Items filtered by date: Saturday, 04 November 2017

மாத்தளை - தெல்கமுவ ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போனவர்களுள் ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் 12 வயது பிள்ளையொன்றின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 2 மணியளவில் 10 பேர் நீரில் அடிச்செல்லப்பட்டனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுற்றுலாவொன்றிற்காக நேற்று (03) இந்த பகுதிக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் தம்புள்ளை உயிர் பாதுகாப்புப் பிரிவினர் காணாமற் போனவர்களை தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையின் சுழியோடி பிரிவினரை விபத்து நேர்ந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் செனவிரத்ன தெரிவித்தார்.

Published in உள்நாடு

மாத்தளை, தெலுகமு ஓயாவில் நீராடச்சென்ற 10 பேரை காணவிலையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

Published in உள்நாடு

இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்க இடம்பெற்றுவரும் முயற்சிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்ற நான்கு நாட்கள் விவாதம் மூலம் புதிய அரசமைப் பொன்றை உருவாக்கும் செயற்பாடு குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது. 

புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எந்தவொரு கட்சியும் இதயசுத்தியுடன் நேர்கோட்டில் பயணித்து தீர்வுகாண விருப்பமில்லை என்பதையே இந்த நான்கு நாட்கள் விவாதத்தின் ஊடாக தமிழ் மக்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு கசப்பான உண்மையாகவுள்ளது.

அதிகாரப் பகிர்வுக்குத் தயாரில்லை
தந்தை செல்வநாயகம் கூறியது போன்று ""தமிழர்களின் எதிர்காலம் கடவுளின் கையில்தான் உள்ளது'' என்ற விடயம் இதன்மூலம் நிதர்சனமாகியுள்ளது. எவ்வளவோ விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் பல படிகள் கீழிறங்கி ஒரு பொது இணக்கப்பாட்டுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த் தலைமைகள் தயாராகவிருந்தும் தெற்கில் உள்ள அரசியல்வாதிகளின் பேரினவாத நிகழ்ச்சி நிரல் காரணமாக நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தயாரில்லை என்பதை அச்சொட்டாகப் புடம்போட்டுக் காட்டியுள்ளனர்.

இந்த நான்குநாள் விவாதத்தில் பழைய கறைபடிந்த வரலாற்றை ஆக்ரோஷமாக எடுத்துக்காட்டியவர்கள் எதிர்கால சந்ததியினர், இந்த நாட்டில் சகோதரத்துவத்துடன், வாழ்வதற்கான முன்மொழிவுகளையும் சிபாரிசுகளையும் சுட்டிக்காட்டத் தவறிவிட்டனர்.

தமிழர்கள் தரப்பில் 1956ஆம் ஆண்டு மொழிப்பிரச்சினை ஆரம்பமாகியது முதல் 2009 யுத்தம் நிறைவடையும்வரை ஏற்பட்ட அரசியல் தோல்விகள் குறித்தும், யுத்தத்திற்குப் பின்னர் அரசு முன்னெடுக்கவேண்டிய நல்லிணக்க முயற்சிகள் தோல்விகண்டமை குறித்தும் தீர்க்கமாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் தமது தரப்பு நியாயங்களையும், ஐ.தே.க. தீர்வைக் கொண்டுவரும்போது சு.க. எதிர்த்ததையும், சு.க தீர்வைக் கொண்டுவரும்போது ஐ.தே.க. எதிர்த்ததையும் கூறி இரு தரப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டனவே தவிர, அரசமைப்பில் முன்வைக்கப்படவேண்டிய தீர்வு குறித்து எவரும் வாய்திறக்கவில்லை.

புதிய அரசமைப்பு பற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பான்மையான நிலைப்பாடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்வதுடன், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை அவ்வாறே தொடரவேண்டும் என்பதுடன், ஒற்றையாட்சி பத வரைவிலக்கணத்தில் ஒரு சொல்லைக்கூட மாற்றமுடியாதெனக் கூறியுள்ளனர்.

சமஷ்டிக்குப் பதில்
சுகந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களின் கருத்து, புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை, இருக்கும் அரசமைப்பை மறுசீரமைப்புச் செய்தாலே போதும் என்பதே. தற்போதைய அரசமைப்பின் ஒன்பதாவது உறுப்புரிமையில், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதுடன், பௌத்த மதத்தைப் பேணி வளர்த்தல் அரசின் பிரதான கடமையாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், 10ஆம் 14ஆம் உறுப்புரைகள் ஏனைய மதங்களுக்கான காப்புறுதியை வழங்குகின்றன.

