ஆயுதக் குழுக்களில் பெண்கள்; அரசியல் களத்தில் ஏன் குதிக்கவில்லை?

ஆயுதக் குழுக்களில் பெண்கள்; அரசியல் களத்தில் ஏன் குதிக்கவில்லை?

ஆயுதப் போராட்டத்தில் பெண்களின் ஆளணிக்காகத் தமிழ்த் தேசியம் பேசி பெண்களின் சம உரிமையையும், விடுதலையையும் வலியுறுத்தி அரசியல் செய்தவர்கள் இன்று 25 சதவீத கோட்டாவில் பெண்களுக்கு அரசியற் கட்சிகளில் வாய்ப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். "ஆயுதக் குழுக்களில் இருந்த டக்ளஸ், சிவாஜிலிங்கம், சுரேஷ் போன்றவர்களினால் அரசியல் செய்ய முடியுமாயின், ஆயுதக் குழுக்களில் இருந்த பெண்களால் ஏன் அரசியல் செய்ய முடியாது' என்று பெண்கள் உரிமை செயற்பாட்டாளரும், மனித உரிமை ஆர்வலருமான நளினி ரட்ணராஜா கேள்வி எழுப்பினார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத கட்டாய ஒதுக்கீட்டு சட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், பெண்களுக்கு பட்டியலில் இடம் வழங்குவது தொடக்கம் கட்சி அங்கத்துவம் வழங்குவது வரை அரசியற் கட்சிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும்  25 சதவீத அரசியல் பிரதிநிதித்துவத்தினைப் பெற கட்சிகளிடம் கையேந்தும் அவல நிலையில் பெண் போராளிகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆயுதக் குழுக்களில் பெண்கள் சரிக்கு சமமாக ஆண்களுடன் களம் கண்ட அனுபவத்தைக் கொண்ட தமிழர்கள் குறிப்பாக, வடக்கு, கிழக்கில் சட்டம் போட்டுத்தான் பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்க வேண்டுமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

பெண்களின்அரசியற் பிரதிநிதித்துவத்திற்கான இந்த 25 சதவீத ஒதுக்கீடு குறித்து அவர் வழங்கிய நேர்காணல் இது.

கேள்வி: உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீதம் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்ட ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: 1931ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாக்குரிமை கிடைத்தது. ஆனால், சுவிற்சர்லாந்தில் 1972ஆம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அவ்வாறான நிலையில் இலங்கை யர்களான எமக்கு இது பெருமைப்படக் கூடிய விடயமாகும். ஆனால், அதன் பிறகு பெண்களாகிய நாங்கள்  85 ஆண்டுகள் பயணப்பட்டு வந்த பின்பு 25 வீதத்தினை இரந்து கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனாலும், இந்த சட்டத்தினை பெண்களுக்கு சாதகமான விடயமாகவே பார்க்க வேண்டும். முழு இலங்கையயை எடுத்துப் பார்த்தால் பெண்களின் பிரதிநிதித்துவம் கிராம மட்டத்தில் பிரதேச சபை மட்டத்தில், மாகாண சபை மட்டத்தில், நாடாளுமன்ற மட்டத்தில் அதிகரிக்கப்படுவது அவசியம். அதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த கோட்டா அதாவது, Affirmative action தொடர்ந்து இருக்கப் போவதில்லை. இந்த கோட்டா முறையைப் பயன்படுத்தி சரியாக பெண்கள் உள்வாங்கப்பட்டு சரியான அரசியல் செய்தார்களானால் இந்த முறை தொடர்ந்து அமுலில் இருக்கப் போவதில்லை. இருபது முப்பது ஆண்டுகளில் இந்த ஒதுக்கீடு என்பது தேவையற்ற தாகிவிடும். எனினும் தற்போது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான முதல் படி என்றே நான் இந்த 25 சதவீத ஒதுக்கீட்டு சட்டத்தினை கருதுகின்றேன்.

