Items filtered by date: Friday, 08 December 2017

“ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும் கள்ளர்கூட்டம்” என்று கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு போட்டியிட தயாராகிவரும் அதன் முன்னாள் மேயரான அசாத் ஸாலி குற்றம் சாட்டினார்.

தேர்தல் சட்டங்களை சரியான வகையில் கடைபிடித்தால் நீதியான, சுயாதீனமான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல்கால சட்டதிட்டங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பு கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று காலை நடைபெற்றது.

இதில் ஸ்ரீலங்காவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் பின்னரே கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரான அசாத் ஸாலி ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கூறினார்.

ஆத்தோடு, இந்த சந்திப்பை நிறைவுசெய்து திரும்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான அஜித் பி.பெரேரா தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இணைந்தாலும், பிரிந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்து எமது கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்றார்.

Published in உள்நாடு

ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவதே தமது ஒரே எதிர்பார்ப்பாக இருக்கின்றதே ஒழிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வீழ்த்துவது அல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்;. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதாவது, ஜனநாயக கட்டமைப்பை எற்படுத்துவதே ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியாகும். அதனை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் நாம் செயற்பட்டு வருகிறோம்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக எமது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே நாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறோம். மேலும், சில அரசியல் கட்சிகளைப் போன்று மத பேதத்தை ஏற்படுத்தும் கொள்கையை ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பின்பற்றுவதில்லை என்று அவர் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கு 3 வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய உப பீடாதிபதி கலாநிதி உபுல் திசாநாயக்கவின் கையெழுத்துடன், குறித்த மாணவர்களுக்கான வகுப்புத் தடை குறித்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பலகலைக்கழக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக வருகைத் தந்த 8 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவர்களை நிர்வாணமாக்கி பகிடிவதைகள் செய்துள்ளமைக்கு எதிராகவே குறித்த 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

தனிநாட்டை அமைப்பதற்காகவே அதிகாரப்பகிர்வு கோரப்படுகின்றது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கு மக்களுக்காக மட்டும் அதிகாரத்தைப் பகிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினைக் காண முடியாது எனவும் அவர் கூறினார்.

காலியில் நடைபெற்ற எளிய அமைப்பில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“நாட்டில் 68 வீதத்துக்கும் அதிகமான தமிழர்கள் வடக்கு- கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சிறிய அளவிலான தமிழர்களுக்காக மட்டும் அதிகாரத்தை பகிர்வதானது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைக்கும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் என்று எவ்வாறு கூறமுடியும்?

உண்மையில், தனியான இராஜ்ஜியமொன்றை அமைப்பதற்காகவே அதிகாரப் பகிர்வு வேண்டும் எனக் கோரப்படுகிறது. இதனை நாம் எதிர்க்கும்போது எமது எளிய அமைப்பையும் இனவாத அமைப்பாக சித்தரிக்கிறார்கள்.ஆனால், எம்மைப் பொறுத்தவரை நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சம அந்தஸ்த்துடன் வாழ வேண்டும் என்பது தான் முக்கியமான நிலைப்பாடாகும்.

அதேவேளை, புதிய அரசமைப்பையும் நாம் நாடாளுமன்றின் ஊடாகவே தடை செய்ய வேண்டும். இது சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒட்டுமொத்தமாக எமது தோல்வியாகவே அது கருதப்படும்” என்றும் கோட்டா கூறினார்.

Published in உள்நாடு

அநுராதபுரம் தலாவை குருந்துவெவ பிரதேசத்தில் புதையல் தோண்டிய 8 பேரை தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்பகுதியிலுள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் புதையல் தோன்றியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம்,தலாவை,கலன்னாவை,றாகம உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைதானவர்களின் நான்குபேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு புதையல் தோன்றிய வீட்டுத்தோட்டத்திற்கு உரிமையாளரான பெண்ணின் கனவில் கடவுள் வந்து தனது வீட்டுதோட்டத்தில் புதையல் இருப்பதாக கூறினார் என்றும் வீட்டு உரிமையாளராக பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இவர்களை பொலிஸார் சுற்றிவளைத்த வேளையில் அவ்விடத்திலிருந்து ஒரு நபர் தப்பியோடியுள்ளதாகவும். இவர்கள் சுமர் 20 அடி ஆளமான குழியொன்றினை தோண்டியிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் அதன் பின்னரான பூஜை ஏற்பாடுகளுக்காக தயார் செய்யப்பட்டிருந்த பொருட்களையும் கைபற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Published in உள்நாடு

வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி யாழ் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோசலிச கட்சியின் ஏற்பாட்டில் இன்று மதியம் 12 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

லலித் மற்றும் குகன் யாழில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு இன்று யாழ் நீதிமன்றில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டில் லலித், குகன் உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது காணமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களுக்கு எழுப்பப்பட்டன.

Published in உள்நாடு

தேசிய பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 1,288 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நியமனம் பெற்ற பட்டதாரிகளில் 1,223 பேர் ஆசிரியர் சேவை 3-1ற்கும் 65 பேர் 2-2ற்கும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 21 நாட்கள் திசைமுகப்படுத்தல் பயிற்சி வழங்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

தமிழ்மொழி மூலம் 297 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆசிரியர் சேவை 3-1ற்கு 292 பேரும் 2-2ற்கு 05 பேரும் உள்வாங்கபட்டுள்ளனர்.

இவர்களில் ஆங்கிலமொழி மூலமான 40 பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

ரயில்வே தொழிற் சங்கங்கள் 12 ஒன்றிணைந்து ஆரம்பித்த பணிப் பகிஷ்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் தீர்மானம் வழங்கப்படாததன் காரணமாக பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதாக லொகொமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ரயில் சாரதி உதவியாளர்களை பணிக்கு இணைத்துக் கொள்ளும் முறையில் காணப்படுகின்ற பிரச்சினைக்குறிய நிலமை குறித்து இன்று காலை ஜனாதிபதியின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரயில் சாரதி உதவியாளர்களை பணிக்கு இணைத்துக் கொள்ளும் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி லொகொமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ரயில் காப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட 12 புகையிரத தொழிற் சங்கங்கள் நேற்று முதல் அந்த பணிப்புறக்கணிப்பில் இணைந்து கொண்டதுடன், அவர்கள் சம்பள பிரச்சினையை தமது கோரிக்கையாக முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

"மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் இரண்டாவது துயரச் சம்பவம் விவாகரத்து. முதல் சம்பவம்? திருமணம்!''  இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போது முதலில் நினைவுக்கு வந்தது  எங்கோ படித்த இந்த வார்த்தைகள்தான்.

திருமணத்துக்குப் பின் கணவன்  மனைவி நிரந்தரமாக பிரிந்துவிடுவதை விவாகரத்து என்றும் சொல்லலாம்; திருமண முறிவு என்றும் சொல்லாம். அல்லது அதற்கு வேறு வார்த்தைகளும் இருக்கலாம். சேர்ந்துவாழ பிடிக்காத திருமண வாழ்க்கை என்றும் அதற்கு அர்த்தம் கற்பிக்கலாம்.

"கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிரம்மா' இது தமிழ்த் திரையுலகில் பிரசித்தமான பாடல் வரிகள். இருந்தும்  திருமண வாழ்க்கைக்கு  ஆயிரம் ஆண்டுகள் தேவையில்லை. ஆறு வருடங்கள்,  ஆறு மாதங்கள், ஏன் ஆறு மணித்தியாலங்கள் போதும் என்பதாக இன்றைய நாட்களில் திருமணத்துக்குப் பின்னரான உறவு முறிவுகள் உலகமெங்கும் மலிந்து கிடக்கின்றன.

ஆண்கள் திருமணத்துக்கு முன் நடப்பது போல  திருமணத்துக்குப் பின் நடந்தால் பெரும்பாலான  விவாகரத்துகள் நடைபெறா. ஒரு  பெண் திருமணத்துக்குப் பின் நடந்து கொள்வதுபோல  முன்னர் நடந்துகொண்டால் பெரும்பாலான திருமணங்களே நடைபெறா. இதுவும் எங்கோ  படித்ததுதான்.