பௌத்த மதத்திற்கான முன்னுரிமையைக் கொடுப்பதுடன், ஒற்றையாட்சியைத் தொடர்ந்தும் கூடிய பாதுகாப்புடன் பேணுவதே சுதந்திரக் கட்சியின் தலையாய கடமை என்பதை ஆணித்தனமாக எடுத்துரைத்துள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது எனத் தமிழ்த் தலைமைகள் தெளிவாக சுதந்திரக் கட்சியின் முன்னே வலியுறுத்தும்போதே அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒருபோதும் இணங்கமுடியாதென திட்டவட்டமாக நிராகரித்தனர்.

புதிய அரசமைப்பு குறித்து அனைத்துக் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலை யில், ஐக்கிய தேசிய கட்சி எதுவித யோசனை களையும் முன்வைக்கவில்லை. தமிழர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளியதிலும், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியதிலும் பெரும்பாலான பங்கு ஐ. தே.கவையே சாரும். மலையகத் தமிழர்களை அந்நியர்களாக அடையாளப்படுத்தியதில் ஆரம்பித்த ஐ.தே.கவின் இனவாத அரசியல், 2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும்வரை தொடர்ந்திருந்ததை எவரும் மறுக்கமுடியாது.

ஐ.தே.கவின் வரலாற்றுத் தவறு
2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவால் கொண்டுவரப் பட்டிருந்த கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றில் தீயிட்டுக் கொளுத்திய கருமை படிந்த வரலாறுகளை தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லையாயினும், தற்போது ஐ.தே.கவுடன் கைகோத்து தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆதரவும் கொடுத்து வருகின்றனர். வரலாற்றை மாற்றியமைப்பற்கான சந்தர்ப்பமே தற்போது சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில், ""புதிய அரசமைப்பை ஏன் கூட்டு எதிரணி எதிர்க்கிறது? உங்களின் அனைத்துக் கோரிக்கைக்கும் நாங்கள் இணங்குகின்றோம். இப்போதாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்போம்'' என்றார். இதில் தெளிவாக விளங்கும் விடயம்தான் தேசிய இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடனான தீர்வொன்றைக் காண்பதற்கு அவர் தயாரில்லையென்பது.

தமிழர்களின் வரலாற்றில் மன்னிக்க முடியாத தவறுகளைச் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரும்போது எத்தகைய கொள்கைகளுடன் முன்னோக்கி வரவேண்டும், மாறாக கூட்டு எதிரணியின் நிலைப்பாடு இதுதான் என்றால், நாங்களும் அதற்கு இணங்குகின்றோம் என்கிறார் பிரதமர். அனுபவமிக்க அரசியல் ஆளுமையின் முற்போக்குவாதக் கருத்துகள் இவ்வாறுதான் இருக்கவேண்டுமா?

தலைமைகளின் பொய்
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது 1987ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுடன் கொண்டுவரப்பட்டிருந்த 13ஆவது திருத்தச்சட் டத்திற்கு அப்பால் சென்று தீர்வொன்றை வழங்குவதாகக் கூறியிருந்தார். ஆனால், இன்று 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியாதெனக் கூறுகின்றார்.

இவர்தான் அன்று 13ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரும்போது நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றனர் எனக் கோட்டையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார். ஆனால், மாகாணசபை முறையால்தான் இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பில் பிரித்தானியாவை விடவும் வலுவானதாகக் காணப்படுகிறது. 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் வடக்கு,கிழக்கில் முறையாக அமுல்படுத்தப்பட்டிருக்குமாயின் இலங்கையின் நிலை இன்று சர்வதேச அரங்கில் வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு கருத்தையும் அதிகாரம் இல்லாதபோது அரசியல் சுயலாபங்களுக்காக இன்னொரு கருத்தையும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் காலங்காலமாகத் தெரிவித்து வருகின்றமையாலேயே
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது எட்டாக்கனியாகவுள்ளது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்திருந்த மக்கள் விடுதலை முன்னணி, அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தும்போதுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமெனக் கூறியிருந்ததுடன், நாடு பிளவுபடும் ஏற்பாடுகளைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாமென வலியுறுத்தியது.

