சீனாவால் விரிசலடையும் டில்லி - கொழும்பு உறவு

சீனாவால் விரிசலடையும் டில்லி - கொழும்பு உறவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அரசில் முற்றுமுழுதாக சீனாவின் செல்லப்பிள்ளையாகச் செயற்பட்ட இலங்கை, ஆட்சிமாற்றத்தின் பின்னர் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசு எடுத்த சில நடவடிக்கைகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருந்த சூழலில், தற்போதும் மீண்டும் சீனாவின் செல்லப் பிள்ளையாக இந்த அரசும் மாறிவருகிறது. இச்சூழலில் இந்தியாவின் அதிருப்தி நாளுக்கு நாள் இலங்கை மீது அதிகரித்த வண்ணமே உள்ளது.

சீனாவின் நேசக்கரத்தால் முன்னாள் அரசு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்து வந்தது. போருக்கு முன்னர் இந்தியாவுடன் நெருக்கமாகச் செயற்பட்டிருந்த மஹிந்த அரசு, போருக்குப் பின்னர் அபிவிருத்தி தொடர்பில் எழுந்த மோகத்தால் இந்தியாவை பகைத்துக்கொள்ளும் நிலைமை உருவாகியது. உலகப் போக்குவரத்தில் இலங்கையின் கடற்பரப்பு முக்கிய கேந்திர நிலையமாக காணப்படுவதால் இலங்கையில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு தமது பட்டுப்பாதை திட்டத்தை விரிவாக்குவதற்கு மஹிந்த அரசின் நண்பனாக சீனா மாறியது.

1960களுக்குப் பின்னர் இலங்கை சீனா இடையேயான உறவு வலுப்பெற்று வந்திருந்தாலும், மஹிந்த அரசில் அது குடும்ப உறவு போன்று மாறியது. என்றாலும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியபோது சீனாவுக்கு எதிரான கொள்கையையே வெளிப்படுத்தியதுடன், இலங்கை சீனாவின் ஆதிக்கத்தால் படுகுழியில் விழுந்துவிடும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்ததுடன், தாம் ஆட்சிக்கு வந்தால் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் இரத்துச்செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் மைத்திரி ரணில் தலைமையில் உருவான தேசிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களாக தாமரைத் தடாகம், போர்ட்சிட்டி உள்ளிட்டவற்றை இடைநிறுத்தியது. இதன் காரணமாக சீனா இலங்கை மீது கடும் அதிருப்தியடைந்தது, மாத்திரமின்றி, போர்ட்சிட்டி விவகாரத்தை சர்வதேச ரீதியில் கையாள முயன்றது. என்றாலும், மீண்டும் இலங்கைக்கு சீனாவிடம் செல்ல வேண்டிய நிலை உருவானதுடன், சீனாவை பகைத்துக்கொண்டால் தமக்குத்தான் பாதகம் என்பதையும் இலங்கை எண்ணி மீண்டும் சீனாவுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொண்டது.

தற்போது நாளுக்கு நாள் சீன இலங்கை உறவு வலுப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா தற்போது இலங்கை மீது கடும் அதிருப்தியடைந்துள்ளமை மட்டும் நிதர்சனம். திருகோணமலைத் துறைமுகம் மற்றும் சம்பூர் அனல் மின்னிலைய விவகாரங்களில் இந்தியாவின் வியூகம் இலங்கையில் தோல்வியடைந்துள்ளதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சீனா எதிர்காலத்தில் அமையப் போகிறது என இந்தியா அச்சம் கொண்டுள்ளது.