விவாகரத்து என்பது தூர இருந்து பார்ப்பவர்களுக்கு சாதாரணமாக இருந்தாலும்  அந்த முடிவை எடுக்கும் கணவன்  மனைவிக்கு ஏற்படுத்தும் வேதனையை அவர்களேதான் அறிவார்கள்.'

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து ஆரம்பிக்கப்பட்ட திருமண வாழ்வுக்கு இப்படி அற்ப ஆயுட்காலம் இருக்கும் என்று எவருமே எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் அதனை நடத்திக்காட்டுவதில் பலருக்கு அலாதி பிரியம்போல.

இரு மனங்கள் இணையும் திருமணத்தில் ஒரு மனம் முரண்பட்டுவிட்டால் எடுக்கக்கூடிய அதியுச்ச தீர்வாக விவாகரத்தையே இன்று பலர் நினைக்கின்றனர். விவாகரத்தின் பின்னால் நிச்சயம் கண்ணீர் கதை நிறைந்திருக்கும்.

பிரம்மச்சாரிகளுக்கும்  சந்நியாசிகளுக்கும்கூட அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைத் தரும் கிருஹஸ்தம் என்னும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களே மிகவும் சிறப்புக்குரியவர்கள் என்றும், இல்லற தர்மத்தில் இருப்பவர்களே இந்த சமூகத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள் என்றும் கௌதம மகரிஷி கூறியதாக படித்திருக்கின்றோம்.

மாளிகையைக் கட்டியவர்கள் அது எவ்வளவு சேதமடைந்திருக்கிறது என்பதை தேடி பார்த்த பின்னர்  மாளிகையை இடித்துவிட தீர்மானிக்கலாம் அல்லது அதனை மீண்டும் புதுப்பிக்கலாம். இதுதான் திருமண வாழ்வு கசப்பதாக நினைக்கும் தம்பதிகள் எடுக்கக்கூடிய முடிவு.

அண்மைக்காலமாக  இலங்கையில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் இத்தொகை  தினமொன்றுக்கு 300 என்ற அளவில் உயர்வடைந்துள்ளதாகவும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இளவயதில் திருமணம் செய்துகொள்பவர்களே அதிகமாக விவாகரத்தைப் பெற்றுக்கொள்வதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இளவயதில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு  வாழ்க்கைப் பற்றிய அனுபவம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், அவர்கள் விரைவான முடிவுகளை எடுக்கின்றனர். விரைவாக கோபத்துக்குள்ளாகின்றனர்.  இதனால்  அவசர   தீர்மானங்களை மேற்கொண்டு பிரிந்துவிடுகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

வாழ்க்கைத்துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல், மனுதாரரை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ கொடுமைசெய்தல், திருமணமான கணவர் ஓரினப்புணர்ச்சி (ளுழனழஅல), ........ விலங்குகளுடன் புணர்ச்சி (டீநளவயைடவைல) ......... கொண்ட குற்றம் செய்தல் போன்றவற்றை காரணம் காட்டி திருமணமுறிவு செய்துகொள்வதுகூட நியாயமாகத் தோன்றலாம்.

இறைவன் பிரித்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்கிறது பைபிள். எனினும், கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஓர் ஆண், மனைவியை மணவிலக்கு செய்யவேண்டுமெனில்  திருமணத்துக்குப் பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம் என்றும் கூறப்படுகின்றது. 

இஸ்லாம் மதத்தில்  தலாக் எனப்படும் மண முறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை  படைத்தவனாகிறான். இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. எனினும், அண்மையில் இந்திய உயர் நீதிமன்றம் முத்தலாக் முறைக்கு இடைக்கால தடை விதித்திருந்ததை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

விவாகரத்து எனும்போது கணவன்  மனைவி இருவருமே அதனால் இழப்புகளைச் சந்திக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு 50 சதவீதமான திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைவதுடன், அதனை போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் விவகாரத்து வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. 41 சதவீதமான முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகவும், 60 சதவீதமான இரண்டாவது திருமணங்கள் மற்றும் 73 சதவீத மூன்றாவது திருமணங்கள் விவாகரத்திலேயே நிறைவுபெறுவதாகவும் அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

