சொல்லத்தான் நினைக்கிறேன்

இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழில் இரண்டாவதாக அமைவது இசை. இது மனதை அணு அணுவாய் துளைக்கும் இயல்பு கொண்டது. அரக்கர்களை கூட மெய்மறந்து ரசிக்க வைக்கும் வல்லமை இசைக்கு உண்டு. துக்கம் தொண்டையை அடைத்து நின்றாலும் இசையெனும் மருந்து அந்த துயரத்தின் வலியை ஆற்றும் வல்லமை பெற்றது. மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை நாதம் எனவும் அழைப்பர். இசை என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி பற்றிய  கலையாகும்.

அந்த வகையில் நலிந்த தமிழ் கலைஞர்கள் தொடர்பிலான எம்முடைய பயணத்தில் இந்த வாரம் சற்று வித்தியாசமாக இலங்கையின் இசைத்துறையில் சாதித்த ஒருவரை சந்திக்கலாம் என நினைத்து பயணத்தை ஆரம்பித்தேன். யாரை சந்திக்கலாம் என்ற வினாஎழுந்தபோது சட்டென நினைவுக்குவந்தவர் இலங்கையின் மூத்த கலைஞரும் இசையமைப்பாளருமாகிய எம்.எஸ்.செல்வராஜா.அவருடைய வீட்டைத் தேடி அலைந்து ஒருவழியாக மருதானையை அடைந்துவிட்டேன்.

அடை மழை பெய்து முடித்த பகல் பொழுது அது. அவரின் வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் பாசி படிந்து கிடக்கின்றது. கால்களை ஏடாகூடாமாக வைத்தால் நிச்சயம் பலத்த அடி தான் விழும். அப்படியொரு கரடுமுரடான பாதை அது. தட்டுத் தடுமாறி அவரின் வீட்டை அடையாளம் கண்டுபிடித்தேன். போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் தன்னுடைய ஒரு காலின் செயற்பாடு குன்றிய நிலையில் இருந்த செல்வராஜா என்னை கைகூப்பி வரவேற்றார். அவர் உடல்நிலை மோசமாக இருந்ததை அவதானிக்காமல் இல்லை. ஒரு சிறிய வீடு, அதில் ஆங்காங்கே அவருடைய வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள், பரிசளிப்பு விழாக்களில் அவர் பெற்றுக்கொண்ட விருதுகள் தொடர்பான புகைப்படங்கள் என அவருடைய வீடு காட்சி அளித்தது. என்னைப்பற்றிய சுருக்கமான சில விடயங்களைப் பகிர்ந்துக்கொண்டு, பத்திரிகையின் நிமித்தம் வருகை தந்துள்ளேன்,நேர்காணல் ஒன்றுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றேன். ""மெதுவாக பேசுங்கள் ஐயா,கஷ்டப்படவேண்டாம்'' என கேட்டுக்கொண்டதற்கிணங்க மறுப்பேதும் தெரிவிக்காமல் சரி என்று உடனே ஒப்புக்கொண்டார். அவர் வழங்கிய நேர்காணலின் முழுப்பகுதியும் உங்களுக்காக..

கேள்வி "அவள் ஒரு ஜீவநதி'யில் ஆரம்பித்தது உங்களுடைய திரையிசைப் பயணம், இந்தப்பயணத்தில் இது வரையில் எத்தனை பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?.

பதில் நான் இதுவரையில் 1000 இற்கும் மேற்பட்ட இலங்கையின் மெல்லிசைப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றேன். அந்த காலத்தை பொறுத்தவரையில் மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைப்பதற்கு பெரிதாக இசைக்கலைஞர்கள் இருக்கவில்லை. ஆனபடியினால் நான் சிங்களம் உட்பட தமிழ் மெல்லிசைப் பாடல்களில் எனது கவனத்தை செலுத்தியிருந்தேன். சிங்கள மொழியில் 100 பாடல்களுக்கு இசையமைத்திருப்பேன். மறைந்த அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமானுக்கும் பாடல் இசைத்தட்டு ஒன்றை வெளியிட்டிருந்தேன். சிறு வயதிலிருந்து இசையின் மேல் எனக்கு தீராத காதல் இருந்தது. எனது சொந்த முயற்சியில் இசை பயின்றேன். அதைத் தவிர அரசால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில் ஆசிரியர் கலாச்சாலைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இசைத்துறைக்காக விண்ணப்பித்து 5 வருடங்கள் ஆசிரியர் கலாசாலையில் இசைப்பயின்றேன். அதற்கு பிறகு ஒரு இசை ஆசிரியராகி தொடர்ந்து திரையிசை பாடல்கள்,மெல்லிசை பாடல்கள் என என்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.