குறிப்பாக, சீனாவின் அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் மீண்டும் முன்னாள் அரசில் போன்று அடிக்கடி இலங்கைக்கு வருகை தருகின்றனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடு, ஒப்பந்தங்கள் மாதா மாதம் கைச்
சாத்தாகிக் கொண்டிருக்கின்றன. விரைவில் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சதீவு வரை சீனாவின் ஆதிக்கம் பரவும் என்று இந்தியாவின் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனாவைப் பொறுத்தவரையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் தனக்குச் சவாலாகக் கருதுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதை சீனா விரும்புவதில்லை. சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்கு முக்கிய எதிரி நாடுகளாகவும் இந்த நாடுகளே காணப்படுகின்றன. இந்துமாசமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுவதற்கு இலங்கையின் பூகோள அரசியல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை உடைக்க சீனா பெரும் வியூகத்தை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனத்தலையீட்டை முறியடிக்க இந்தியாவும் தன் பங்கிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கான ஒரு தளமாக இலங்கையை சீனா பயன்படுத்தி வருகிறது. விசாகப்பட்டினம் கிழக்குக் கடற்படைத் தலைமையகமும், கிழக்கு கடலோரப் பகுதிகளிலுள்ள ரொக்கெட் ஏவுதளங்களும் சீனாவின் கவனத்துக்குரிய முக்கிய இலக்குகளாகும். இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பிரதான இடமாக விசாகப்பட்டினமே உள்ளது. இங்கிருந்துதான் இந்தியக் கடற்படைக்கான ஏவுகணைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

இலங்கை சீன நெருக்கம், இந்திய அமெரிக்க நாடுகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், அதை இலங்கை திரும்பத் திரும்பச் செய்து வருவதுதான் ஆச்சரியம். அப்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம் என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரான யோகேந்திர குமார் உட்பட பலர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், புதுடில்லியும் பலமுறை இந்த விவகாரம் தொடர்பில் கொழும்புடன் பேச்சுக்களை மேற்கொண்டும், இலங்கை அரசு அவையனைத்தையும் தட்டிக்கழித்து சீனாவுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியிருந்தது. இதேவேளை, கொழும்புத் தெற்கு துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை தற்போது சீனா முன்னெடுத்து வருகிறது. இந்த அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்தவுடன், குறித்த பகுதியின் 80வீதமான இடங்களை இந்தியாவுக்கு வழங்க இலங்கை தீர்மானித்துள்ளதால் சீனா இலங்கை மீதுகடும் அதிருப்தியை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் 60வீதமான அபிவிருத்தித் திட்டங்கள் சீனாவின் முதலீட்டிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான உடன்படிக்கைகள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளன. அத்துடன், ஏனைய உடன்படிக்கைகள் விரைவில் கைச்சாத்திடப்படுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டம்தான் மொரகாகந்த அபிவிருத்தித்திட்டம்.

இத்திட்டம் நாளை முழுமையாக இலங்கை அரசுக்கு சீனா வழங்கவுள்ள போதிலும், இத்திட்டத்திற்காக பெற்றுக்கொண்டுள்ள நீண்டகாலக் கடனை செலுத்தும்வரை சீனாவின் ஆதிக்கம் இலங்கை மீது இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் இந்தியாவையும் திருப்திப்படுத்தும் நோக்கில் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கும் இலங்கை தயாராகி வருகிறது. இந்த உடன்படிக்கை எதிர்வரும் ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் கைச்சாத்திடப்படக்கூடிய வகையில் செயற்பாடுகளை இலங்கை முன்னெடுத்து வருகின்றது. தற்போது சீனாவின் போர்ட்சிற்றி திட்டப் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த திட்டம் 2021ஆம் ஆண்டு பூர்த்தியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், இந்தியா அதிருப்தியடைந்துள்ளமை சில இராஜதந்திரிகளின் கருத்துக்களால் தெளிவாகப் புலப்படுகிறது. இலங்கையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் வருட ஆரம்பத்திலேயே இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ள விவகாரம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலையொன்றை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்டெம்பர் மாதம், 9ஆம் திகதி சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக கடந்த முதலாம் திகதி முதல் அங்கு சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள விடயம் புதுடில்லிக்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருப்பதாக இராஜதந்திர தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவத் தேவைகளுக்கு சீனாவால் பயன்படுத்தக்கூடாதென இந்தியா, இலங்கை அரசிடம் இராஜதந்திர மட்டத்தில் வேண்டுகோளொன்றை விடுத்திருந்தது. அதற்கு சீனாவும் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், சீனாவின் தேசியக் கொடிக்கு அம்பாந்தோட்டையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது சீனாவின் ஆதிக்கத்தின் ஆரம்பமென கருதும் இந்தியா, அதன் காரணமாகவே தனது எதிர்ப்பை தெரிவிக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் உள்நாட்டில் மாத்திரமல்ல, சர்வதேசத்திலும் இலங்கை அரசுக்கு பெரும் சவால்கள் நிறைந்த வருடமாக மாறியுள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முறுகல்கள் முற்றியுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மறைமுகமாக பதவி விலகுமாறு சுதந்திரக் கட்சி கூறிவருகின்றமை ஐ.தே.கவை மேலும், அதிருப்தியடையச் செய்துள்ளது.