கேள்வி: மனித உரிமைகள் அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் பெண்கள் அரசியற் பிரதிநிதித்துவத்தினை  33 சதவீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. ஆனால், இப்பொழுது 25 வீதம் தான் கிடைத்துள்ளது. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இது உலகளாவிய ரீதியில் முன்வைக்கப்பட்ட ஒரு சதவீதமாகும். அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பட்சத்தில் ஆகக் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டினை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. புதிய அரசின் "நூறு நாள் திட்டத்தில்' ஜனாதிபதி கூறியதன் படி இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆகக் குறைந்தது 33இல் எங்களுக்கு
25 வீதம் கிடைத்ததும் ஓரளவு வெற்றிதான். ஆனால், இப்பொழுது எங்களுடைய கோரிக்கை என்னவெனில், 25 சதவீதத்தினை நாடாளுமன்றத்திலும் கட்டாய ஒதுக்கீடாக மாற்ற வேண்டும் என்பதாகும். ஏனெனில், சட்டவாக்கம் மற்றும் கொள்கை வகுப்பு போன்றவற்றில் முக்கியமான ஓர் இடத்தினை நாடாளுமன்றம் வகிக்கின்றது. அதனால், அங்கு கட்டாயம் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். வரவு, செலவுத் திட்டம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் போன்ற செயற்பாடுகளில் பெண்கள் பங்களிப்பு இருந்தால் வித்தியாசமான கோணத்தில் இந்த அரசியல் யாப்பு திருத்தம் கூட நகரும். கண்டிய சட்டம், தேசவழமை சட்டம், முஸ்லிம் திருமண விவõகரத்து சட்டம் போன்ற சட்டங்களை எல்லாம் இந்த அரசியல் யாப்பு திருத்தங்கள் ஊடாக எப்படி பெண்களைப் பாதிக்கப் போகின்றன அல்லது நன்மை செய்யப் போகின்றன என்பனவற்றை அலசி ஆராய்ந்துவிடயங்களை சேர்க்கும் அளவுக்கு பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லை. அரசியலமைப்பு திருத்தத்தில் பெண்களுக்கான காணி உரிமைகள் என்று வரும் போது, ஒரு பிடிமானம் இல்லாத நிலைதான் இடைக்கால அறிக்கையில் இருக்கின்றது. இதைப் பற்றி பல கலந்துரையாடல்கள் நடைபெற்று ள்ளன. கட்சிகள் இதனை மாற்றுவோம் என்று கூறியுள்ளன. ஆனால், எப்பொழுது மாற்றுவார்கள். எப்படி மாற்றுவார்கள் என்பதற்கான உறுதிப்பாடு கட்டாயம் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தற்போதைய கவலை. ஏனெனில், அதிகாரப் பரவலாக்கல் பற்றி நாட்டில் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இலங்கையின் வழக்காற்றுச் சட்டத்தில் காணி உரிமை பெண்களுக்கு வழங்கப்படவில்லை. முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்திலும் வீட்டு ஆண் பிள்ளைக்கோ அல்லது மற்றைய ஆண் பிள்ளைக்கோ தான் சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் உரிமையாகின்றன. அது போன்று தேச வழமை சட்டத்திலும் காணி உரிமை என்பது பெண்களுக்கு அறவே இல்லை. திருமணம் முடிக்க முதல் தான் சுயமாக சம்பாதித்த அசையாச் சொத்துக்களை கணவரின் எழுத்து மூல ஒப்புதல் இன்றி விற்கவோ அடகு வைக்கவோ பிள்ளைகளுக்கு நன்கொடையாகக் கொடுக்கவோ முடியாது. பாரியளவில் பெண்களை பாரபட்சப்படுத்தும் பெண்களை மதிக்காத இழிவுபடுத்தும் ஒருசட்டமாக இது இருக்கின்றது. அதுமட்டுமன்றி, பெண்களே வீடுகளில் அகதிகளாக இருக்கும் நாட்டில் பெண்களுக்கு அதிகாரத்தினைப் பகிர்ந்து கொடுக்காமல் நாட்டில் உள்ளபெரும்பான்மை அரசிடம் எங்களுக்கு அதிகாரத்தினைப் பிரித்து தாருங்கள் என்று எங்கள் அரசியல் தலைமைகள் கோரிக்கை விடுப்பது நகைப்புக்குரிய விடயமாகும். நடைமுறையில் பெண்களுக்கு வீட்டில் அதிகாரம் சமமாக வழங்கப்படவில் லை. அதிகாரம் பிரிக்கப்படவில்லை. பெண்களாகிய நாங்கள் இலங்கையில் கிட்டத் தட்ட 70 முதல் 75 சதவீதமானவர்கள் அகதிகளாக எங்கள் சொந்த வீடுகளில் இருக்கின்றோம் என்று நான் எப்பொழுதும் கூறிவரும் விடயமாகும். இந்த நிலைமை மாறுவதற்கு பெண்களின்  அரசியற்பிரதிநிதித்துவம் மாகாண சபை மட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகரிக்கப்படல் வேண்டும்.