கேள்வி உங்களிடம் இசை பயின்ற மாணவர்களைப் பற்றி கூற முடியுமா?

பதில் என்னிடம் இசை பயின்றவர்கள் இன்று பல நாடுகளிலும் காணப்படுகின்றார்கள். அதில் ஒருவர் லண்டனில் ஒரு இசைக் குழு வைத்திருந்தார். இன்னொருமாணவர்கிறிஸ்தவ இசை குழு ஒன்றில் இசையமைத்துக்கொண்டிருக்கிறார். நான் கனடாவுக்கு சென்றிருந்த வேளை அங்கு என்னிடம் சில மாணவர்கள் இசை கற்றுக்கொள்ள அதாவது பொப்பிசை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தார்கள். வெளிநாடுகளுக்கு செல்லும்போது பலர் என்னிடம் இசை கற்றுத்தருமாறு கேட்டிருக்கிறார்கள். இலங்கையை பொறுத்தவரையில் அவர்களுடைய குறிக்கோள் தவறாக இருக்கின்றது.அதாவது வருகின்றவர்கள் இசையின் மேல் கொண்ட காதலினால் வருவதில்லை."ஒரு வாரத்தில் இசை கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்றுவிக்க முடியுமா' என்று கேட்கிறார்கள்.அல்லது ஒரு மாதம். இது எப்படி சாத்தியமாகும்? இவ்வாறு வந்து கேட்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது.

கேள்வி -இன்றும் சரி, அன்றும் சரி இலங்கையிலிருந்து வெளிவருகின்ற திரைப்படங்களுக்கோ அல்லது திரையிசைப் பாடல்களுக்கோ மக்களிடையே ஆதரவு என்பது குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

பதில் இதை ஒரு கண்ணோட்டத்தில் வைத்து பார்க்கக் கூடாது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக இலங்கையில் ஒருவர் பாடல் பாடுபவராக இருந்தால் அவர் பாடுவதில் எனக்கு என்ன இருக்கிறது? அவர் பாடுவதை நான் ஏன் கேட்கவேண்டும் என நினைப்பது, அவர் வளர்ச்சி அடைந்து நமக்கென்ன பிரயோசனம்? என்று நினைக்கும் மனநிலை. இவ்வாறு நினைத்திருந்தால் அன்றைய இசைக்குழுக்கள் பெரும்பாலும் சம்பாதித்திருக்கவே முடியாது. அன்றைய காலங்களில் மிகப்பிரபல்யமாக இருந்த பல குழுக்கள் மேடைநிகழ்ச்சிகளினூடாகவே அதிகம் சம்பாதித்தார்கள். சரி அவ்வாறு செய்தால் என்ன? இதில் என்ன தவறு இருக்கின்றது?

சிலர் இலங்கை பாடகர்களை பிரபல்யப்படுத்த விரும்புவதில்லை. மெல்லிசை பாடல்கள் மேடைகளில் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏனைய இலங்கை மேடை நிகழ்ச்சிகளுக்கும் இப்போது இலங்கையில் இடமில்லை. அதே போல இத்தகைய நிகழ்ச்சிகளை யாரும் செய்வதற்கும் முன்வருவதில்லை. முன்னொரு காலத்தில் வாத்திய கருவிகள் கூட கலையரங்குகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இப்போது அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் சில வித்தியாசமான பதில்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகையினால் நான் எதையுமே கேட்டுக்கொள்ள விரும்புவதில்லை.அரசு கலைஞர்களுக்கான "கார்டர்' என்றொரு நிகழ்ச்சித் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதாவது 4 மாதங்களுக்கு 10 நிகழ்ச்சிகள் செய்யலாம். அதற்கு தேவையான பணத்தை அவர்கள் ஒதுக்குவார்கள். மெல்லிசைக்கும் அவ்வாறான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை பயன்படுத்துவதும் இல்லை.
கேட்பதற்கும் ஆட்கள் இல்லை.

கேள்வி இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் இலங்கை கலைஞர்களை கண்டுகொள்வதில்லை என்றொரு குற்றிச்சாட்டு எல்லாத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது.இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் கண்டுகொள்வதில்லை தான், கண்டுகொண்டால் அவர்கள் அவ்வாறான பதிலை  சொல்ல மாட்டார்களே. ஒரு அங்கீகாரம் கொடுப்பதில்லை. முன்பு சிங்கள பக்கத்தில் மட்டும் தான் சினிமா, கலைகள் ஆகியன வளர்ச்சியடைந்திருந்தன. இன்று தமிழ்சினிமாவும்  வளர்கிறதே, இதற்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்கினால் என்ன என்று யாரும் நினைப்பதில்லை? இலங்கை ஒலிபரப்பு  கூட்டுத்தாபனத்தில் முன்பு ஒத்துழைப்புகள் கிடைத்தன. ஆனால் இப்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சுயநலக் கொள்கைகள் களையப்படவேண்டும்.