எதிரணியின் நிலைப்பாடு
அதிகாரப் பகிர்வு குறித்து எதிரணியைத் தவிர ஏனைய கட்சிகளின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளபோதிலும், தமிழ்த் தலைமைகளின் பிரதான கோரிக்கைகளான வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சிமுறையை அனைத்துக் கட்சிகளும் முற்றாக நிராகரித்துள்ளன.

வடக்கு, கிழக்கை இணைக்க சிங்கள தலைமைகளைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோமெனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டன. வடக்கு, கிழக்கு இணைப்பு, இணைந்த வடக்கு,கிழக்கில் சமஷ்டி ஆட்சிமுறை, உச்சக் கட்ட அதிகாரப் பகிர்வு, காணி, பொலிஸ், சட்டமியற்றல் மற்றும் மாகாண உயர் நீதிமன்ற மொன்றை ஸ்தாபித்தல் இவைதான் கூட்டமைப்பின் பிரதான கோரிக்கைகள்.
ஆனால், இவை எவற்றிலும் முழுமையான தீர்வைக்காண அரச தரப்புக்கு விருப்பமில்லை. அத்துடன், சமஷ்டி, வடக்கு,கிழக்கு இணைப்புக் கோரிக்கைள் முற்றாக நிராகரிக்கப்பட்டுமுள்ளன. எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத சூழலில் எவ்வாறு புதிய அரசமைப்பைக் கொண்டுவர முடியும்? காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாட்டையும் அரசியல் கபட நாடகத்தையுமே அரசு முன்னெடுத்து வருகின்றதென எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானதே.

எதற்கு நடந்தது விவாதம்?
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காகவா இந்த விவாதம் இடம்பெற்றதென நான்கு நாட்கள் விவாதம் முடிவில் சந்தேகம் எழுந்துள்ளது. கறைபடிந்த வரலாற்றைப் பேசியவர்கள் அரசியல் தீர்வு குறித்த எந்த யோசனைகளையும் முன்மொழியவில்லை என்பதுடன், தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதற்கும் தயாராக இல்லை.

தமிழர் தரப்பில் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்குமான பல ஆணித்தனமான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தன. இவ்வாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பல தடவைகள் பெரும்பான்மை சமூகத்துடனான அதிகாரப் பகிர்வில் நாங்கள் தோல்விகண்டிருந்தாலும், இதனை இறுதிச் சந்தர்ப்பமாகப் பார்க்கின்றோம்; அதனால் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அனைவரும் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் எனக் கூறியிருந்தார்.

இவ்வாறுதான் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் அதிகாரப் பகிர்வுக்கு பூரண ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருந்த போதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் மாத்திரமே அதிகாரப் பகிர்வு குறித்து நடுநிலைத் தன்மையான கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

புதிய அரசமைப்புப் பணிகள் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இடைக்கால அறிக்கை இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பு போன்று தெற்கில் அடிப்படைவாதிகள் புடம் போட்டுக் காட்டி வருகின்றனர்.

அபிவிருத்தியும் தேசியப் பிரச்சினையும்
காலங்காலமாக இவ்வாறு தீர்வுகாண உருவாகியிருந்த சந்தர்ப்பங்களை சீர்குலைத்து வந்தமையாலேயே அபிவிருத்தி என்பது எமக்கு எட்டாக்கனியாக வெகுதூரத்தில் உள்ளது. இந்த நாட்டில் நிலையான அபிவிருத்திஎட்டப்பட வேண்டுமென்றால் முதலில் செய்யவேண்டிய விடயம், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்படவேண்டியதே என அமைச்சர் மனோகணேசன் தெளிவுபடுத்தியிருந்த கூற்றே நிதர்சனம்.

அபிவிருத்திக்குப் பின்னடைவாக அமைந்தது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதுபோனமைதான் என்பதை தெற்கின் அரசியல் தலைமைகளால் இன்னமும் புரிந்துகொள்ளமுடியாதுபோயுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தனிச் சிங்களச் சட்டத்தால் 1956ஆம் ஆண்டு மொழிப் பிரச்சினை ஆரம்பமானது முதல் காலத்துக்குக்காலம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் ஏற்பட்ட வன்முறைகளும், கலவரங்களும், அரசியல் ஸ்திரத்தன்மையின்மையுமே அபிவிருத்திக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவருகின்றன.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் காணப்பட்ட சுதேச பொருளாதார முறையால் உள்நாட்டு உற்பத்தி நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசியல்வாதிகள் இன்றும் பேசும் விடயம்தான் 1970ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மறைந்த சிங்கப்பூரின் தந்தை லீக் யுவான், "இலங்கையைப்போன்று சிங்கப்பூரை மாற்றியமைப்பேன்'' எனக் கூறியிருந்த கருத்து.
ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்து அபிவிருத்தியில் முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கையின் நிலைமை 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் படுமோசமான கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அபிவிருத்தியும், தேசிய பிரச்சினையும் இலங்கையில் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளமையே இதற்கான காரணம்.

