லக்ஷ்மன் கதிர்காமர் இந்நாட்டின் பிரதமராவதற்கான வாய்ப்புக் கிட்டியது. ஆனால், அவர் சிங்களவருக்கு சார்பானவர் என்றே கருதப்பட்டது. 
 
ரணிலுடன் முட்டிமோதத் தயார்!அதனால், தமிழ் அரசியல் வாதிகள் முதலில்  முழு நாடு தொடர்பிலும் பேச வேண்டும். நாட்டுக்காக முன்வர வேண்டும். அதனை விடுத்து, தமது சமூகத்தினை மாத்திரம் கவனித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 
 
ரணிலுடன் முட்டிமோதத் தயார்! முஸ்லிம் தலைவர்கள் அனைவரும்  அவர்களின் சமூகத்தை பற்றி பேசுவதை மாத்திரமே கொள்கையாக கொண்டுள்ளனர். தமிழ் முஸ்லீம் தலைவர்கள் இனவாத  செயற்பாடுகளிலிருந்து மீண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு வந்தார்களா யின் மக்கள் மத்தியில் அவர்களுக்கு வரவேற்புக் கிட்டும். 
 
சிறு கட்சிகளால் முன்னிலையாகி எவரும் ஜனாதிபதியாக முடியாது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியில் வருகின்ற ஒருவர் ஜனாதிபதியாக முடியுமா? எனவே, தமிழ்த் தலைவர்கள் அது குறித்து சிந்திக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியில் சிறந்த தமிழர் ஒருவர் நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்கக்கூடியவராக இருப்பாராயின் அவருக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கத் தயாராகவே உள்ளோம். 
அந்த நிலைப்பாட்டினை அவர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
 
எமது நாட்டில் இதுவரையில் இருந்த     நீதியரசர்கள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரில் தமிழர்களே அதிகம் மக்கள் மனதை வென்றவர்களாக உள்ளனர்.     சிறந்த செயற்பாட்டாளர்களாக இருந்தால் நாட்டு மக்கள் இனவாத சிந்தனையை விடுத்து ஆதரவளிப்பார்கள். 
 
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முற்படும்போது அது குழப்பியடிக்கப்படுகின்றது. அன்று முதல் இன்றுவரை அவ்வாறுதான் நடைபெற்றுவருகின்றது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமில்லையா?
 
தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகள் எவை என்பதை எவரும் குறிப்பிடவில்லை. ஆனால், தீர்வைமட்டும் கேட்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்கூட என்ன பிரச்சினை என்று சொல்லவில்லை. விக்னேஸ்வரன் பெடரல்வேண்டும் என்றாவது கூறுகிறார்.
 
தனிநாட்டு கோரிக்கைக்கு சிறந்த உதாரணம் கெடலோனியாவாகும். இன்று அந்த நாட்டில் பிளவை கோரியவர்கள் சிறையில் உள்ளனர். எமது நாட்டில் பிளவை எவரும் விரும்பவில்லை. 
எனவே, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது பற்றியே சிந்திக்கவேண்டும். 13 இற்கு அப்பால் செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் பிரச்சினைகள்தான் வலுப்பெறும். நாட்டில் மாகாணசபைகள் முறையாக இயங்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக கொண்டவரப்பட்ட மாகாணசபைகள் முறையாக இயங்கவேண்டும். அதற்குரிய பொறிமுறையை வகுக்கவேண்டும்.
 
அத்துடன், வடக்குமாகாணத்தில் பிளவடைந்துள்ள சமூகங்களை ஒன்றிணைக்கவேண்டும். அதன்பின்னர் தமிழ் புத்திஜீவிகளின் உதவியுடன் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை நடக்கவேண்டும்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் வேறுபட்ட எண்ணப்பாடுகளை கருத்திற்கொண்டே செயற்படுகின்றனர். அவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. 
 