கேள்வி:  இந்த ஒதுக்கீடு சலுகைசார் அரசியலை ஊக்குவிக்கின்றது என்று பெண்களினால் குற்றச்சாட்டப்படுகின்றது. இந்த கருத்து பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்த சட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளன. சட்டப் பொறிமுறையில் பிரச்சி னை உள்ளது. 25சதவீத கோட்டா முறையில் எந்த பெண்கள் வரப்போகின் றார்கள்? இந்த பெண்களை எந்த அடிப்படையில் இந்த அரசியல் கட்சிகள் தெரிவு செய்யப் படப் போகின்றன என்பதற்கான சரியான வரையறையை தேர்தல் ஆணையகம் வழங்கவில்லை. ஆகையால், சரியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்களா? உள்வாங் கப்படுவார்களா? என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இப்பொழுது பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. எல்லாப் பெண்களுக்கும் இந்த  25 வீத கோட்டாவில் இருந்த பயம் என்னவென்றால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தத்தமது மனைவிகளுக்கு, சகோதரிகளுக்கும் கட்சித் தலைமைகள் இடமளிக்கும் அபாய நிலைமை உள்ளது. ஏற்கெனவே ஒரு சில கட்சிகள் மனைவிகளுக்கு வாய்ப்பளித்துள்ளன என்று எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பெண்களுக்கு இடமளிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது.
ஆனால், இவ்வாறு நிகழ்ந்து விடாமல் இருக்கச் சட்டத்தில் சில விடயங்களை  சேர்த்திருக்கலாம். எவ்வாறாயினும், இந்த கோட்டா முறையை சாதகமான விடயமாகவே பார்க்கின்றோம். இந்த சட்டத்தின் கீழ் எப்படியோ பெண்கள் அரசியலுக்கு வரட்டும். இப்போதைய நிலையில் பெண்களின் அரசியல் அங்கத்துவம் அதிகரிக்கட்டும். அதுவே எங்களுக்கு முக்கியமான விடயமாகும்.

கேள்வி:  நீங்கள் குறிப்பிடும் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கு பெண்கள் அமைப்புகளும், உங்களைப் போன்ற பெண்ணுரிமைவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சட்டத்தில் ஒரு பொறிமுறையை உருவாக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தியிருக்கலாமே?

பதில்: சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்நாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் குழுக்கள், மனித உரிமை அமைப்புகள் என்பனவும் இந்த விடயம் தொடர்பாக பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. ஆனால், தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் வலியுறுத்தும் போது சட்டத்தினை இடைநிறுத்தி விடவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும். அதனால், கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம்என்ற சிந்தனை தான் எமக்குள் இருந்தது.
எவ்வாறாயினும் இப்பொழுது கட்சிகளும் தாங்கள் கவனிக்கப்படுவோம் என்ற அச்சத்தினைக் கொண்டிருக்கின்றனர். அரசியல்கட்சிகளின் முக்கியஸ்தர்களின் மனைவிகளுக்கும், சகோதரிகளுக்கும் வேட்பு மனுவில் இடம் கொடுத்தால் மக்களிடம் வாக்கு கேட்க முடியாத நிலை ஏற்படும். ஏனெனில் மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூற நேரிடும். ஒன்றுமே இல்லாத இடத்தில் இந்த சட்டம் வந்ததே பெரிய ஒரு விடயமாகும். அப்படித்தான் நாங்கள் அனைவரும் இதனை சாதகமான அம்சமாகவே நோக்குகின்றோம். இது ஆண்களுக்கு ஒரு அடியும் தான். அவர்களும் கலங்கிப் போய்த் தான் இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் 25சதவீத கோட்டாவை கொண்டு வரும் போதும், தேர்தல் முறை வரும் போதும் சிறுபான்மைக் கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தன. மனோ கணேசனின் கட்சியினர், முஸ்லிம் காங்கிரஸினர் பல குறைபாடுகளை முன்வைத்தனர். சிங்களப் பகுதிகளில் பிரதிநிதித்துவம்பாதிக்கப்படும் என்று கூறினர். அதனால்தான், சரியாக இந்த சட்டத்தினை வடிவமைத்துள்ளனர். குறைபாடுகள் இருந்தாலும் இது முதல் படி. இப்பொழுது எத்தனையோ வேட்புமனுக்கள் நிராகரிக் கப்பட்டுள்ளன. 25 முதல் 30 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு காரணம் பெண்களை உள்வாங்காமையாகும்.
25 வீத கோட்டா பட்டியலும் சரிவர வழங்கப்பட்டிருக்கவில்லை.