இலங்கையர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
தற்போதைய அரசின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாலேயே அதிகாரப் பகிர்வு விடயத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். இருந்தாலும், இதய சுத்தியுடனான தீர்வை முன்மொழிவதற்கு அரசு முன்வராவிடின் உண்மையில் அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளதைப் போன்று இலங்கையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஆளும் தலைமைகளால் இலங்கை பல்லின, பல்மத கலாசாரத்தைக்கொண்ட நாடு என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சர்வதேச தலையீடுகளும் அழுத்தங்களும் இலங்கையில் தொடர்ந்து நிலைகொள்ளக் காரணமும் இதுவே. இலங்கையை பல்லின சமூகம் வாழும் நாடாகவும், மதச்சார்பற்ற நாடாகவும் பிரகடனப்படுத்தும் போதே "இலங்கையர்கள்' என்ற நாமத்தை அனைவரும் உணர்வுடன் சுமந்துகொண்டு பயணிக்க முடியும். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சியெனத் தொடர்ந்து இனவாதப் போக்கைக் கைவிட மறுப்பதானது, வரலாற்றுத்தவறாகவே மாறும்.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எதிரெதிர் திசையில் பயணித்த இரண்டு தேசியக் கட்சிகளும் ஓரணியில் இணைந்துள்ள நிலையில், இன்னமும் ஒரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வராது வெவ்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றமை மேலும் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடே. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைமைகள் புரிந்துகொண்டு செயற்படுகின்ற போதிலும், பெரும்பான்மைத் தலைமைகள் எள்ளளவும் புரிந்துகொள்ளவில்லை. இதன் காரணமாகவே வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து நான்கு நாட்கள் அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதம் நடைபெறும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் உறுதியான கருத்துகளை எவரும் முன்மொழியவில்லை.

ஆக்கம்; சு.நிஷாந்தன்

"ஊடகத்துறை உங்களைக் கொன்றுவிடும்.எனினும், நீங்கள் உயிரோடு இருக்கும்போது அதை நீங்கள் உயிரோடு வைத்திருப்பீர்கள்'' என்கின்றார் நியூயோர்க் ட்ரிபியுன் பத்திரிகையின் ஸ்தாபகரும் ஆசிரியருமான ஹொரஸ் கிரீலி (ஏணிணூச்ஞிஞு எணூஞுஞுடூஞுதூ). நூற்றாண்டைக் கடந்துவிட்ட இந்த வாசகத்தில் எவ்வளவு பெரிய உண்மை புதைந்து கிடக்கின்றது.

ஊடகவியலாளன் ஒருவனின் வாழ்க்கையின் சாராம்சத்தை கனகச்சிதமாக சொல்லியிருக்கின்றார் கிரீலி. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதனை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் செயலே ஊடகப்பணி. எவரும் செல்வதற்கு நினைத்துக்கூட பார்க்காத பகுதிகளில்கூட ஊடுருவி உண்மையை உலகத்திற்கு அறிவிக்கும் பணியை ஊடகவியலாளர்கள் ஆற்றுகின்றார்கள். தகவல் பரிமாற்றத்தில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
உலகின் பல்வேறு அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள், போராட்டங்கள், ஏன் அமைதியின்போதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊடகங்களின் பங்கு அளவிடமுடியாதது.

எனினும், அந்த அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு அதற்கு நேர் எதிரான பாதிப்பும், பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஒரு ஊடகவியலாளனுக்குக் காணப்படுகின்றது. உண்மையை உலகறியச் செய்வதால் மக்கள் நன்மையடையும் அதேவேளை, ஓர் ஊடகவியலாளன் அதிகளவு வர்க்கத்தின் நேரடி எதிரியாகின்றான்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் நேற்று முன்தினம் (நவம்பர் 2) நினைவுகூரப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தத் தினம் உலகளாவிய ரீதியில் முதற்தடவையாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது கூட்டத் தொடரின்போது ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதி மாலியில் பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தினம் பிரகடனம் செய்யப்பட்டது. கடந்த 11 வருடங்களில் மாத்திரம் 900 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தக் கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தரப்பினரில் ஒருசிலருக்கு மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இத்தகைய நிலைமையின்கீழ், ஊடகவியலாளர்கள் தைரியம் இழக்கும் அதேவேளை, ஊடகப்பணியும் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு உண்மையைச் சொல்ல தன் உயிரையும் துச்சமென மதித்து செயற்படும் ஊடகவியலாளர்களின் வாழ்க்கை பாதுகாப்பு அச்சுறுத்தலுடனேயே நகர்கின்றது.