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவரும் கதைப்பதில்லை. அரசியல் தீர்வையே பிரதானமாக கருதுகின்றனர். ஒற்றையாட்சிக்குள்ளேயே சம்பந்தன் அதிகாரத்தை கோருகிறார். இதற்கு தெற்கில் எதிர்ப்பு இல்லை.  ஜயம்பதியும், சுமந்திரனும் தயாரித்த அறிக்கைதான் குழப்பத்துக்கு வித்திட்டுள்ளது.
 
 க.கமல்

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு ஏற்றவகையிலேயே முன்மொழிவுகள் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக மல்வான பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டு மக்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நன்கு அறிவர். யார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதிலும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமகால அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தியிருக்கின்றது“ என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன சுட்டிக்காட்டினார்.

எவருக்கும் எத்தகைய தடையையும் ஏற்படுத்த நாம் இடமளிக்கபோவதில்லை. கல்விக்குபோன்றே இளைஞர் சேவைகள் மேம்பாட்டுக்கான நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. ஆழமாக ஆராய்ந்தே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் வழமைபோன்றே வரவுசெலவுத்திட்டத்தை விமர்சிக்கின்றனர். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்கள் விமர்சனங்களையே மேற்கொள்கின்றனர். இவை காத்திரமான விமர்சனங்கள் அல்ல“ எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

நாங்கள் வரலாற்றின் குறுக்குப் பாதைகளில் இருக்கின்றோம். சுதந்திரம் மற்றும் சுபீட்சம் என்பவற்றின் ஒரு புதிய யுகத்திற்கு எங்கள் வேற்றுமையில் இணைந்தவர்களாக முன்னோக்கி நடக்கப் போகின்றோமா அல்லது இருண்ட ஒரு கடந்த யுகத்திற்கு மீளவும் செல்லப் போகின்றோமா? தெரிவு எங்களுடையதே நிதியமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறே தனது கன்னி பட்ஜட் உரையை நிறைவு செய்தார்.

தேசிய அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் (பசுமை மற்றும் நீல பட்ஜட்) கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சில ஏமாற்றங்கள் மற்றும் எதிர்பாராத அதிரடி அறிவிப்புகள், தூரநோக்கு மற்றும் சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை போன்ற விடயங்களை வலியுறுத்துவதாக அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.

இலங்கையின் 71ஆவது பட்ஜட்டாக இது அமைந்துள்ளது. கடந்த ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதோடு, அன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதன் பின்னர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதி வரை குழுநிலை விவாதங்கள் நடைபெற்று அன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கான மொத்த செலவீனம் 3,982 பில்லியன் ரூபாய்களாக காணப்படுகின்ற அதேவேளை, 2,175 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, வழமையான வருமானத்தைவிட செலவு அதிகமாக காணப்படும் பாதீடே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதிக நிதி ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் கடந்த 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜட்டின் அறிவிப்புகளும் வெளியாகியிருந்தன. யுத்தம் முடிந்து ஒரு தசாப்தத்தை நெருங்கும் இந்த இந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு பட்ஜட்டிலும் கூடுதலான நிதி ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அடுத்த வருடமும் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, கல்விக்காக 48, 660 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டம் பல்கலைக்கழகங்களில் வைத்தியபீடங்களை ஆரம்பித்தல்,7 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பப் பிரிவுகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பிலான பல முன்மொழிவுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அது மாத்திரமன்றி, சுகாதாரத் துறை சார்ந்தவிடயங்களில் மூலதனச் செலவு 44 மில்லியன்கள் எனவும், மீண்டு வரும் செலவீனங்கள் 134 மில்லியன்கள் எனவும் பட்ஜட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலும் பட்ஜட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தூரநோக்கு