கேள்வி: பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வராமல் தயக்கம் காட்டுகின்றனர் என்று சில அரசியற் கட்சிகள் பெண்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றன. இது உண்மை தானா?

பதில்: குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருக்கும் அரசியற் கட்சிகளிடம் நான் ஒரு விடயத்தினைக் கேட்க விரும்புகின்றேன். இதுபற்றி நான்நிறைய நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளேன். ஆயுதப் போராட்டத்தில் இறப்பதற்கும், தற்கொலைத் தாக்குதலுக்கும் கடற்புலியாக இருப்பதற்கும் முன்வந்த பெண்கள் ஏன் அரசியலுக்கு வர மறுக்கின்றார்கள்? விடுதலைப் புலிகள் மட்டுமன்றி எல்லா ஆயுதக் குழுக்களிலும் பெண்கள்
சமைத்துக் கொண்டும், இருப்பிடத்தினை சுத்தப்படுத்திக் கொண்டும் மட்டும்தான் இருந்தார்களா? எமது போராளிப் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஆயுதங்களைத் தாங்கி களத்தில் நின்று போராடி இன்று கையும் காலுமின்றி அங்கவீன நிலையில் உள்ளனர். போராடி சாவதற்கு எந்தவிதமான சலுகையையும் எதிர்பார்க்காமல் வந்த பெண்கள், இவ்வளவு வசதி வாய்ப்புகள் தரும், அங்கீகாரம் தரும் அரசியலுக்கு ஏன் வருகிறார்கள் இல்லை? அவ்வாறாயின் எங்கு தான் தவறு நடந்துள்ளது? பெண்கள் அரசியலுக்கு வர தயங்குகின்றார்கள் என்று எமது அரசியற் கட்சிகளினால் கூற முடிகின்றது? என்னைப் பொறுத்தவரை அத்தனையும் பச்சைப் பொய்.அவ்வாறெனில் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பெண்களை வலுக்கட்டா யமாக ஆயுதப் போராட்டத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டனரா? அவர்கள் விரும்பி வரவில்லையா? விரும்பித்தான் ஆயுதப் போராட்டத்திற்கு பெண்கள் வந்தார்கள் எனின், ஏன் அரசியலுக்கு வர விரும்புகின்றார்கள் இல்லை? அரசியலில் பெண்கள் வருவதன் மூலம் அந்தஸ்து, கௌரவம், மதிப்பு அதிகரிக்கின்றது. அதிகாரம், சலுகை கிடைக்கின்றது. அப்படியாயின், ஏன் பெண்கள் வருகின்றார்கள் இல்லை? உண்மை என்னவென்றால் ஆணாதிக்க கட்டமைப்பினைக் கொண்ட அரசியற் கட்சிகள் தமது நிலையில் இருந்து மாறவில்லை என்பதே இங்கு உண்மை. காலத்திற்கு ஏற்றவாறு அவர்கள் பச்சோந்திகளைப் போன்று நடந்து கொள்கின்றார்கள். போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து ஆயுதக் குழுக்களுக்கும் அன்று ஆளணி தேவைப்பட்டது. அதற்காக அனைவரும் சமத்துவம் பேசினார்கள். சம உரிமையைப் பற்றி பேசினார்கள். பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று பேசினார்கள். இது ஒரு marketing technique. இவற்றை சொல்லி பெண்களை கூவி அழைத்து சாகடித்து கை கால் இன்றி அங்கவீன நிலையில் எமது பெண்கள் பெரும் துன்ப நிலையில் கைவிட்டு விட்டனர். பெரும் அவல நிலையில் எமது பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பெண் போராளிகளைப் பார்த்தால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்று இரண்டு அல்ல. சமூகப் பிரச்சினை. அந்தப் பெண்களை திருமணம் முடிக்க எவரும் முன்வருவதில்லை. குடும்பத்திற்கு சரிவர மாட்டார்கள். ஆயுதம் ஏந்தி போராடியதால் வன்முறையானவர்களாக இருப்பார்கள். வாய்க்காரி. ஒழுக்கம் கெட்டவள் என்று இவர்கள் தூற்றப்படுகின்றார்கள். சமத்துவம் பேசியவர்கள் இன்று திரும்பி பின்னோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டனர். இந்தப் பெண்கள் யாருக்காக போராடினார்கள்? அந்தப் பெண்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. ஆகக் குறைந்தது அவர்களை மதிப்பதும் இல்லை.
