சந்தேகத் தீயால் கருகும் மொட்டுக்கள்

குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபம் வரை பாடசாலை தந்த அனுபவங்களும் திறமையும்தான் நமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன. பாடசாலை புனித பூமி. அங்கு கற்றுக்கொள்ளும் பாடத்தை எவராலும் இலகுவில் கற்றுக்கொடுத்துவிட முடியாது. பெற்றோர்கள் கண்ணுங்கருத்துமாக செல்லம் கொடுத்து வளர்த்த பிஞ்சுகளை எவ்விதமான சஞ்சலமுமின்றி பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு ஒரே நோக்கம், சகல விதமான அனுபவங்களுடன் தங்களது பிள்ளை உலகை அறியவேண்டும் என்பதுதான்.


இன்று காலம் மாறிபோய் "இளமையில் கல்வி சிலையில் எழுத்து' என்ற பொன்மொழி இன்று மாறி "இளமையில் கலவி' என்ற நிலைக்குப் பாடசாலைக் கல்வி மாறிபோய்விட்டது. போதைப்பொருள் வர்த்தகம் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே இடம்பெறுகின்றது. அதிகளவான பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆசிரியர்கள் மாணவிகளை துஷ்பிரயோகப்படுத்திய கதைகளையும் சதாகாலமும் நாம் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.


ஆனால், அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் ஒட்டுமொத்த பாடசாலைகளையுமே தலைக்குனிவுக்கு உள்ளாக்கியிருந்தன. அதிபர்களின் மோசமான நடத்தையும், அவரின் நடத்தைக்கு உடந்தையாக ஆசிரியர்கள் துணைபோவதும் மிகவும் வேதனையான விடயங்கள்.


அநுராதபுரம் மாவட்டம் ஹெக்கிராவை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வாந்தி எடுத்ததைக் கர்ப்பமாகிவிட்டாள் எனத் தெரிவித்து அவமானப்படுத்தியமையும், பொலன்னறுவை, ஹிங்குரக்தமன மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பாடசாலையினுள் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறி அம்மாணவி கர்ப்பப் பரிசோதனை செய்துவிட்டு அந்த அறிக்கையை பாடசாலையில் ஒப்படைத்தால்தான் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார் என்று கூறியமையும் பரபரப்பான விடயமாகக் கருதப்பட்டன.


கெக்கிராவையிலுள்ள பாடசாலையொன்றில் பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் திடீரென பாடசாலையில் வாந்தியெடுத்துள்ளார். இதனைக் கண்ட பாடசாலை அதிபர் சந்தேகித்து பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழு ஊடாக குறித்த மாணவியை விசாரித்துள்ளார். விசாரணையின்போது மாணவி தான் காலைச் சாப்பாடு சாப்பிடாமல் வந்தமையாலேயே அந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


எனினும், இதனை நம்ப மறுத்த பாடசாலை நிர்வாகம் குறித்த மாணவி ஒழுக்கம் தவறியுள்ளார் என்றும், அவரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்போவதாகவும் மாணவியின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பெற்றோர், குறித்த மாணவியை வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


பின்னர் அந்த மாணவிக்கு நடந்த பரிசோதனையில் அம்மாணவி எவ்வித தாக்கத்துக்கும் உள்ளாகவில்லை என்பதும் காலைச் சாப்பாட்டைத் தவிர்த்ததனாலேயே வாந்தி எடுத்துள்ளதாகவும் தெரியவந்தது. அதன்பின்னர் தமது பிள்ளை வீணான குற்றச்சாட்டினால் மனமுடைந்து உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


எத்தனைபெரிய கொடுமையான விடயம் பாருங்கள். ஒரு மாணவி சாப்பிடாமல் பாடசாலைக்கு வந்து வாந்தி எடுத்ததைக் கர்ப்பமாகிவிட்டாள் என்று கட்டுக்கதை பரப்பி அந்தப் பெற்றோருக்கு மட்டுமல்லாது அந்த மாணவியின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குமளவுக்குப் பிரச்சினையை பூதாகரமாக்கிவிட்டார்கள். மிகவும் நன்றாக கல்விபயிலக்கூடிய அந்த மாணவி கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கே செல்லவில்லையாம்.