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான பட்ஜட்டில் அடுத்து பல ஆண்டுகளுக்கான முன்மொழிவுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 2030ஆம் ஆண்டளவில் அடைய எதிர்பார்க்கும் 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அரசின் விசன் 25 திட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் பாதீட்டு அறிக்கை அமைந்திருந்தது. 2017 ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியினை சுமார் 4.5 சதவீதம் வரை வளர்ச்சியுறச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 2020 ஆம் ஆண்டளவில் 6 சதவீத உயர்வான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியொன்றிற்கு படிப்படியாக நகர்வதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தனது பட்ஜட் உரையில் குறிப்பிட்டிருந்தார். சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு 2025ஆம் ஆண்டளவில், இலங்கை உயர் நடுத்தர வருமான மட்டத்தினை அடைவதற்கு பொருளாதார வளர்ச்சியொன்றின் அவசியத்தையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இலங்கையின் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, தனிநபர் வருமானத்தை அதிகரித்தல், வேலைவாய்ப்பின்மையை குறைத்தல் உள்நாட்டு பிரஜைகளின் பிரச்சினையை தீர்ப்பதில் தூரநோக்குடன் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கான முன்மொழிவுகளும் பட்ஜட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க பட்ஜட்

வழமையாகவே பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்மாறான விமர்சனத்தையே முன்வைக்கும். காரணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப போதுமான நிதியை எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்
சாட்டு முன்வைக்கப்படும். எனினும், கடந்த வியாழக்கிழமை முன்வைக்கட்ட பட்ஜட்டானது பல வருடங்களின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் வரவேற்பை பெற்றதாக அமைந்திருந்து.

தமிழ் மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு, செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட விடயங்கள் அனைத்தும் புதிய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்
சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு சான்று பகரும் வகையில், நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்ததோடு, இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்காக மேலதிக நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு குறைந்த வட்டியில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாண மக்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு 3000 மில்லியன் ரூபாவையும், மலையக மக்களின் குடியிருப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வாக 5000 வீடுகளைக் கட்டுவதற்காக 2000 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜட் உரையில் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார நிலையம், யுத்தத்தினால் கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்திட்டங்கள், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை இந்த வருடத்திற்குள் செயற்படுத்துவதற்கு ஏதுவாக 1.4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளையும் நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார். இவைகள் செயல் வடிவம் பெறுமா என்பது வேறுகதை. எனினும், முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவைகளாகவே இருக்கின்றன.

நீலப் பொருளாதாரம்

இலங்கையின் கடல் எல்லையானது நாட்டின் நிலப்பரப்பினை விட 26 மடங்கு பெரியதாக காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன் உள்ளிட்ட கடல் சார் உற்பத்திகள் இலங்கையின் மிக முக்கியமான வருவாய் மார்க்கமாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் கடல்சார் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதோடு, அதனை பாதுகாப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கரிசனையை பிரதிபலிப்பதாகவும் அடுத்த வருடத்திற்கான பட்ஜட் காணப்படுகின்றது.

ஒருங்கிணைந்த கரையோர வலய முகாமைத்துவ பொறிமுறையொன்று அனைத்து அக்கறையுடையவர்களது பங்குபற்றுகையுடன் விருத்தி செய்யப்படவுள்ளதோடு, கரையோரங்கள் கடலரிப்பு மற்றும் மாசடைதல் போன்ற அபாயங்களுக்கு முகங்கொடுத்துள்ளமையால். கல்கிஸையிலிருந்து இரத்மலானை வரையிலான கடற்கரை மீள்நிரப்புகை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, சுற்றுலா மற்றும் மீன்பிடி துறைகளில் மேலும் முதலீடுகளை உருவாக்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் பட்ஜட் உரையில் நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

நீர்கொழும்பிலிருந்து மாரவில வரையிலான கரையோரத்தினை பாதுகாப்பது, அடுத்த வருடம் நாட்டில் அமைந்துள்ள 116 களப்புகளில் 10 இனை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளதாகவும் பட்ஜட்டில் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தினை சுற்றுச் சூழல் ரீதியாக நிலைபேறான அபிவிருத்தி உபாயத்தின் மீது கட்டியெழுப்புவதோடு, நீலப்பசுமைத் திட்டத்தின் கீழ் சுற்றாடலுக்கு உகந்த வாகன இறக்குமதி தொடர்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளையும் அமைச்சர் முன்வைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுற்றுச்சூழலில் அக்கறை

