நீயும் நானும் காற்றைப்போல

நீயும் நானும் காற்றைப்போல

""செல்வோம் வா'' என்ற அழகான பாடலுக்கு இசைப்பயணத்
திற்கு இசையால் உயிரூட்டிய இசையமைப்பாளர் ஜெயஈஸ்வர் ராகவன் மற்றும் கவிதை வரிகளால் புது எழுத்துக்களை படைத்த பாடலாசிரியர் ஒவியா உமாபதி ஆகிய இருவரையும் ஒரு நேர்காணலின் நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவர்கள் இருவரையும், கொள்ளுப்பிட்டியில் சந்தித்தோம். தமது வருகையின் நோக்கம் மற்றும் தங்களுடைய இசைப்பயணம் தொடர்பான பல விடயங்களை எமது
"சுடர்ஒளி'க்காக பகிர்ந்துகொண்டார்கள். அதன் முழுமையான பகுதியும் உங்களுக்காக...

கேள்வி : நீங்கள் இருவரும் இலங்கைக்கு எதன் நிமித்தமாக வருகை தந்துள்ளீர்கள்?

பதில் : எங்களுடைய அல்பம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக நாங்கள் பல இடங்களுக்கு பயணம் செய்துகொண்டிருக்கின்றோம். பொதுவாக மலேசியா, இந்தியா,
சிங்கப்பூர் போன்ற இடங்களில் தான் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள்.தமிழ்ப்பாடல்களை ரசிக்கும் ரசிகர்களை கொண்ட இத்தகைய நாடுகளை நோக்கி நாங்கள் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருக்கின்றோம்.

 

2017-11-27-12-52-59-175.jpg

 

கேள்வி : யுவன் சங்கராஜாவுடன் இணைவது தொடர்பிலான சில விடயங்கள் பற்றி கேள்விப்பட்டோம்.இது தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?

பதில் : முதலில் நாங்கள் பாடலை எழுதி விட்டோம். இதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது பற்றி யோசித்தோம்.அப்போது தான் நினைத்தோம். யுவன் போன்றவர்களின் மூலமாக கொண்டு சேர்க்கலாம் என்று. அதன் பிறகு எங்களுடைய பாடலை கேட்டு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். பொதுவாக, பார்த்தால் ஒரு அல்பத்தில் 12 பாடல்களை ஒன்றாக சேர்த்து எல்லோரும் வெளியிடுவார்கள். சிலர் எல்லாப் பாடல்களையும் "யூடியூப்' போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். ஆனால், நாங்கள் யோசித்தோம் ஒரு பாடலை ஒரு அல்பத்தில் வெளியிட்டு இரண்டு மாதங்களுக்கு ஒரு பாடல் என்ற அடிப்படையில் வெளியிடலாம் என தீர்மானித்தோம். அதன்படி "டூ கிட்டார்' (கூதீணி எதடிtச்ணூண்) அல்பத்தின் கீழ், கடந்த ஒக்டோபர் மாதம் "செல்வோம் வா' என்ற பாடலை வெளியிட்டோம். இப்போது"மொரடா' என்ற பாடலை வெளியிட தயாராகிக்கொண்டிருக்கின்றோம்.அடுத்ததாக, பெப்ரவரி மாதம் இன்னொரு பாடலை வெளியிடலாம் என்று யோசித்திருக்கின்றோம். இதைத் தான் நாங்கள் யுவன்சங்கர் ராஜாவுடன் பேசிய ரெக்கோடிங் தொடர்பிலான பேச்சுவார்த்தை. இனி ஒவ்வொரு பாடலாக எல்லாப்பாடல்களும் வெளிவரும்.

கேள்வி : மலேசியா மக்களிடையே தமிழ்ப் பாடல்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கின்றது?

பதில் : இந்தியா, இலங்கை போன்று மலேசியாவிலும் தமிழ்ப் பாடல்களை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது. இந்தியாவின் சனத்தொகையை பார்த்தீர்கள் என்றால் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. சனத்தொகையை வைத்துத்தான் ஒரு விடயம் மக்களை
சென்றடைகிறதா என்பதை பார்க்கமுடியும். மலேசியா போன்ற சிறிய நாடுகளில் ஒரு விடயத்தை புதிதாக ஆரம்பித்தவுடன் உடனே, அது மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு இப்போது நாங்கள் மேற்கொண்டிருக்கும் தொடர்ச்சியான பயணங்களை செய்து, சந்தைப்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலமாகவே அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கமுடியும். எங்களுடைய பாடல் பிரபல்யம் அடைந்த பின்னர் அதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருப்பார்கள்.இது தான் எங்களுடைய இப்போதைய தேவை.