இந்த ஊரில் பிறந்த கலைஞர்களின் கனவுகளுக்கு இம்மண்ணிலேயே அங்கீகாரம் கிடைக்கவேண்டும். பிறந்த மண்ணில் கிடைக்கவில்லையென்றால் பிறகு எப்படி நாங்கள் வெளிநாடுகளில் அதனை பெறமுடியும். இன்று இந்திய கலைஞர்கள் உலகெங்கும் கௌரவப்படுத்தப்படுகிறார்கள். எத்தனை பட்டங்கள் அவர்களுக்கு. ஆனால் எம் தேசத்தில் பிறந்தவர்களுக்கு எதுவுமேயில்லை. எல்லா மக்களும் ஒன்று தான். எல்லோருக்கும் இரத்தம் கூட ஒரே நிறம்.தென்னிந்திய திரைப்பட பாடல்களை விரும்பும் நாம் ஏன் இலங்கை பாடல்களை விரும்புவதில்லை? இல்லை விரும்பினால் தான் என்னவென்று கேட்கின்றேன்.

இங்கு சினிமாவுக்கு முதலீடு செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். முதலீடு செய்தாலும் அதை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. முதலீடு செய்யவும் அஞ்சுகிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்த வரையில் அப்படியில்லை. அது மிகவும் பெரிய இடம். முதலீடு செய்வதற்கு பலரும் தமது விருப்பங்களை தெரிவிக்கிறார்கள்.

எமது திறமையை வெளி உலகத்துக்கு காட்டவேண்டும். படித்த அறிவுள்ள சமுதாயம் அதை வெளியே எடுத்து செல்லவேண்டும். அதற்கு ஊடகங்கள் தமது பங்களிப்பை வழங்கவேண்டும். சிங்கள தொலைக்காட்சிகளை பாருங்கள், அவர்கள் கலைஞர்களுக்கு வழங்கும் கௌரவத்தையும் மரியாதையையும் பார்த்து நானே மெய்சிலிர்த்து போகின்றேன். எந்த நேரமும் பாடல்களை ஒலிப்பதிவு செய்கிறார்கள். பாடல் காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அவர்கள் சகோதரத்துவக் கலைஞர்களுக்கு எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறார்கள். ஆனால் எமக்கு எந்த தொலைக்காட்சியும் எதையுமே செய்வதில்லை. முன்பு  இந்தியாவுக்கு அனுப்பிவைத்து மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெற செய்வதற்கான பல்வேறானசெயற்றிட்டங்களை முன்னெடுத்துவந்தார்கள். ஆனால் இன்று ஏன் அதை நிறுத்தினார்கள் என்று தெரியவேயில்லை.

கேள்வி இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற அனுபவங்களைப் பற்றி கூறுங்களேன்.....?

பதில் இசைநிகழ்ச்சிகளுக்காக நான் இந்தியாவிற்கு அதிகமாக விஜயம் செய்திருக்கிறேன். அதைத் தவிர கனடாவில் என்னுடைய இசை நிகழ்ச்சிகள் பலமுறைநடைபெற்றிருக்கின்றன. கனடாவில் ஸ்ரீசத்யசாயி பாபா நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த வேளையில் ஒரு இசைத்தட்டினை வெளியிட்டிருந்தேன். அதைவிர ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்து எனது இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியிருக்கிறேன்.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள வேண்டும். இலங்கையில் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்கியவர்கள் சகோதரத்துவக் கலைஞர்கள் தான். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரங்கேற்ற முடியாது. காரணம் அவர்களின் ஒத்துழைப்புடன் ஒரு நிகழ்ச்சியை செய்யும்போது தான் அது மக்களை சென்றடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. எமது கலைஞர்கள் மீது அனுதாபம் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு வாழ்வதற்கு ஏதுவான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று தான் கூறுகின்றேன். இலங்கையின் இசைக்கலைஞர்களுக்கென எந்த வருமானமும் அல்லது எந்த உதவிகளும் கிடைப்பதில்லை.நான் கூட ஆசிரியர் வேலையின் ஓய்வூதியத்தில் தான் என்னுடைய வாழ்நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றேன். அதை தவிர யாரும் எந்த உதவியும் எனக்கு செய்வதில்லை. இசைதுறையை விட்டு விலகி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் ஒரு பாடலை தந்தால் அதற்கு இசையமைக்கும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது. ஆனால் என்னை தேடுவதற்கு யார் இருக்கிறார்கள்.

கேள்வி ஈழத்து இசைத்துறையில் ஒரு மறக்கமுடியாத இசையமைப்பாளராக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக நினைப்பது எதை?