காலநிலை மாற்றம் தொடர்பிலான பரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள நிலையில் அதனை அமுல்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதலை தடுக்கும் வகையிலான சில அதிரடி அறிவிப்புகளை பட்ஜட் அறிவிப்பில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக நாட்டில் சுற்றுச் சூழல் மாசில் பாதியை தனக்கு சொந்தமாக்கியுள்ள காபனை முற்றாக கட்டுப்படுத்தும் வகையில் சில விடயங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் பஸ்களுக்கு வரி மானியம் வழங்குதல், 2500இஇவலுவிற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விதித்தல், அடிணூ ஆச்ஞ் இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தல்,பாவனையில் உள்ள எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலான
சுற்றாடலுக்கு பொருந்தும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான முன்மொழிவுகள். மின்சாரத்தில் இயங்கும் வாகன இறக்குமதிக்கு வரிச்சலுகை. குறிப்பாக, 2040ஆம் ஆண்டளவில் மசகு எண்ணெய்க்கு பதிலாக மாற்று வலுச்சக்திகளை கொண்ட வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான வேலைத்திட்டம் போன்றன சுற்றுச்சூழலில் அரசின் அக்கறையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன.

2025ஆம் ஆண்டளவில் மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகளும் மின்சார பஸ் வண்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதோடு, பயன்படுத்திய
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமது முச்சக்கர வண்டிகளை பங்களாதேஷ் போன்ற ஏற்றுமதி செய்ய ஊக்குவிப்புகளும் வழங்கப்படவுள்ளதாக ஒரு விசேட அறிவிப்பும் வெளியாகியிருந்தது. வாகனங்களுக்கான காபன் வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதிசொகுசு வாகனங்களுக்கு 25 இலட்சம் ஷரூபா வரி விதிக்கப்படவுள்ளதாகவும் வெளியான அறிவிப்புகள் காற்று மாசடைதலை தடுப்பதற்கான ஒரு உபாயமாகவும் இது பார்க்கப்படுகின்றது. .

நிவாரணம் எங்கே?

பட்ஜட் சமர்ப்பிக்கப்படப் போவதாக செய்திகள் வெளியானவுடன் சாதாரண பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? நிச்சயமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகுறைப்பு ஒரு அரசு அல்லது தனியார் ஊழியராக இருந்தால் சம்பள அதிகரிப்பு இது இயல்பானதே. எனினும், எதிர்பார்ப்பு நியாயமானதா என்றால் அதில் சிக்கலும் இல்லாமல் இல்லை. எனினும், சாதாரண குடிமகனை திருப்திப்படுத்தும் எந்தவொரு நிவாரண அறிவிப்புகளும் இந்த பட்ஜட்டில் வெளியாகவில்லை. பட்ஜட் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல்நாள் புதன்கிழமை (நவம்பர் 8) மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாகவும், சில பொருட்களின் இறக்குமதி வரிகள் குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. என்றாலும், பட்ஜட்டில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இது சாதாரண இலங்கை குடிமகனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த விடயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு பற்றி முழுமையாக ஆராயப்படவுள்ளதுஎன நிதியமைச்சர் தனது பட்ஜட் உரையில் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, 500 பேருக்கும் அதிகமான அரச ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களை மையப்படுத்தி பிள்ளைகளுக்கான பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தார். இதனைத் தாண்டி வேறு எந்தவொரு மகிழ்ச்சியான அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது அரச மற்றும் தனியார் ஊழியர்களிடையே பலத்த ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