உலகின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான நாடாக ஈராக் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் காணப்படுகின்றது. அந்த நாட்டில் இதுவரை 309 ஊடகவியலாளர்கள் தமது பணியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டாம் இடத்திலிருக்கும் பிலிப்பைன்ஸில் 146 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள். மூன்றாம் இடத்திலிருக்கும் மெக்சிக்கோகோவில் 120 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களைப் பாகிஸ்தான், ரஷ்யா, அல்ஜீரியா, இந்தியா, சோமாலியா, சிரியா, பிரேஸில் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இத்தனை படுகொலைகளுக்கும் பாதிக்குக்கூட இதுவரை நீதி நிலைநாட்டப்படாத நிலையில், இந்த வருடமும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லையே என பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. இலங்கையில் கடந்த 1990ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை 41 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் 35 பேர், முஸ்லிம் ஐவர், சிங்களவர்கள் இருவர். ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தியமையே இவர்கள் படுகொலைசெய்யப்பட்டமைக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
மயில்வாகனம் நிமலராஜனில் ஆரம்பித்த படுகொலைகளின் பட்டியல் மிக நீளமானது. லசந்த விக்ரமதுங்க, நடேசன், பிரகீத் எக்னெலிகொட (காணாமற் போயுள்ளார்) என மொழி, சமயம், இனம் பாராது படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலமான 2005 முதல் 2015 வரை 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் இலங்கையில் பெரும் அச்சுறுத்தலான காலப்பகுதியாகவே அது பார்க்கப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை மாத்திரமன்றி, 20 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளானதோடு, 5 ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.

உண்மையில் உலகில் எந்தவொரு நாட்டிலும் 100 வீதம் ஊடக சுதந்திரம் என்பதை எதிர்பார்க்கமுடியாது. ஊடகவியலாளர்கள் ஏதோ ஒருவகையில் தமது கடமையை நிறைவேற்றத் தடைகளை எதிர்நோக்குகின்றார். ஒவ்வொரு ஊடக நிறுவனமும் ஏதோ ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகின்றன. எனினும், ஒரு சில ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. எனினும், அதிலும் ஓர் அரசியல் கலந்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் காமினி வியன்கொட தெரிவிக்கின்றார். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் இதற்குச் சிறந்த உதாரணம், என்றாலும் அது தொடர்பில் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டதா என்பதே ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் எழுப்பும் கேள்வி.

இலங்கையில் மாத்திரமல்ல, சர்வதேச ரீதியாக பல ஊடகவியலாளர்களின் படுகொலைகள், தாக்குதல்களின் பின்னால் அதிகாரத்தில் இருந்த இருக்கின்ற அரசாங்கங்களும், மிகப்பெரிய அமைப்புகளும், நிறுவனங்களும் இருக்கின்றன. ஆகவே, அவர்களுக்கு எதிராக அல்லது அவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் பாதிக்கப்படும் ஊடகவிலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. என்றாலும் ஒருசில சம்பவங்களுக்கு நியாயம் கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மோசமடைந்துவரும் ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் தாக்குதல் நிலைமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்ற நிலையில், இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் என்பது ஊடக சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஒரு முக்கியமான அமைப்பாகக் காணப்படுகின்றது. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், ஊடகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் நாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான படுகொலைகள், தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணைகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நிலைநாட்ட இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

எவ்வாறெனினும் மக்களுக்கு நடுநிலையாக நின்று உண்மையை மட்டுமே அறிக்கையிடவேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு எதிரிகள் உருவாவது என்பது இயல்பே. எனினும், அவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் அநியாயங்கள், உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். அன்றேல் நான்கு தூண்களில் ஒன்றை இழந்து, ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆக்கம்; ச.பார்தீபன் 

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ், விதிமுறைகளுக்கு முரணாக பந்துவீசினார் என நடுவர்கள் முறையீடு செய்தனர். அதன்படி கடந்த புதன்கிழமை அவர் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சுழற் பந்து வீச்சு ஆலோசகரான கால் க்ரோவ்தெ, ஹபீஸின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுனில் நரையனின் பந்துவீச்சில் மாற்றங்கள் ஏற்பட ஆலோசனைகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொஹமட் ஹபீஸ் கடந்த முறை இவரின் ஆலோசனைகளின் படியே பந்துவீச்சு மாற்றங்களை செய்து மீள பந்துவீச அனுமதி பெற்றார்.