உள்நாட்டில் பிரச்சினைகள் ஒருபுறத்தில் வலுப்பெற்றுவரும் சூழலில், சர்வதேச சவால்களும் இலங்கைக்கு அச்சுறுதலாக மாறியுள்ளன. அண்மையில் ரஷ்யாவால் இலங்கைத் தேயிலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் இராஜதந்திர ரீதியில் பேசுபொருளாக இருந்தது. அதேபோல்தான், தற்போது மார்ச் மாதம் இலங்கை எதிர்கொள்ளவுள்ள ஐ.நா. சமரும் சவால்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. 

ஜெருசலேம் விவகாரத்தில் இலங்கை அமெரிக்காவுக்கு எதிராக நடந்துகொண்டதன் விளைவாகவே இந்த இக்கட்டான நிலைமை தோன்றியுள்ளது. ஜெருசலேம் விவகாரத்தில் இலங்கை அமெரிக்காவை எதிர்த்ததற்கு முதல் அடியாக அமெரிக்காவால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி. வரிச்சலுகை கடந்த முதலாம் திகதி முதல் அதிரடியாக நிறுத்தப்பட்டது. இலங்கையில் இந்த விவகாரம் சூடுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக, இச்சலுகை நிறுத்தப்பட்டதால் பாதிப்பில்லையென அரசு கூறினாலும், மறுபுறத்தில் மீண்டும் இச்சலுகையைப் பெற்றுக்கொள்ள கடும் பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டுவருகிறது. மார்ச் மாத ஜெனிவா அமர்விலும் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவை இலங்கை எதிர்த்ததன் பின்விளைவுகளை சந்திக்கும் நிலைமை தோன்றலாமென ஆரூடம் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச பொறிக்குள் மீண்டும் இலங்கை சிக்கும் நிலையை நோக்கித் தள்ளப்படும் வகையில் அரசின் சில செயற்பாடுகள் அமைந்துள்ளதால், வருட ஆரம்பமே குழப்பகரமானதாக மாறியுள்ளது. அம்பாந்தோட்டையில் பறக்கும் சீனக் கொடியால் டில்லி அதிருப்தியடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசு விரைவில் டில்லியுடன் சமரசப் பேச்சுகளை முன்னெடுக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக, உலகப் பொருளாதார மாநாட்டில் இம்மாத இறுதியில் கலந்துகொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் செல்லவுள்ளார். மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்கவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் கசிந்திருந்தன. இந்த பேச்சின் போது, அம்பாந்தோட்டையில் பறக்கும் சீனக் கொடி விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கும்.

அத்துடன், இலங்கையில் இந்தியா புதிய அனல் மின்னுற்பத்தி நிலையமொன்றை ஆரம்பிக்க மேற்கொண்டுவரும் செயற்பாடு மற்றும் எட்கா உடன்படிக்கை தொடர்பில் சில உறுதியான முடிவுகள் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சீனாவால் டில்லிக்கும் கொழும்புக்குமான உறவில் அண்மைக்காலமாக சில விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றமையே நிதர்சனம்.

சு.நிஷாந்தன்

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top