எது எவ்வாறிருப்பினும் தூரநோக்கை அடிப்படையாகக் கொண்ட பட்ஜட் ஒன்றை அரசு சமர்ப்பித்துள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள பட்ஜட் என்பதால் தோற்கடிக்கப்படக்கூடிய அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி இவைகளை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல் காணப்படுகின்றன. இன்னும் 3 வருடங்களே தேசிய அரசாங்கம் பதவியில் இருக்கப்போகின்றது. அதன் பின்னர் எந்தக் கட்சி (கூட்டணி) ஆட்சியை கைப்பற்றப்போகின்றது என்பதை தற்போதைய அரசியல் சூழ்நிலையை வைத்து கணிப்பது மிகக்கடினம். இந்த சூழ்நிலையில் இந்த பட்ஜட்டின் முன்மொழிவுகள் எதிர்வரும் 3 ஆண்டுகளில் செயற்படுத்தக்கூடிய விடயங்களையாவது அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்பதே காலத்தின் தேவை.

ச.பார்தீபன்

“அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கோ அல்லது வேறு மாகாணத்திற்கோ கூடுதல் அதிகாரத்தை வழங்குவது அல்ல. நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே அதிகாரப் பகிர்வு“ என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் உள்ள 9 மாகாணங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். பெரும்பாண்மை மக்களிடம் உள்ள அதிகாரங்களை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்போவதாக நாட்டில் தவறான ஒரு கருத்து நிலவுகின்றது. இதில் எந்த உண்மையும் இல்லை.

“நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைத்தல் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் புதிய அரசியல் அமைப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்“ என அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Published in உள்நாடு

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டியது அத்தியாவசியமானது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று மூன்றாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பல தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்திருந்த அரச வருமானம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதிகரிக்க முடிந்துள்ளது. சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் மேலதிக நிதியைக் கொண்டிருந்த நாடு இன்று 700 கோடி ரூபாய் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது. இதற்கு ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.“

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கென ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்ய 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் புதிதாக ஏழு பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

எதிர்வரும் உள்ளுராட்சித் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல முன்னெ டுப்புக்களை ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. பெரும் பான்மைக்கட்சிகளின் கிராமியமட்டத்திலான பலத்தினை உரசிப்பார்க்கின்ற தேர்தலாக இந்த உள்ளூராட்சித்தேர்தலை கொள்ள முடியும்.

கடந்த காலங்களை விடவும் இம்முறை வித்தியாசமான முறையில் இத்தேர்தல் இருக்கப்போகின்றது. முன்னர் தனிப்பட்ட செல்வாக்கினை விடவும் கட்சியின் செல்வாக்கு மாத்திரமே ஒருவரின் வெற்றியில் தாக்கம் செலுத்திய பிரதானமான காரணியாகும். ஆனால், இம்முறை கட்சியின் செல்வாக்கினை விடவும் தனிப்பட்ட குடும்ப செல்வாக்கு, பரம்பரை செல்வாக்கு என்பன இத்தேர்தலில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாக அமையும்.

கடந்த முறை விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இம்முறை முற்றுமுழுதாக வித்தியாசமான முறையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  கிராமசேவையாளர் பிரிவுகளை ஒன்றிணைத்து ஒருவட்டாரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குறித்த வட்டாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கினை கொண்டவர்கள் எந்தக்கட்சியில் களம் இறங்கினாலும் அந்த வட்டாரத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகமிருக்கின்றது. இது வெறும் அனுமானம் மட்டுமே. இந்தக் கணிப்பு மாறவும் இடமுள்ளது.