ஒட்டுமொத்த சமூகமும் இந்த அவலத்துக்குப் பொறுப்பேற்றாகவேண்டும். பிஞ்சு குழந்தையின் மனதில் நஞ்சை விதைத்து அதனைத் தம்பட்டம் அடித்தது மட்டுமல்லாமல், ஊர் வாய்க்கு பொரி கிடைக்க வைத்த அந்த பாடசாலையின் அதிபர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்.


அடுத்ததாக, ஹிங்குரக்தமன மகா வித்தியாலத்தில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவர் பாடசாலையினுள் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறி வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இன்னொரு மாணவனுடன் வகுப்பறையில் தனிமையில் இருந்ததனால் அந்த மாணவியின் மீது சந்தேகப்பட்டு மருத்துவப் பரிசோதனை அறிக்கையை பாடசாலை அதிபர் கேட்டுள்ளார்.


கடந்த மாதம் 19ஆம் திகதி பாடசாலை முடிவடைந்த பின்னர், மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காகவே தான் பாடசாலையினுள் இருந்ததாகவும், வேறொரு மாணவியும் மாணவனுமே இப்படி நடந்து கொண்டதாகவும், ஆனால், அதிபர் தன்னை அழைத்து நான்தான் பாடசாலையில் இருந்ததாகக் கூறியுள்ளதாகவும் அந்த மாணவி தனது நியாயத்தை தெரிவித்திருந்தாலும் அதனை ஏற்க பாடசாலை நிர்வாகம் ஏற்கவில்லை.


இதன்பின்னர் கடந்த மாதம் 23ஆம் திகதி மாணவி மற்றும் அவரது தந்தையை அழைத்த பாடசாலை அதிபர் மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்துள்ளார். எனினும், அதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவியின் தந்தை, தனது மகள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை எனவும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லையெனவும் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் மருத்துவப் பரிசோதனையை முன்வைக்காமை காரணமாக அதிபர் குறித்த மாணவிக்கு வகுப்புத் தடை விதித்துள்ளார்.


இவ்விதமாக பாடசாலை அதிபர்கள் நடந்துகொள்வது ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்தையுமே வெறுப்புக்கண்ணோட்டத்தில் பார்க்கவைக்கின்றது. ஒரு பாடசாலை அதிபரின் மிகப்பெரிய பொறுப்பே ஒட்டுமொத்த பாடசாலை மாணவர்களையும் கட்டிக்காத்து அந்த மாணவர்களின் கல்விக்காக போராடுவதுதான். இந்தப் பொறுப்பு மிகவும் பாரிய பொறுப்பாயினும் மாணவர்களின் மனோநிலையை உணர்ந்து செயற்பட்டாக வேண்டும் என்ற உண்மையை அதிபர்கள் உணர்ந்தேயாகவேண்டும்.

 


உளவியல் பிரச்சினைகள்


பாலியல் ரீதியான விடயங்களைக் காரணங்காட்டி பாடசாலை மாணவர்களை சந்தேக்கண்ணோடு பார்ப்பது மிகவும் வேடிக்கையாகவுள்ளது. வறுமையான மாணவர்கள், குடும்பப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், செல்வந்த மாணவர்கள், இலகுவாகச் சொல்வதை அனுசரித்துக்கொள்ளும் மாணவர்கள் என எத்தனையோ விதமாக மாணவர்களை வகை வகையாகப் பிரித்துவிடலாம்.


ஆனால், அத்தனை மாணவர்களையும் பொதுவாகப் பார்க்கவேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாகவே சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை அணுகும் விதம் மிகவும் முக்கியமானது. அதனை கலை என்றுகூட கொள்ளலாம். அந்தக் கலையை முறையாக மாணவர்களிடத்தில் செலுத்தாவிடின் பல விபரீதங்கள் ஏற்பட்டுவிடும்.


அதேபோன்றதொரு நிலைதான் மேற்குறிப்பிட்ட இரு சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றுள்ளது. அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவிகளின் செயற்பாடுகளில் சந்தேகம் கொண்டு ஒவ்வொரு மாணவியிடமும் மருத்துவ அறிக்கை கேட்டால் அது நமது கல்வி சீர்திருத்தத்துக்கே கிடைக்கப்பெற்ற சாபக்கேடாகிவிடும்.