பதில் இந்த இசைத்துறையின் மேல் நான் கொண்ட இந்த காதல் எனக்கு என் வாழ்வில் கிடைத்த பெரும்பாக்கியமாக கருதுகின்றேன். இசையமைப்பாளராக அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை பல விருதுகளை வாங்கி வைத்திருக்கின்றேன். என்னுடைய வாழ்வில் முதலாவதாக நான் பெற்ற கௌரவம்
"சங்கீத பூஷணம் விருது' இதை என் வாழ்நாளில்மறக்கவே முடியாது. மற்றும் "கலாபூஷணம் விருது' 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு அரச இசை விருது விழா நிகழ்வில் இலங்கை ஜனாதிபதியினால் விசேட கௌரவ பரிசும் வழங்கப்பட்டது.

அதேபோல சத்யசாயி பாபா அறக்கட்டளை நிலையத்தில் எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு என்னுடன் சேர்ந்து பஜன் பாடல்களை பாடிய இளைய கலைஞர்கள் எல்லோரும் என்னுடைய காலிலே விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். அதை தவிர கனடாவுக்கு சென்றிருந்த வேளை அங்குள்ள கலைஞர்கள்,மக்கள் என்னை கனடாவில் வசிக்குமாறு வற்புறுத்தினார்கள். எனக்குத் தேவையான உதவிகளை செய்து தருவதாகவும்,எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம் எனவும் அன்பு கட்டளையிட்டார்கள். நான் அங்கு இருப்பதற்கு விரும்பவில்லை. என்னுடைய உடம்பு என்னுடைய மண்ணில் தான் சமாதியாகவேண்டும்.பணம்,பொருள் மட்டும் வாழ்க்கையல்ல அவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது. எல்லா நாடுகளிலும் கலைஞர்களை கௌரவிப்பதற்கான

சங்கங்கள் உண்டு. முன்பு இலங்கையில் இதுபோன்ற தமிழ் கலைஞர்கள் சங்கம்ஒன்றை தாபித்திருந்தேன். ஆனால் இப்போது அது செயற்படவில்லை. ஆனால் சகோதரத்துவ கலைஞர்களின் சங்கங்கள் இன்று கொடிக்கட்டி பறக்கின்றன.அவர்களை போல எங்களாலும் பறக்க முடியும். அதற்கு ஏனையவர்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமாகும்.

 இசையமைப்பாளர் செல்வராஜாவின் மனக்குமுறல்களை நான் பதிவு செய்ய எத்தனித்தவேளை அந்த இசைக்குயிலின் இறகு உடைந்த கதையையும் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.ஆமாம் காதல் எல்லோருக்கும் பொதுவானது, காதல் மதங்களை தாண்டி மனங்களில் வாழும் தெய்வீக உணர்வு. உலகில் எத்தனையோ காதல்கள் ஜெயிக்கின்றன, சில காதல்கள் தோற்றுப்போய் முகாரி இராகம் இசைக்கின்றனஅந்த வகையில் செல்வராஜாவினுடைய வாழ்விலும் ஒரு காதல் இருந்திருக்கிறது. சேராமல் போன அந்த காதலின் வலி இன்னும் அவருக்குள் இருக்கிறது என்பதை அவர் பேசும் போது உணரக்கூடியதாக இருந்தது. 

காதல் ஒரு மனிதருக்கு நிச்சயம் வரவேண்டும். அந்த காதல் கைகூடாமல் போனாலும் இறுதிவரை அந்த ஒற்றைக்காதலுக்காக வாழவேண்டும் என காதலிசம் பேசுகிறார் செல்வராஜா. சில தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய துணையுடன் சேர முடியாமல்போனது அந்த பிரிவிலிருந்து இன்று வரை வெளியே வரமுடியவில்லை. ""இறக்கும் முன் ஒரு தடவையேனும் அவள் முகம் பார்க்கவேண்டும் என்ற தவிப்பில் நான் காத்துக்கொண்டிருக்கின்றேன்'' என்றார் கண்கள் குளமாக. அத்தருணத்தில் பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. மௌனம் மட்டுமே அங்கே பேசிக்கொண்டிருந்தது.

இந்த நேர்காணல் உண்மையில் வித்தியாசமான ஒரு அனுபவத்தை மட்டுமல்ல ஒரு தூய்மையான காதலின் பிரதிபலிப்பை எனக்குள் ஏற்படுத்தியது என்றே கூறலாம். இலங்கையின் இசை மேதையாய் இருந்த ஒரு இசைக்கலைஞனின் மனதுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறவேண்டும். அதற்கு இறைவன் துணைபுரியவேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவரிடமிருந்து விடைபெற்றேன்.இவரை தொடர்புக்கொள்ள விரும்புவோர் 0112434218 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

ஆக்கம்- ச.சிவசங்கரி

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top