கேள்வி : இன்று தென்னிந்தியாவில் தாமரை போன்று பெயர்
சொல்லும் அளவுக்கு ஏனைய பெண் கவிஞர்களால் நீடித்திருக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?

பதில் : பெண்மை என்பது தான் காரணமாக இருக்கின்றது. பாடல் எழுதும் எல்லோருமே இசையமைப்பாளர்களை
சென்று பார்த்து வாய்ப்பு கேட்பார்கள் என்று கருதமுடியாது. நானும் கூட அப்படித்தான் ஜெய ஈஸ்வரை தவிர, வேறு யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. நம்முடைய பாடல் வரிகள் பிடிக்கும்போது நிச்சயமாக நம்மை தேடிவருவார்கள். நாங்கள் அதைத் தான் செய்யவேண்டும்.இசையமைப்பாளர்கள் எல்லோரும் ஆணாக இருக்கும் போது ஒரு பெண் அவர்களை தேடி செல்வதற்கு தயங்குகிறாள். இந்தத் தயக்கம்தான் ஒரு பொதுவான காரணமாக இருக்கின்றது.

கேள்வி : ஜெய ஈஸ்வர் நீங்கள் சொல்லுங்கள், குளோபல் விருது பெற்ற அனுபவத்தைப் பற்றி...

பதில் :இந்த விருது வழங்கல் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இடம்பெறும். அந்த விருதுக்கு நாங்கள் "செல்வோம் வா...' என்ற பாடலை அனுப்பியிருந்தோம். உலகம் முழுவதிலுமிருந்து 2000 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில் 800 பேரின் பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டு, இறுதியில் என்னுடைய பாடலுக்கு சிறந்த இசையமைப்புக்கான "குளோபல் விருது' கிடைத்தது. இதில் ஒரு பெருமையான விடயம் என்னவென்றால், தமிழ்ப் பாடல்கள் என்றாலே இந்தியப்பாடல்களைத் தான் நினைவில் கொள்வார்கள். "விருது வழங்கல்' நிகழ்விலும், இவ்வாறான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "நான் இல்லை இது மலேசியப் பாடல்' என்று கூறினேன். இது மலேசியாவுக்கு கிடைத்த பெருமையாக கருதுகின்றேன்.

கேள்வி : வெறுமனே இசைத்தட்டுக்களை மட்டும் வெளியிடும் நோக்கில் இருக்கின்றீர்களா?

பதில் :இல்லை, நான் சில குறுந்திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கின்றேன். அதை எல்லாவற்றையும் விட, பாடலுக்கு இசையமைப்பதைத் தான் பெருமையாக நினைக்கின்றேன்.
சினிமாவில் எனக்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது, நிச்சயமாக என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன்.

 

selvom.jpg

 

கேள்வி :  "செல்வோம் வா' பாடலைப் பற்றி.....

பதில் : அதாவது தன்னுடைய விடுமுறையை கழிக்க சுற்றுலாப் பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்ளும் ஒருவரைப் பற்றிய பாடல் இது.

கேள்வி : ஒரு பொறியியலாளராக இருந்து, தற்போது ஒரு இசையமைப்பாளராக உயர்ந்திருக்கின்றீர்கள். இந்நிலையில் உங்களின் குடும்பத்தாரின் ஆதரவு என்பது எப்படியிருக்கின்றது?

பதில் : (சிரிக்கின்றார்) ஆரம்பத்தில் சற்று கோபமாகத்தான் என்னுடன் இருந்தார்கள். காரணம், நல்ல ஒரு தொழிலை விட்டுவிட்டு இசைத் துறைக்கு வந்துவிட்டேன் என்பதற்காக.இப்போது என்னுடைய பாடல் பிரபல்யம் அடையத் தொடங்கியவுடன், ஆதரவு பெருகியிருக்கிறது.

கேள்வி : இசையமைப்பாளர்களுக்கென சில கொள்கைகள் இருக்கின்றன. அதாவது, தன்னுடைய பாடல்களில் இப்படியான இசை தான் இருக்கவேண்டும் என்று உங்களுடைய பாடல்களில் எவ்வாறான இசையை கையாண்டிருக்கிறீர்கள்?

