ஐ.தே.கட்சியெல்லாம் ஒரு “மேட்டரே” கிடையாது

ஐ.தே.கட்சியெல்லாம் ஒரு “மேட்டரே” கிடையாது

"நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணியினரும், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு பொதுஜன பெரமுனவும் இணைந்தால் மட்டுமே நாட்டை பலமிக்க ஒரு சக்தியாக மாற்றியமைக்க முடியும். இத்தருணத்துக்காகத்தான் நாமும் காத்துக்கொண்டிருக்கிறோம். எனவே, இது மட்டும் நடக்குமாக இருந்தால் நான் எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன்'' என்று கூட்டு எதிரணியின் சுதந்திரக் கட்சி உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இந்த விவகாரம் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரம் குறித்து "சுடர் ஒளி' வார இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி: உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிலிருந்து தொடர்ச்சியாக அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பக்கம் தாவிக்கொண்டிருக்கிறார்களே. என்ன காரணம்?

பதில்:  வெசாக் காலங்களில்தான் வெசாக் பந்தல்களை விற்பனை செய்யமுடியும். அதைவிடுத்து, அவற்றை சாதாரண தினங்களில் சந்தைக்குப் போட்டால் விற்பனையாகுமா? இல்லை. இந்த நடைமுறைதான் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. விலகிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துடன்தான் விலகினார்கள். இது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒன்றும் புதுமையான விடயமல்ல. எனவே, நாமும் இதனை அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. மேலும், எதற்காக விலகினார்கள் என்ற உண்மையான காரணத்தையும் அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

கேள்வி: இவர்களது பல்டி பொது எதிரணிக்கு இத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?

பதில்:  (சிரிக்கிறார்) உண்மையில், இத்தேர்தலைப் பொறுத்தவரை அரசு பக்கம் தாவியோர் அல்லது எமது அணிக்கு வந்தோர் என எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக, அரசின் கடந்த 2 வருட செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டே மக்கள் வாக்களிப்பார்கள்.

கேள்வி: இந்த இரண்டு வருடங்களில் அரசு முழுமையாக எதனைத்தான் செய்துள்ளது என நீங்களே கூறுங்கள் பார்க்கலாம்?

பதில்: அ: ஒன்றுமில்லை. மக்களும் இதனை நன்கு உணர்ந்துள்ளார்கள். அந்தவகையில், அரசின் செயற்பாடுகள் சரி அல்லது அவற்றை ஏற்றுக் கொள்ளமுடியுமெனில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பிக்கு வாக்களிப்பார்கள். அரசின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாதெனில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களிப்பார்கள். மாறாக, எமது அணியிலிருந்து வெளியேறியோரால் எல்லாம் தேர்தல் முடிவுகளைக் கணிப்பிட வாய்ப்பே இல்லை.

கேள்வி: சரி, இன்னும் சிலரும் உங்கள் அணியிலிருந்து வெளியேறி அரசுக்கு ஆதரவளிக்கவுள்ளார்கள் என்று கூறப்படுகிறதே. இது உண்மையா?

பதில்:  தெரியாது. அப்படியான கதையொன்றும் வந்து கொண்டுதான் இருக்கிறது. நடக்கும்போது பார்த்துக்கொள்வோமே.

கேள்வி: கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரை தாமரை மொட்டின் நிலைமை எவ்வாறிருக்கிறது?

பதில்:  நாம் எதிர்பார்த்ததைவிடவும் நன்றாக இருக்கிறது. இதன் பிரதிபலிப்பை தேர்தலின்போது அனைவரும் உணர்வார்கள். கண்டியில் வெற்றி உறுதி. (சிரிக்கிறார்)

கேள்வி: கண்டி மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான கோட்டையாகும். இந்நிலையில், இக்கட்சி உங்களுக்கு சவாலாக இருக்குமா?

பதில்:  இக்கட்சியெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மக்கள் எமது பக்கம் இருக்கும்போது நாம் எவருக்கும் அஞ்சவேண்டிய அவசியமே கிடையாது. ஆரம்பத்தில் கூறியதைப்போல ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பிலும் அதன் கூட்டு அரசின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் கண்டி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நன்கு உணர்ந்துகொண்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது கூறிய எந்தவொரு உறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. சரி, இவற்றை நிறைவேற்றத் தான் அரசுக்கு முடியவில்லை என்று பார்த்தால், பொருட்களின் விலைகளை உயர்த்தி, நாட்டின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்று, உலகமே வியக்கும் அளவுக்கு ஊழல் செய்து, வரிவிதிப்புகளை அதிகரித்து என மேலும் மேலும் மக்களின் முதுகில் சுமையேற்றும் செயற்பாட்டைத்தான் இவர்கள் கடந்த காலங்களில் செய்துள்ளார்கள். இவை எல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்? எனவே, கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல, வேறு எந்த மாவட்டமாக இருந்தாலும் வெற்றிபெறுவது எல்லாம் எமக்குப் பெரிய சவாலே கிடையாது.