ஆனால் இம்முறை சோதனைக்கு முன்னர் ஒரு நாள் மட்டுமே இவரின் ஆலோசனைகளை பெற்றுள்ளார். இருந்த போதும் அவரின் பந்துவீச்சு சரியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தனித்தனி அணியாக கூடி இனிமேல் கூட்டங்களை நடத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல அணிகளாக பிரிந்து கூட்டங்களை நடத்துவதன் மூலம் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்காலையில் நடத்திய கூட்டத்தை அடிப்படையாக கொண்டே பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அழைப்பின் பேரில் தங்காலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தங்காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கூட்டம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

Published in உள்நாடு

ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கய்தா தலைவரின் கணனியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளதோடு, நான்காவது முறையாக இத்தகைய கோப்புகளின் தொகுதி வெளியிடப்படுகிறது.

பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பின் லேடன் இறந்த பிறகு இந்தக் கணினி கைப்பற்றப்பட்டது.

சில கோப்புகள் பாதுகாப்பு காரணங்களாலோ அல்லது சிதைந்திருப்பதாலோ அல்லது ஆபாசமாக இருப்பதாலோ வெளியிடப்படவில்லை என சிஐஏ தெரிவித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள கோப்புகளில் உள்ள 18,000 ஆவணங்கள், 79,000 ஒலிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட காணொளிகளும் "பயங்கரவாத அமைப்பின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை" வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சிஐஏவின் இயக்குனர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

பின் லேடனின் செல்லப் பிள்ளையாக கருதப்படும் ஹம்சாவின் திருமண காணொளியும் தற்போது வெளியிடப்பட்டுள்ள காணொளிகளுள் உள்ளடங்கியுள்ளன. ஹம்ஸா அல் கய்தாவின் எதிர்கால தலைவராகத் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாவ்பே ஜனாதிபதி முகாபேவை அவமதிக்கும் வகையிலான ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க பெண் மீது, பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக அப்பெண்ணின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மார்த்தா ஓ`டோனோவன் என்ற 25 வயதுடைய பெண், முகாபேவை, `சுயநலமானவர் மற்றும் நோயாளி` என குறிப்பிட்டதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அதனை அந்த பெண் மறுத்துள்ளார்.

அவர் மீது, ஜனாதிபதியை அவமதித்தமை மற்றும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான திட்டமிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில், கடந்த மாதம், சைபர் குற்றங்கள் தொடர்பான புதிய அமைச்சகம் அமைக்கப்பட்டது முதல், இது போன்ற வழக்கு பதிவு செய்யப்படுவது, இதுவே முதல்முறை எனக் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டிற்காக அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மகம்பா டி.வி என்ற இணையதள ஒளிபரப்பு சேவையை நடத்தி வரும், மார்த்தா, `ஹராரேவில் உள்ள அவரின் இல்லத்தில் அதிகாலையில் நடந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணிற்காக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி அப்பெண் தனது ட்விட்டர் பதிவில், `நாங்கள் சுயநலம் கொண்ட, நோயாளியால் முன்னெடுத்து செல்லப்படுகிறோம்` என பதிவிட்டதாக, பொலிஸார் குற்றம் சாட்டுவதாக கூறியுள்ளார்.

மார்த்தா பொலிஸாரிடம் கையளித்த அறிக்கையில், `தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்கக் கூடியவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை` என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டத் துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பனவற்றின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு ஆசிய பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர்ர, நாட்டுக்குச் சுமையாகக் காணப்பட்ட ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுடன் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சியாக மாற்றப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

சீனாவின் பாரிய அளவிலான நிறுவனம் ஒன்று இதில் இணைந்துள்ளமையினால் கூடுதலான கப்பல்கள் இலங்கைக்கு வரும் என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த காலத்தில் பியகம நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டதைப் போன்று ஹம்பாந்தோட்டை நகரமும் அபிவிருத்தி செய்யப்படும் என்று பிரதமர் கூறினார்.

Published in உள்நாடு
Page 1 of 3

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top