500307453.jpg

 

20 வயதுக்குக் குறைந்தவர்களில் 27.6 சதவீதம் பெண்களும் 11.7 சதவீத ஆண்களும் அமெரிக்காவில் விவாகரத்து கோருகின்றனர். 20  24 வயதுடையவர்களில் 36.6 சதவீதம் பெண்களும் 38.8 சதவீத ஆண்களும், 25  29 வயதுடையவர்களில் 16.4 சதவீதம் பெண்களும் 22.3 சதவீத ஆண்களும், 30  34 வயதுடையவர்களில் 8.5 சதவீத பெண்களும் 11.6 சதவீத ஆண்களும், 35  39 வயதுடையவர்களில் 5.1 சதவீத  பெண்களும் 6.5 சதவீத ஆண்களும் விவாகரத்து கோருகின்றனர்.

அத்துடன், அமெரிக்காவில் 36 செக்கன்களுக்கு ஒரு விவாகரத்து பதிவாகின்றது என்ற  தகவலைவிட விவாகரத்து விஸ்வருபமடைந்துள்ளமைக்கு சாட்சி சொல்லக்கூடியதில்லை. அப்படிப் பார்க்கும்போது நாளொன்றுக்கு 2,400 விவாகரத்து கிழமைக்கு 16,800 மற்றும் வருடமொன்றுக்கு 8,76,000 விவாகரத்துகள் பதிவாகின்றன.

அமெரிக்க சிறுவர்கள் 50 சதவீதம் பெற்றோர்களின் திருமண முறிவுக்கு சாட்சியாக உள்ளனர். உலகில் விவாகரத்துகோருபவர்களில்  பெரும்பாலானவர்கள் மாலைதீவுகளில் உள்ளனர். அங்குள்ளவர்களில் 1000 பேருக்கு 10.97 பேர் விவாகரத்து பெறுவதால் அது கின்னஸ் சாதனையாகவும் பதிவாகியுள்ளது. 30 வயதுக்குட்பட்ட மாலைதீவுகளைச் சேர்ந்த பெண்கள்  3 முறை விவாகரத்து பெற்றிருந்ததாகவும் ஐ.நா. முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கை முறைகளும் விவாகரத்தில் தாக்கம் செலுத்துவதை மறுக்கமுடியாது. தொழில்நுட்பத்திலும்  வளர்ச்சியிலும் முன்னேறிய நாடுகளில் மக்களின் வாழ்ககை இயந்திரமயமானதாக மாறிவருகின்றது. இதன் காரணமாக மக்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு காட்டுவது குறைவடைந்துவருவதாக உலகளாவிய ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுக்கின்றன.

பரம்பரை வழியாக வரும் கலாசாரம் உள்ளிட்டவை காரணமாக உலக நாடுகளின் மக்களின் சமுதாய கட்டமைப்பு மற்றும் குடும்ப உறவுகள் போன்றவை வித்தியாசப்படுகின்றன. மேலும்  ஐரோப்பிய நாடுகளில் 20 வயதை எட்டாத பருவத்திலும் விரும்பி இணைவதும் நடக்கின்றது.

"லிவ்விங் டு கெதர்' என்ற ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு இன்றும் உலகின் பல நாடுகளில் திருமணத்துக்கு முன்னரான குடும்ப வாழ்க்கை நடந்துகொண்டுதான் உள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமையே விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும்  பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கம் என்பனவும் இதில் பாரிய தாக்கத்தை செலுத்துகின்றன.

இவ்வாறான முறைகள் இலங்கை போன்ற கலாசாரம் நிறைந்த நாடுகளில் சற்றும் எடுபடாது என்பதுடன், இது எமது தனித்துவமான சமுதாய கட்டமைப்பை தகர்த்துவிடும். எனினும், இன்றைய நாட்களில் திருமணமுறிவுகள் அதிகரித்துள்ளமை எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படவேண்டும்.