அன்று, வீரமங்கைகள் என்று போற்றப்பட்டவர்கள், இன்று சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறாயின் ஆளணி தேவைக்காக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நிலைப்பாடுகளை எமது கட்சிகள் கொள்கின்றார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள சகல தமிழ் அரசியற் தலைவர்களில் ஓரிருவரை தவிர, மற்றவர்கள் அனைவரும் ஏதோவொரு ஆயுதக் குழுவில் இருந்தவர்கள்தான். சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், டக்ளஸ் என்று அவர்களைப் பட்டியலிட முடியும். அவர்களினால் அரசியல் செய்யமுடிகின்றது. ஆனால், ஆயுதக் குழுக்களில் இருந்த பெண்கள் எங்கே? புளொட்டில் தான் அதிகளவு பெண்கள் இருந்தனர். டெலோ, ஈ.பி. ஆர். எல்.எவ் இல் இருந்த பெண்கள் எங்கே? ஏன் இப்பொழுது அவர்கள் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஏன் வாய்ப்புகள்வழங்காமல் பெண்கள் அரசியல் வருகிறார்கள் இல்லை என்று கூறுகின்றீர்கள்? தமிழ் மக்கள் பேரவையில் 22 பேர்களும் ஆண்கள். பெண்கள் எங்கே என்று கேட்டால் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்கள். ஏன் தேட வேண்டும்? ஒரு பெண் சட்டத்தரணி வடக்கு, கிழக்கில் இல்லையா? ஒரு பெண் செயற்பாட்டாளர் இல்லையா? ஒரு பேராசிரியை இல்லையா? வடக்கு கிழக்கில் ஒரு பெண் விரிவுரையாளர் இல்லையா? நீங்கள் அந்தப் பட்டியலைப் பார்த்தால் புரியும் 21 மற்றும் 22ஆவது இடத்தில் "திருமதி' என்று எழுதி வெற்றிடக்கோடு ஒன்றினை இட்டிருந்தார்கள். அதனால் தான் நான் அதனை தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை என்று ஆக்கங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். இதில் இரண்டு மூன்று விடயங்கள் உள்ளன. முதலாவது ஆயுதப் போராட்டத்தில் ஆளணி தேவை என்பதற்காக பெண்கள் சமத்துவம், பெண்கள் உரிமைகள் என்பனவற்றை கூறி, பெண்கள் போராட்டத்திற்குள் இழுக்கப்பட்டார்கள். இன்று அவர்கள் சீரழிக்கப்பட்டார்கள். ஆனால், அது பற்றியும் எவரும் பேசுவதில்லை. கட்சி ஆரம்பிப்பது பற்றியும் புதுக் கட்சி ஆரம்பிப்பது பற்றியும் மட்டும் பேசுகின்றனர். இப்பொழுது அந்தப் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மிகவும் ஆற்றல் மிக்கபெண்கள். அரசியல் ஆர்வம் மிக்கவர்கள். கேள்வி கேட்பவர்கள். ஊழல்களை விரும்பாதவர்கள். இதனால் தான் இவ்வாறான பெண்களுக்கு இடமளிக்க ஆண் அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் தலையாட்டும் பெண்களைத் தான் அவர்கள்விரும்புகின்றார்கள். வடக்கு, கிழக்கில் 25 வீதம் கேட்டுத்தான் பெண்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டுமா? பெண் பேராளிகள் நிறைந்த மண்ணில் அது தானாக இடம் பெற்றிருக்க வேண்டும். தமிழினி போன்ற அரசியல் தலைவி இருந்த மண்ணில்  25 வீதம் கோட்டா கொடுத்தா பெண்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும்? ஆயுதப் போராட்டம் மௌனித்த பிறகு இந்தப் பெண்கள் அனைவரும் சமூகத்தில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். திட்டமிட்டு திருப்பப்பட்டனர். நிறையப் பெண் போராளிகள் கையில் கௌரிக் காப்புக் கட்டியிருக்கின்றனர். சமூக மாற்றம் என்பது இங்கு நிகழவில்லை. எமது மக்களுக்கு தேசியம் என்பது ஒரு விற்பனைப் பொருளாகி விட்டது. அதனை சொல்லிச் சொல்லித் தான் பெண்களைபோராட்டத்தில், இணைத்தனர். இன்று எந்த பிரதேச சபையிலாவது ஒரு பெண் போராளியை இவர் கள் நிறுத்தியுள்ளனரா? அதைவிடுத்து, பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குகின்றார்கள் என்று கூறுவது பெரும் அபத்தம்.