கேள்வி: அரசு பக்கம் இத்தனை வருடங்களாக பிரதியமைச்சராக இருந்த நிமல் லன்சா தற்போது அரசிலிருந்து வெளியேறி உங்கள் அணியுடன் இணைந்து கொண்டுள்ளார். இதேபோல், அரசிலுள்ள இன்னும் சிலர் உங்கள் பக்கம் வருவார்கள் என்று கூறப்படுகிறதே...

பதில்:  அவர் வருவார் இவர் வருவார், என்றெல்லாம் பொய்யாக எமக்கு கருத்துகளை வெளியிட்டுக்கொண்டிருக்க முடியாது. யார், யார் வருவார்கள் என்பதை வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை எமக்குக்கூட எதனையும் உறுதியாகக் கூறமுடியாது.

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை எதிரணியினர் பயன்படுத்த முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது புதிய தடையை விதித்துள்ளது. இதுதொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:  ஆம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியை முன்னாள் ஜனாதிபதி இன்னும் இராஜிநாமா செய்யாத காரணத்தாலும், சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதியாக இருந்த காரணத்தாலும் அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளதை நாமும் அறிவோம். இதையெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை.

கேள்வி: உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் மைத்திரி மஹிந்த அணியினர் இணைந்து கொள்வார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:  நிச்சயமாக. அப்படியொன்று நடக்குமாக இருந்தால், நான் முழுமையான ஆதரவை இவர்களுக்கு வழங்குவேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஜே.வி.பியுடனும் ஒருங்கிணைந்து செல்லமுடியுமாக இருந்தால், ஏன் எம்முடன் செல்லமுடியாது என்பதுதான் எமது நீண்டகாலக் கேள்வியாக இருக்கிறது. அத்தோடு, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அணியினரும் மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவும் இணைந்தால் மட்டுமே நாட்டை பலமிக்க ஒரு சக்தியாக மாற்றியமைக்க முடியும். இத்தருணத்துக்காகத்தான் நாமும் காத்துக்கொண்டிருக்கிறோம். எனவே, இது மட்டும் நடக்குமாக இருந்தால், நான்தான் முதலாவது நபராக இவ்விரு அணியினருக்கும் ஒத்துழைப்பை வழங்குவேன். அத்தோடு, இதற்காக எதனை வேண்டுமானாலும் மேற்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்.

கேள்வி: பொதுஜன பெரமுனவுக்கு சார்பாக தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி னருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக தற்போது சாட்சிகள் சேகரிக்கப்படுவதாகவும் சுதந்திரக் கட்சியினரால் கூறப்பட்டுள்ளது. இவற்றுக்குத் தயாராக உள்ளீர்களா?

பதில்:  இது வழமையாக அவர்கள் கூறும் ஒன்றுதானே. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். (சிரிக்கிறார்)

கேள்வி: ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக சுதந்திரக் கட்சியிலிருந்து விலகும் நிலைமை அல்லது விலக்கப்படும் நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: அதுதான் கூறினேனே! அதை நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதே அதுவிடயம் குறித்து கதைப்பது தக்கதருணம் அல்ல. ஆனால், நாமும் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம்.

கேள்வி: சரி, இறுதியாக பொதுஜன பெரமுன பக்கமிருந்து அரசு பக்கம் செல்லவுள்ளோர் பெயர்ப்பட்டியலில் உங்களின் பெயரும் உள்ளதே. அப்படியென்றால் உங்களுக்கும் அமைச்சுப் பதவியேதும் பேரம் பேசப்பட்டுள்ளதா?

பதில்: இதனை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். என்மீது சேறு பூசவேண்டும் என்று வேண்டுமென்றே பரப்பப்பட்ட கட்டுக்கதையே இது. அமைச்சுப் பதவியல்ல, அரசின் தலைவர் பதவியைக் கொடுத்தால் கூட, நான் இந்த நல்லாட்சியுடன் இணைந்துகொள்ள மாட்டேன். இந்த அரசே வேண்டாம் என்றுதான் இவ்வளவு காலமாக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எதற்காக அரசு பக்கம் நாம் தாவவேண்டும். அதையும் மீறி சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக இருந்தால், மைத்திரி மஹிந்த அணி இணையும்போது மட்டுமே அது சாத்தியமாகும்.

அ.அருண்பிரசாந்த்

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top