வட்டாரத்தேர்தல் முறையில் கட்சித்தலைமைகளுக்கு அதிக அதிகாரமும் ஆதிக்கமும் இருக்கும். தாம் விரும்பிய வேட்பாளர்களை வெற்றிபெறவைக்கவும் அவ்வாறே தவிசாளர் பதவிகளை வழங்கவும் முடியும். தனது கட்சி சார்பான ஒருவரை நீக்கிவிட்டு தாம் பிரேரிக்கின்ற இன்னொருவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கவும் முடியும். எது எப்படியிருந்தபோதிலும் இந்த தேர்தல் முறையின் மூலம் குறித்த கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளரே களமிறக்கப்படுவார். அவரின் ஆளுமையும் செல்வாக்கும் அந்தத்தேர்தலில் பெரிய பாதிப்பினை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தநிலையில் கல்முனை மாநகர சபை தொடர்பிலான அவதானத்தை செலுத்தினால், கல்முனை மாநகர சபையானது இதுவரைக்குமான எல்லா உள்ளூராட்சி தேர்தல்களிலும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் கைகளிலேயே இருந்துவந்துள்ளது. வரலாற்றில் 1990களின் பின்னர் கல்முனை தொகுதியாகட்டும் அல்லது கல்முனை மாநகர சபையாகட்டும் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்துவந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். ஆனால், அதனை தக்கவைப்பதற்கு வட்டாரங்கள் தோறும் அறிவும் ஆளுமையும் தகுதியும் மிக்க வேட்பாளர்களையும் தாண்டி மேற்சொன்ன தகைமைகளுடன் சிறந்த குடும்பப் பின்னணி மற்றும் அரசியல் பின்னணி போன்றவற்றை கொண்டவர்களை இனங்காண வேண்டும்.

சாய்ந்தமருந்துக்கான தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையின் பின்னணியிலிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான மறைவான சக்திகள் தமது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள இந்த தேர்தலினை பயன்படுத்த முயற்சிகளை பரவலாக மேற்கொள்ளும். ஆனால், சாய்ந்தமருது மக்கள் மிகத்தெளிவான முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை நினைவில் வைத்தே செயற்படவேண்டும். இப்போதுள்ள அரசியல் போக்கினை ஆராய்கின்றபோது சாய்ந்தமருது மக்கள் அமைச்சர் ஹக்கீமின் கரத்தை பலப்படுத்தும் திடமான எண்ணத்தில் இருப்பது தெளிவாகின்றது.

அதற்கான சான்றாக கடந்தவாரங்களில் தனியான உள்ளூராட்சிசபை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த பலர், இப்போது அமைச்சர் ஹக்கீமிடம் வந்து தேர்தலில் களமிறங்க வாய்ப்புக்கேட்டு வருவதை சுட்டமுடியும். இருந்தும், இம்முறை சாய்ந்தமருதில் தெரிவுசெய்யப்படுகின்ற வேட்பாளர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுக்கமான நடைமுறையினை மேற்கொள்வதன் மூலம் தகுதியான, தளம்பலற்றவர்களை இனங்காணமுடியும்.

இருந்தும், கல்முனைப்பகுதியில் களமிறக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியும். அந்தவகையில் கடந்த தேர்தலில் கல்முனைப்பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மாநகர சபைக்காக தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றவர்களோடு புதிதாக செல்வாக்குள்ள குடும்பப்பின்னணி கொண்டவர்களையும் களமிறக்க வேண்டும். அவ்வாறு களமிறக்கப்படுகின்றவர் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமானவராக இருப்பாரேயானால் கடந்த காலங்களில் சிராஸ்மீரா சாகிப் மற்றும் ஜெமீல் போன்ற பதவிக்காக செயலாற்றுகின்றவர்களை போன்று அல்லாமல் உண்மையான சமூகப்பற்றுள்ளவர்களை உருவாக்கமுடியும்.

அந்தவகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளராக இருக்கின்ற ரஹ்மத் மன்சூர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கவனத்தில் கொள்ள வேண்டும். கௌரவமான அரசியல் பின்னணியினையும், செல்வாக்குள்ள சிறந்த குடும்பப் பின்னணியையும் கொண்ட ரஹ்மத் மன்சூர் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்.ஆங்கிலேயர் காலத்தில் கேட் முதலியார் என்று அழைக்கப்பட்ட
எம்.எஸ்.காரியப்பரின் பேரன்தான் இந்த ரஹ்மத் மன்சூர். முதன்முதலில் முஸ்லிம் கட்சியொன்றினை பதித்தவர் எம்.எஸ்.காரியப்பர்தான் என்கின்ற வரலாறு நிறையப்பேருக்கு தெரியாத அரசியல் வரலாறாகும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டவர். எம்.எஸ்.காரியப்பர் எனும் பெரும் அரசியல் தலைமையின் மருமகன் தான் அப்துல் ரசாக் மன்சூர். அந்த நாட்களில் பிரபலமான சட்டத்தரணி ஜி.ஜி.பொன்னம்பலத்தின் உதவிச் சட்டத்தரணியாக பணியாற்றியவர்.

மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் 1964ஆம் ஆண்டு கிராமிய சபைத் தேர்தலில் போட்டியிட்டார், பின்னர் 1970ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்காவின் தலைமையிலான ஐ.தே.கவின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 569 வாக்குகளினால் தனது நாடாளுமன்றக்கதிரையை இழந்தார். இதன்பின்னர் 1977 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், தொடர்ந்தும், சுமார் 1994 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.இதில் இவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக பதவிவகித்த காலம் அம்பாறை மாவட்டத்திற்கான பொற்காலமாகும்.

தமிழ் முஸ்லிம் உறவினை பலப்படுத்துவதிலும் இன,மத பேதங்களுக்கப்பால் அபிவிருத்திப்பணிகளில் முன்னின்று செயலாற்றுவதிலும் மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் இதயசுத்தியுடன் இயங்கியவர். 2000ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரப்புடன் இணைந்து கட்சியை நெறிப்படுத்துவதில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். எனினும், தலைவர் அஸ்ரப்பின் அகால மரணத்தின் பின்னர் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமின் கரத்தை பலப்படுத்துவத்தில் தனது மரணம் வரைக்கும் இணைந்தே செயலாற்றினார்.

ஏ.ஆர்.மன்சூரைக் கௌரவிக்கும் முகமாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குவைட் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியினை அவருக்கு வழங்கிக் கௌரவித்தார். இவர் அங்கு பதவிவகித்த காலத்தில் 900 மில்லியன் நிதியில் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் தனியான மருத்துவபீடத்தை நிறுவினார். இந்த நிதியானது ஏ.ஆர்.மன்சூரின் வேண்டுகோளின்படி குவைத் அரசினால் வழங்கப்பட்டது. அத்தோடு, இவரது அரசியல் காலத்தில் சுமார் 9000 வேலைவாய்ப்புக்கள் அம்பாறை மாவட்டத்தில் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரைக்குமான ரயில் சேவையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்மொழிந்தவர் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் ஆவார். அதற்கான உத்தேசத் திட்டவரைபினை வரைந்து ஈரான் அரசிடம் கையளித்து அங்கீகாரம் பெற்றவர். ஈரான் அரசும் இந்த வேலைத் திட்டத்தை செய்துதருவதற்கான ஒப்புதலை வழங்கியிருந்தது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான முன்னெடுப்புக்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொள்வாராயின் இந்தவிடயம் நடைமுறை சாத்தியமாகலாம். இந்தவிடயம் தொடர்பில் அமைச்சர் ஏ.ஆர் .மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூரிடம் உள்ள ஆவணங்கள் இதற்காக உதவலாம்.

இவ்வாறான பலமான அரசியல் பின்னணியைக் கொண்ட ரஹ்மத் மன்சூர் போன்ற கல்வியியலாளர்கள் இனங்காணப்பட்ட வேண்டும். றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவருக்கு மூன்று மொழிகளிலும் செயலாற்றும் திறனும், லண்டனில் தனது பட்டப்படிப்பை முகாமைத்துவத் துறையில் பூர்த்திசெய்தவர். தற்போது வகிக்கின்ற அமைச்சரின் இணைப்பு செயலாளரின் பதவியின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு பல்வேறு அபிவிருத்திப்பணிகளை செய்து வருவதோடு, அமைச்சுக்கூடாக நடைபெறுகின்ற அபிவிருத்திப்பணிகளை துரிதமாக செயற்படுத்துவதற்கான தூண்டியாக இவர் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.