கேள்வி: பெண்கள் அரசியலுக்கு வரும் போது மட்டும் அவர்கள் குடும்பப் பின்னணி, நடத்தைகள், நல்ல பெண்ணா கெட்ட பெண்ணா ஆகியபிம்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது பற்றிய உங்கள் பார்வை என்ன?

பதில்: ஆம். பெண்கள் அரசியலுக்கு வரும் போது மட்டும் அவர்கள் நல்ல குடும்பத்தினைச் சேர்ந்தவர்களா? கற்றோர் பரம்பரையை சேர்ந்தவர்களா என்று ஆராய்ந்து பார்க்கின்றனர். இதே கேள்வி ஏன் ஆண் அரசியலுக்கு வரும் போது கேட்கப்படு வதில்லை? பெண்கள் எப்பொழுதும் வித்தியாசமான அரசியல் செய்பவர்கள். நேர்மையான, ஜனநாயகமாக அரசியலை, நல்லாட்சி குணாதிசயங்கள்கொண்ட அரசியலை அவர்கள் செய்வார்கள். மக்களுக்கு தேவையான அரசியலை செய்யக் கூடியவர்கள்.மேலும், அரசியலுக்கு வரும் பெண்கள் மீது வித்தியாசமான குற்றச் சாட்டு இப்பொழுது முன்வைக்கப்படுகின்றது. அவள் ஆண் மாதிரி. இறுக்கமானவள் என்று பெண்கள் விமரிசிக்கப்படுகின்றார்கள். பெண்களும் இந்த சமூகக் கட்டமைப்பில் ஆணாதிக்க சிந்தனையில் ஊறிப்போய் வளர்ந்ததினால் அவர்களுக்குள்ளும் ஆணாதிக்க மனப்பான்மைகள் இருக்கின்றன. பெண்களும் அடி தடி செய்ய வேண்டும் என்றுநினைக்கின்றனர். வன்முறையை பெருமையாகக் கூறுகின்றனர். அரசியலில் பெண்கள் நிலைத்து நிற்பதற்கு ஆண்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இது ஒரு தவறான கருத்து. எவ்வாறாயினும் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இந்த கலாசாரங்களைமாற்ற வேண்டும். பெண்கள் தான் இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.

கேள்வி: இந்த தேர்தல் முறையின் அடிப்படையில் வன்முறைகள் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. இது பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு சாதகமான அம்சம் தானே?

பதில்:விருப்பு வாக்கு தெரிவு முறை இல்லாமையினால் இந்த முறை தேர்தல் அமைதியானதாகவே இருக்கும். ஏனெனில் விருப்பு வாக்கு முறையினால் கட்சிக ளுக்குள்ளேயே கொலைகளும் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் இம்முறை தேர்தல் முறையானது பெண்களுக்கு சாதகமான அம்சமாகும். வட்டார முறையில் எத்தனை வட்டாரமோ அது 60 வீதமாகக் கணிக்கப்பட்டு அந்த 60 வீதத்தில் 10 வீதம் கட்டாயம் பெண் வேட்பாளராக இருக்க வேண்டும். 60 வீதமும் 100 வீதமாகக் கணிக்கப்பட்டு முழுமையாக பெண்களை வேட்பாளராகவும் நியமிக்கலாம். ஆனால், கட்டாயம் குறைந்தது 10 வீதமாவது பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. விகிதாசாரப் பட்டியலில் குறைந்தது 50 வீதம் பெண்களுக்கு இருக்க வேண்டும். இங்கு போட்டித் தன்மை இல்லாமல் போய் விடுகின்றது. இங்கு 25 வீதம் கட்சியில் உள்ளடக்கப்பட்ட பெண்களும் கட்சிக்காக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். வாக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க ஆசனங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 25 வீத ஒதுக்கீடு வந்துவிட்டது என்று போட்டியிடும் பெண்கள் வீட்டில் இருந்து விட முடியாது. எனவே, இந்த முறைகள் கட்டாயம் வன்முறையைக் குறைக்கும்.
ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையுமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏனெனில் சமூக ஊடகங்களில் போட்டியிடும் பெண்களை தப்புத் தப்பாக எழுதுகின்றனர். அவதூறு பரப்புகின்றனர். இதுவும் ஒரு வன்முறை தான். பொலிஸ் மா அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான விடயங்களை கண்காணிப்பதாகவும் தேர்தல் ஆணையத்துடனும், மனித உரிமைகள் அமைப்புகளுடனும் இணைந்தும் இவ்விடயம் சம்பந்தமான வரையறை ஒன்றை அவர்கள் கொண்டு வரவுள்ளனர்.