பதில் : என்னுடைய பாடல்களில் இரண்டு வரிகளுக்கு இடையில் இருக்கின்ற "மௌனம்' தான் இசை என நினைப்பவன் நான். மெல்லிசை மீது எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்.நிறைய கருவிகளை பயன்படுத்தாமல் இசையமைக்கவேண்டும் என விரும்புவோம். "சத்தமில்லாத இசை' தான் என்னுடைய இசை.
கேள்வி : உங்கள் இருவரையும் பற்றி கூறுங்களேன்.
(ஜெய ஈஸ்வர்நான் ஒரு பொறியியலாளர், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இந்த தொழிலை செய்திருக்கின்றேன்.
8 வருடங்களாக சந்தைப்படுத்தல் துறையில் இருக்கின்றேன். எனக்கு இசை மிகவும் பிடிக்கும். இதை அறிந்த என்னுடைய அலுவலகத்தின் மேலதிகாரிதான் என்னை இந்த வேலையில் இருந்து சிறிது காலம் விலகியிருந்து இசையின் பக்கம் கவனம் செலுத்துமாறு பணித்திருந்திருந்தார். அந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் நான் ஓவியாவுடன் இணைந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்தேன். வெறுமனே எல்லோரும் செய்வது போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்துகாட்ட வேண்டும் என்று நினைத்துத் தான் ஆரம்பித்தோம். இரண்டு வருடங்களாக நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. இரண்டு, மூன்று வருடங்கள் போனபின் எங்களுடைய பாடலை கேட்கும் யாரும் இந்தப்பாடல் சரியில்லை என்று சொல்லக்கூடாது என்று விரும்புகின்றோம்


(ஓவியா உமாபதி)நான் ஒரு பாடலாசிரியர். அதைத்தவிர, 2009ஆம் ஆண்டிலிருந்து நிறைய கவிதைகளை எழுதிவருகின்றேன். மலேசியாவில் சில படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கின்றேன். அதை தொடர்ந்துதான் ஈஸ்வருடன் இணைந்து பாடல்களை எழுதிவருகின்றேன். எங்கள் இருவருக்கும் நல்ல ஒற்றுமையிருக்கிறது. நான் எழுதும் பாடல் வரிகளுக்கு அவர் நன்றாக இசையமைக்கக் கூடியவர். அதேபோல, அவரது இசைக்கு ஏற்றாற்போல், என்னாலும் பாடல் எழுத முடியும். இதுவரையில் ஈஸ்வரின் இசையில் இரண்டு பாடல்களை அனுபவித்து எழுதியிருக்கின்றேன்.

அதைத்தவிர, நான் ஒரு தமிழ் ஆசிரியை, கணிதபாட ஆசிரியராக வரவேண்டும் என விரும்பிய நான், தமிழ்ப்பாட ஆசிரியை ஆகிவிட்டேன். என்னுடைய கவிதைகளில் எப்போதும் சமூக அக்கறை சார்ந்த அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டிருக்கும். "ஹை கூ' கவிதைகளை அதிகமாக எழுதியிருக்கின்றேன். அதைத்தவிர, மக்கள் விரும்பும் காதல் கவிதைகளையும் எழுதுவேன். முகப்புத்தகத்தில் பேசும் கவிதைகள் என்று பக்கத்தை உருவாக்கியிருக்கின்றேன். அதில் 20ஆயிரம் பேர் விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

அதே போல, மலேசியாவில் இருக்கும் ஒரு வரைதல் கலைஞருடன் சேர்ந்து அவர் வரையும் படங்களுக்கு ஏற்றாற் போல நான் கவிதைகளை எழுதுவேன். மேலும், ஆங்கில மொழியில் இருக்கும் நிறையக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றேன். மலேசியாவை பொறுத்தவரையில் தமிழ் வளர்ந்துவரும் ஒரு நாடு. ஆகவே, என்னால் முடிந்தவரை எழுத்துத்துறையில் சாதிக்கவேண்டும் என்பதே என் இலட்சியம். மலேசிய கலையுலகத்தினால் ஒரு குறுந்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக ஒரு விருது வழங்கப்பட்டது, அதைத் தவிர மலேசியன்இந்தியன் ஆர்ட் எசோசியேசன் மூலமாகவும் ஒரு விருது கிடைத்திருக்கிறது. "எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதான் இந்தப் புகழை பெற்றுத்தந்திருக்கிறது.

"நட்பு எம்மை இணைத்தது,
அதுவே சிகரம் தொட வைத்தது'

சிவசங்கரி சுப்ரமணியம்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top