அமைச்சுக்கு தமது தேவைகளுக்காக செல்கின்ற நாட்டில் பலபாகங்களையும் சேர்ந்தவர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதோடு, அவர்களுக்கான திருப்தியான மனிதாபிமான உதவிகளையும் செய்து வருவதாக கல்முனைப்பிரதேசத்து மக்கள் ரஹ்மத் மன்சூர் தொடர்பில் பேசுகின்றனர்.காலாதி காலமாக கல்முனை நகரசபையை தன்வசம் வைத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் வியூகங்களை வகுக்கவேண்டும். வங்குரோத்து மாற்று அரசியல் சக்திகளின் சதிகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் உபாயம் பற்றி சிந்திக்க வேண்டும். எப்படியும் மாற்று அரசியல் சக்திகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையாது. அதற்காக அவர்களினால் ஏற்படுத்தப்படுகின்ற தடைகள் தொடர்பில் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. கல்முனை மாநகர சபையை தன்வசப்படுத்தும் நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருப்பது மிகத்தெளிவாக தெரிகின்ற உண்மையாகும்.அதனை இலகுபடுத்த ரஹ்மத் மன்சூர் போன்ற ஆளுமைகளை வட்டாரங்கள் தோறும் களமிறக்குவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

தனது தந்தையின் வழியில், தான் வாழுகின்ற பிரதேசத்திற்கு சுபீட்சமான அபிவிருத்தியையும்,இனரீதியான ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பத்தை ரஹ்மத் மன்சூர் போன்றவர்களுக்கு வழங்குவது எதிர்கால கல்முனை அரசியலின் தளத்தை புதிய தளத்திற்கு கொண்டு செல்லும்என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படும் எனும் பரப்புரைகள் உலõவுவருகின்ற நிலையில் ஒருவேளை உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுமாயின் ரஹ்மத் மன்சூரையும் ஒரு வேட்பாளராக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்முனை மாநகர சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கேந்திர நிலையமாகும் அவ்வாறே முஸ்லிம்களினதும் கேந்திர நிலையமாகவும் அது திகழ்கின்றது. இந்த கேந்திர நிலையத்தை சீரழித்து தமிழ், முஸ்லிம் உறவுகளைத் துண்டாட முனைகின்றவர்கள் தொடர்பில் பிரதேசத்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். கல்முனை மாநகர சபை மு.கா விடமிருந்து கைநழுவிப்போகும் எனும் கனவில் மிதக்கின்ற பச்சோந்திகளுக்கு மக்கள் நல்லதொரு பாடத்தை எதிர்வரும் காலங்களில் புகட்டுவார்கள் என நம்பலாம்.

 

மதியுகன்

பெற்றோல் தட்டுப்பாட்டால் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு காரணமான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு தனது அறிக்கையை தயாரித்துள்ளது.

கண்டியில் செய்தியாளர் மத்தியில் உபகுழு அங்கத்தவர்களுக்கான தலைவரும் விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம இது தொடர்பில் குறிப்பிடுகையில், “இன்னும் இரண்டொரு தினங்களில் பெற்றோலுக்கான நெருக்கடி எதுவுமில்லை. டீசலுக்கான நெருக்கடி இருக்கவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி நிலைக்கு காரணம் என்ன என்பதை கண்டறியவே நாம் முயற்சிக்கின்றோம்.

இதனை கண்டறிந்து நாளை ஜனாதிபதியிடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளோம்.“ எனக் குறிப்பிட்டார்.

“உண்மையான விடயங்களை மறைக்கமுடியாது. இந்த அறிக்கை பெரும்பாலும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பூரணப்படுத்தி வெளியிடும் முன்னர் இதுதொடர்பில் குறிப்பிடுவது முறையல்ல நெருக்கடிக்கான காரணங்கள் அனைத்தையும் கண்டறிந்துள்ளோம். இதனை ஆழமாக ஆராய்ந்து அறிக்கையினை தயாரிந்துள்ளோம்.“ எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Published in உள்நாடு
Page 1 of 4

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top