கேள்வி: உங்களுக்கும் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளது. ஒரு பெண்ணாக நீங்கள் அந்த சந்தர்ப்பத்தில் பல பிரச்சினைகளையும்அவதூறுகளையும் சந்தித்துள்ளீர்கள். நீங்கள் அந்த அனுபவத்தினைப் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: 2007 மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சி மட்டும்தான் போட்டியிட்டது. அந்தக் காலப்பகுதி மிகவும் பயங்கரமானது. முக்கியமான கட்சிகள் தமிழ்க் கூட்டமைப்பு உட்பட எந்தக் கட்சியும் போட்டியிடவில்லை. ஆனால் தேர்தலில் ஆட்களை களமிறக்க அவர்கள் ஆட்களை தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எவரும் போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. அப்பொழுது போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நான் நிராகரித்து விட்டேன். அப்பொழுது என்னை தேர்தலில் போட்டியிடுமாறு வலிந்து வலிந்து கேட்டு அழைப்பு விடுத்தனர். ஏனெனில், ஆண்கள் எவரும் முன்வராத நிலையில் பெண்களை தஞ்சமடைகின்றனர். அப்பொழுது எங்களிடம் வந்து போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றார்கள். அதே நபர்கள் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கவே இல்லை. ஏனெனில், அப்பொழுது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருந்தன. சுமுகமான சூழல் உருவாகியிருந்தது அதனால் போட்டியிட பெண்கள் தேவைப்படவில்லை. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் சகலகட்சிகளிலும் போட்டியிட்ட எட்டுப் பேரும் ஆண்களாக இருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்நூறு பேர் போட்டியிட அதில் 5பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். அதுவும் பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டார்கள். ஆனால், அரசியற் கட்சிப் பட்டியலில் இடம் தருகின்றோம் என்று கூறி இறுதி நேரத்தில் பெண்கள் கழற்றிவிடப்பட்டனர். எனினும், நாங்கள் ஒரு விழிப்புணர்வுக்காக சுயேச்சையாக இறங்கினோம். இதற்கு முன்பு ஒரு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில்50 பெண்கள் போட்டியிட்டனர். ஏனெ னில், அந்தக் காலப்பகுதி பயங்கரமானதாக இருந்தது. பிரச்சினைகள் என்றுவரும் போது தங்களை தற்காத்துக் கொள்ள அரசியலில் பெண்களை ஆண்கள் முன்ன ணிக்கு கொண்டு வந்து தள்ளி விடுகின்றனர். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறுபால்நிலை வகிபாகம் ஆண்களினால் மாற்றப்படுகின்றது.

கேள்வி: இவ்வாறான நிலையில் பெண்களுக்கான ஒரு தனி அரசியற் கட்சியின் தேவை உணரப்படுகின்றது அல்லவா?