 


பாலியல் கல்வியின் அவசியம்


நமது நாட்டைப் பொறுத்தவரையில் பாலியல் என்ற விடயத்தைக் கேள்விப்பட்டாலே அதனை கலாசாரம் என்ற போர்வைக்குள் கட்டுப்படுத்தி அதனை தகாததொரு விடயமாக எண்ணுகின்றனர். பாடசாலையில் கல்வி பயிலும்போதுதான் கட்டிளமை பருவம் என்ற உன்னத பருவமெய்துகின்றனர். அந்தக் காலப்பகுதியில் எத்தனையோ உடல் மாற்றங்கள், உள மாற்றங்கள் இடம்பெறுகின்றன. காதலும் மலரக்கூடும். இது அனைவருக்கும் பொதுவானது.


இவையெல்லாம் பொதுவானவைதான் என பாடசாலை ஒருபோதும் கல்வி பயிற்றுவிப்பதில்லை. பாலியல் கல்விக்கான முக்கியத்துவத்தை தொடர்ந்தும் தகாததாகவே கருதுகின்றனர். இந்த அடிப்படை இல்லாதவர்கள்தான் மாணவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்குக் கடிவாளம் இடுகின்றேன் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையையே சிதைத்துவிடுகின்றனர். அனைத்து பாடசாலை மாணவர்களும் பாலியல் கற்கையில் தெளிவுபெறவேண்டும். அதற்கப்பால் தனக்குள்ள சுதந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்திக்கொள்வதையும் மாணவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.


பிள்ளைகளின் ஒழுக்கத்தை மட்டுமன்றி, உளவியலையும் இலகுவான முறையில் மாற்றியமைப்பதற்காகவே பாடசாலைகளில் ஒழுக்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பிள்ளையின் உளவியலைச் சிதைத்து அவமானகரமான சூழ்நிலைக்கு குறித்த ஒழுக்காற்றுக்குழு கொண்டுசென்றுள்ளதை இரு சம்பவங்களுமே நிரூபிக்கின்றன.

 


பெற்றோர்களின் பொறுப்பு


பெரும்பாலான பெற்றோர்கள் தனது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பிவைத்துவிட்டால் கடமை முடிந்துவிட்டது என நினைக்கின்றனர். ஆனால், அதற்குப் பின்னர் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவிதங்களுக்கும் பாடசாலையை குறைகூறுவதில் அர்த்தமில்லை. மாணவர்களின்மீது தொடர்ந்தேட்சையான கண்காணிப்பு மிகவும் அவசியமாகும். படசாலையில் வாந்தி எடுத்த மாணவியின் குடும்பப் பிண்ணணி மிகவும் வறுமையானது. அவர்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு தமது பிள்ளளைகளை படிக்க வைக்கும்போது அவர்கள்மீதும் வீண்பழிசுமத்தி அப்பாவி பெற்றோர்களையும் மாணவர்களையும் களங்கடிப்பது பாவமான செயற்பாடாகும்.


தமது பிள்ளைகள் தொடர்பில் எத்தனை எத்தனையோ கனவுகள். தாம் அடைந்துக்கொள்ளமுடியாதவற்றை எல்லாம் தமது பிள்ளைகளின்மூலம் அடைந்துவிடலாம் என நினைக்கும் சாதாரண குடும்பத்திலுள்ள பெற்றோர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்தான். அதற்காக பிஞ்சுகளை நசுக்கி வதைத்து என்ன பயன்?. ஒட்டுமொத்த சமூகமும் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். அந்தப் புரிந்துணர்வே கனவுகளை ஜெயிக்க அடிப்படையான தேவை.


எந்தவொரு தருணத்திலும் மாணவர்களை சந்தேகப்பட்டு பிரச்சினையை பூதாகரமாக்கிவிடகூடாது. தீர விசாரிக்கவேண்டும். உண்மையாக தவறு செய்திருந்த மாணவர்களாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும். ஆனால், ஆண் பிள்ளையோடு தனிமையில் கதைத்தால் கர்ப்பம் ஆகிவிட்டாள் என்றும், வாந்தி எடுத்தால் கர்ப்பவதி என்றும் கல்விகற்ற சமூகமே முடிவெடுக்குமாயின் அவர்கள் எவ்வளவு அநாகரிகமானவர்களாக இந்த சமூகத்தில் உள்ளனர் என்பதை உணரவேண்டும். ஒட்டுண்ணிகளுக்காக ஒட்டுமொத்த மரத்தை வெட்டுவதிலும் பார்க்க ஒட்டுண்ணிகளைக் களையெடுக்க நாம் ஒன்றுபட்டேயாகவேண்டும்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top