சிறுவர் திருமணத்தை எதிர்க்கின்ற நாம் இளவயது திருமணத்தை ஆதரிக்கின்றோம். இங்கு இளவயது என்று நான் குறிப்பிடுவது 18 வயது பூர்த்தியடைந்தவர்களையே. இந்த இளவயது திருமணங்களுக்கு முக்கிய காரணம் குடும்பச் சூழ்நிலை என்ற காரணத்தை மாத்திரம் எவரும் சுட்டிக்காட்டி தப்பிச்செல்ல முடியாது.

இவ்வாறான இளவயது திருமணங்களுக்கு காதல் என்பது முக்கியமான காரணியாக காணப்படுகின்றது. ஒன்றுமறியாத இளம் பருவத்தில் ஈர்ப்பை காதலாக நினைத்து அதனை அவசரப்பட்டு திருமணமாக ஏற்படுத்திக்கொள்வதால் இன்று அதிகளவில் திருமண முறிவுகளே எஞ்சுகின்றன.

நூற்றுக்கு 10 சதவீதம் இந்தத் திருமணங்கள் வெற்றியடைந்தாலும் ஏனையவை தோல்வியிலேயே நிறைவடைகின்றன என்பதை தினந்தோறும் வழங்கப்படும் விவாகரத்துகளின் எண்ணிக்கையை வைத்து அறியலாம்.

திருமணத்துக்குப் பின்னர் குடும்ப வாழ்க்கையை கொண்டுநடத்த நிச்சயம் எம்மை போன்ற நாடுகளில் பொருளாதார பலம் என்பது மிகவும் அவசியமானது. எனினும்', அதனை நிலைப்படுத்திக்கொள்ளாமல் இளவயதில் திருமணங்களை செய்துகொள்வதென்பது திருமணத்துக்குப் பின்னரான வாழ்க்கையில் மகிழ்ச்சியற்ற நிலையையே தோற்றுவிக்கின்றது.

இரண்டாவது, திருமணம் என்பது இலங்கை போன்ற நாடுகளின் பெண்களை ஏளனமாகப் பார்க்கின்ற நிலையிலேயே உள்ளது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் காரணமாக எத்தனையோ பெண்கள் இன்று குழந்தைகளுடன் நடுவீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமணத்துக்கு முன்னர் இருபாலாருக்கும் திருமண வாழ்வு குறித்த ஒரு விளக்கம் வழங்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், திருமணம் என்றால் என்ன என்று ஒரு பாடத்திட்டத்தையே கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்னவோ!

உலகின் திருமண முறிவில் முன்னணி நாடுகள் (1000 பேருக்கு)

 

 1. மாலைதீவுகள்   10.97
 2. ரஷ்யா  4.5
 3. அருபா  4.4
 4. பெலாரஸ்  4.1
 5. அமெரிக்கா   3.6
 6. லிதுவேனியா  3.2
 7. ஜிப்ரால்டர்  3
 8. மால்டோவா  3
 9. டென்மார்க்  2.9
 10. கியூபா 2.9
 11. உக்ரைன் 2.8
 12. ஹொங்கொங் 2.76
 13. லாட்வியா 2.6
 14. ஜோர்தான் 2.6
 15. எஸ்டோனியா 2.6
 16. பின்லாந்து 2.5
 17. செக் குடியரசு 2.5
 18. சான் மரினோ 2.5
 19. கோஸ்டா ரிகா 2.5
 20. சுவிடன் 2.5

 

                                                                               "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

                                                                  பண்பும் பயனும் அது"

                                                                                                                                  (திருக்குறள் )

ஜே. ஏ.ஜோர்ஜ்

‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, சமீபத்தில் வெளியான படம் ‘விவேகம்’. இதையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்கவுள்ளார். ‘விசுவாசம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

DQhCVvkV4AEaEnx.jpg

 

இப்படத்தில் மிக ஸ்டைலிஷாகாவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். தற்போது, நேற்று (டிசம்பர் 7ஆம் திகதி) வியாழக்கிழமை செண்டிமெண்ட்டாக படத்திற்கு பூஜை போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் முன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றவேளையில். படப்பிடிப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளார்கள். படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top