பதில்: எனது தனிப்பட்ட கருத்தின் படி பெண்களுக்கான அரசியற் கட்சி ஒன்று தேவையில்லை. ஆனாலும், இருந்தாலும் பரவாயில்லை என்று தான் நினைக்கின்றேன். ஆண்கள் அரசியற் கட்சிகளை ஆரம்பித்து தங்களை ஹீரோக்களாகக் காட்டிக் கொள்ளும் போது நாங்கள் ஏன் அப்படி செய்யக் கூடாது என்றும் தோன்றுகின்றது. ஆனால், இந்த விடயம் நடைமுறை சாத்தியமானது தான். ஆனால், பெண்கள் பெண்களை மட்டும் பிரதிநிதித்துவம் செய்வதற்கு அரசியலுக்கு வரவில்லை. அவர்கள் முழு சமூகத்தினையும் பிரதிநித்துவம் செய்ய வருகின்றனர். கட்சிகளுக்குள் சரியான ஜனநாயகம் வர வேண்டுமாயின் பெண்கள் கட்சிக்குள் உள்வாங்கப்பட வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகள் தங்களை ஜனநாயக் கட்சிகள் என்று கூறிக் கொள்வதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றேன். தங்கள் கட்சிகளில் உள்ள ஜனநாயகம் என்ற பெயரையும் நீக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அரசியல்கட்சிகளின் யாப்புகளில் மத்திய குழுவில் உள்ள பெண்கள் எண்ணிக்கை, கட்சியில் உள்ள பெண் உறுப்பினர்களின்எண்ணிக்கை,வேட்புமனு தாக்கல் செய்யும் பெண்களின் விகிதம், கிடைக்கும் ஆசனங்களில் இத்தனை வீதம் பெண்களை உள்ளடக்க வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கி கட்சிக்குள் மாற்றங்களை செய்தாலே, தானாகவே பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் அதிகரித்துவிடும். இதற்கு ஒரு பிரத்தியேக சட்டம் தேவையே இல்லை. ஒரு தமிழ் அரசியற் கட்சியின் தலைவரிடம் உங்கள் யாப்பினை தர முடியுமா என்று கேட்டதற்கு அவர் கடுமையாக என்னை திட்டித் தீர்த்துவிட்டார். "கட்சி யாப்பு என்ன நூலகத்தில் இரவல் தரப்படும் புத்தகமா' என்று அவர் என் மீது பாய்ந்தார். இதில் ஆத்திரப்பட என்ன இருக்கின்றது என்று எனக்கு புரியவில்லை. அந்தளவு பெண்கள் தெளிவாக இருப்பதும் அரசியற்கட்சிகளுக்கு எரிச்சலூட்டும் விடயமாக உள்ளது. ஆனால், இப்படி கேள்வி கேட்க ஒவ்வொருவரும் பழகிக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள். மேலும் பெண்கள் தகவல் அறியும் சட்டத்தினைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வாறான விடயங்களை பற்றி கேள்வி கேட்க முன்வர வேண்டும். இந்த சட்டத்தினை மக்கள்கைகளில் எடுக்கப் பழக வேண்டும். மலையக மக்களுக்கு, முஸ்லிம் மக்களுக்கு, தமிழ் மக்களுக்கு என்று தனித் தனியே கட்சிகள் உள்ளன. ஏன் அவ்வாறு உள்ளன? அந்தந்த மக்களுக்குரிய இருப்பிடத்தினை சார்ந்த பிரத்தியேக பிரச்சினைகள், தீர்வுகளை அந்தந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களே முன்வைக்க முடியும் என்பதனாலேயே அவ்வாறு தனியான கட்சிகள் உள்ளன. குறிப்பாக, கொழும்பில் படித்தவர்களான முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகள் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றனர். இனி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர்கள் தான் முதலமைச்சராக வேண்டும் என்றும் ஒரு சிலதரப்பினரால் கூறப்படுகின்றது. அப்படியாயின், நாட்டில் 52 வீதமாக உள்ள பெண்களாகிய எங்களின் பிரத்தியேக தேவைகளையும்பிரச்சினைகளையும் பேசுவதற்கு, ஏன் பெண்கள் கட்சிகளில் இல்லை. மக்கள் என்றால் அதில் பெண்களும் அடங்குவர் தானே. அவ்வாறாயின் தனிக் கட்சியை உருவாக்குவதனை விட, பெண்களை சரியான முறையில் கட்சிகள் பெண்களை உள்வாங்க வேண்டும்.தேர்தல் என்று வரும் போது பெண்கள் தமது வாக்குகளை அளிக்கின்றார்கள். ஆண்கள் கட்சிகளுக்கும் பெண்கள் தான் வாக்களிக்கின்றார்கள்.மக்கள் என்று வரும் போது அதில் ஆண்களும் பெண்களும் உள்ளடங்குவர். பெண்களையும் சேர்த்துத் தான் மக்கள் என்று நாங்கள் கூறுகின்றோம். இதனை உணர்ந்து கட்சிகள் தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் வருவது எவ்வளவு முக்கியம் என்றுகட்சிகளும், சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும். என்றார்.

ஆர்.பிரியதர்ஷனி

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top