Items filtered by date: Wednesday, 13 December 2017

இலங்கையில் கடந்த வருடம் 72.1 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்ட நத்தார் மரமானது கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

அமைச்சர் அர்ஜுண ரணதுங்க துறைமுகங்கள் அமைச்சராக பதவி வகித்த போது இவரது தலைமையின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பு, காலிமுகத்திடலில் அமைக்கபட்ட இந்த நத்தார் மரமே உலகில் உயரமான நத்தார் மரமாக தற்போது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

இது குறித்த சான்றிதலானது உலக கின்னஸ் சாதனைக் குழுவினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. உலகின் மிக உயரமான நத்தார் மரமாக கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் அமைக்கப்பட்ட 55 மீற்றர் உயரமான நத்தார் மரமே இதுவரை இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் கித்சிறி ரணவக்கவுக்கும் எதிரான வழக்கை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று கட்டளையிட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5 மில்லியன் நாட்குறிப்புகளை திவிநெகும திணைக்களத்தினூடாக அச்சிட்டு, அரசுக்கு 29.4 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக பசில் ராஜபக்ஷவும் இரண்டாவது சந்தேகநபரான, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

தற்போதைய நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் வழக்கை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் வேறொரு நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடுமாறும் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்தமனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதியரசருமான எல்.டி.பி.தெஹிதெனிய, முன்னிலையில், எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், பிரதிவாதிகளின் எழுத்துமூல எதிர்ப்பை சமர்ப்பிப்பதற்கான தினமாக பெப்ரவரி முதலாம் திகதியும் நிர்ணயிக்கப்பட்டன.

பாரியமோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரசசொத்துகள், சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த நீதிபதி கிஹான் குலதுங்க தனக்கெதிராக விசாரணை செய்தார் என்றும் பசிலின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து, கைதிகள் 27 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய முன்னிலையில், மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த அமர்வின் போது, விசாரணை வெளிப்படையாக இருக்கவேண்டும் எனவும் அதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த அமர்வில் தான் கோரியமையை மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரத்னவேல் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுதொடர்பான அறிக்கைகள், அடுத்த அமர்வில் வழங்கப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இன்னும் தயார் இல்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோன், மன்றில் அறிவித்தையடுத்து, மனு எதிர்வரும் 13ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற அமர்வின் போது, இராணுவத்தினர், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் ஆகியோரிடம் புதிதாக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோன், மன்றில் அறிவித்திருந்தார்.

மேலும், 75 சதவீதமான விசாரணைகள் முடிடைந்துள்ளன என்றும் மேலதிக விசாரணைகளுக்கு 4 தொடக்கம் 6 வாரங்கள் தேவை என்றும் குறிப்பிட்டதுடன், முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியிருந்ததார். அதனையடுத்தே, மனு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 2007ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, 2009ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு சட்டமா அதிபரால் விடுவிக்கப்பட்ட, டபிள்யூ.எஸ். நந்திமால் சில்வா என்பவராலேயே இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி 1 மணியளவில், அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் சிறைச்சாலைக்குள் நுழைந்து தேடுதல் நடத்தவுள்ளனர் என்ற தகவல் தமக்குக் கிடைத்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் சிறைச்சாலை வாயிலில் வைத்து, வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் திகதி முற்பகல் 10 மணிவரையிலும் சிறைச்சாலை, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அக்காலப்பகுதிக்குள் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி, இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில், தான் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

உமா ஓயாத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை முறையாக வழங்க உத்தரவிடக்கோரி, பதுளை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பதுளை மேல் நீதிமன்றில், நீதிபதி துசித்த தேசப்பிரிய குணசேகர முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், உமா ஓயா திட்டப் பணிப்பாளர், உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கமிட்டியின் பிரதிப் பணிப்பாளர், பதுளை அரச அதிபர், ஊவா மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அடுத்து வழக்குத் தவணையில் மேற்குறிப்பிட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு அழைப்பாணைகளை விடுக்கும்படியும் உத்தவிட்டார்.

Published in உள்நாடு

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் திங்கட்கிழமை மாலை தோட்டத்தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரொசிட்டா தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட ஆலயத்துக்கு முன்பாக கூடி நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் வேலை நிறுத்தப்போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

அண்மைக்காலமாக தோட்டங்கள் காடாகி வருவதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு சில மாதங்களில் இத்தோட்டத்தில் பலர் சிறுத்தைத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகவும், இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன், தாக்கப்பட்டவர்களுக்கும் எந்தவித நஷ்டஈடும் வழங்க தோட்ட நிர்வாகம் முன்வரவில்லையெனவும், 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருந்த சிறுத்தைகள் தற்போது ஒரு கிலோமீற்றர் தூரத்தில் குடியிருப்புகளுக்கு வந்து தொழிலாளர்களை தாக்குவதாகவும், தோட்ட நிர்வாகமோ, வன ஜீவராசிகள் திணைக்களமோ இதுகுறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லையெனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

அத்துடன், தொடர்ந்தும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் இந்த மக்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தைகளை தாக்கினால் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என அச்சுறுத்துவதாகவும், சிறுத்தைகளின் உயிருக்கு அளிக்கப்படும் மதிப்புகூட தோட்டத்தொழிலாளர்களின் உயிருக்கு அளிக்காதிருப்பது ஏன் என இவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

தோட்ட நிர்வாகம் சிறுத்தைகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை கொளுத்துமாறு தெரிவித்தாலும், பட்டாசுகளை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வருவதில்லை என்றும் இந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின் தொடர்ந்தும் தோட்டத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அண்மைகாலமாக தோட்டத்தொழிலாளர்கள் சிறுத்தைகளின் தாக்குலுக்கு உட்பட்ட வருவதாகவும், தோட்ட நிர்வாகம் இதற்காக வேலை நேரத்தில் பாதிக்கப்பட்டாலும் கூட எவ்வித நஷட ஈடு வழங்கப்படுவதில்லை என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இது குறித்து தொழிற்சங்கங்களும் அரசியல் தலைவர்களும் பாராமுகமாக இருந்து வருவதாகவும் சிறுத்தைகள் தாக்குதலுக்குட்பட்டவர்கள் தோட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும் போது அது சிறுத்தை அல்ல என தெரிவிப்பதாகவும் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புமில்லாத நிலையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Published in உள்நாடு

நாடாளுமன்ற செய்தியாளர்கள் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு களுத்துறைக்கு சென்றிருந்தனர். அங்கு அவர்களுடன் இணைந்துகொண்ட பியல் நிசாந்த டி சில்வா சிங்களப் பாடல்களைப் பாடி செய்தியாளர்களை அசத்தினாராம். மிகவும் எளிமையான எம்.பியாம் அவர்.

அரச ஊடகமொன்றின் முக்கிய தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் இரவு நேர அவசர வேலையொன்றுக்காக அழைக்கப்பட்டாராம்.

எந்நேரமும் ரை, கோட்டுடன் இருக்கும் அவர், அந்த இரவு நேரமும் ""கோர்ட் போடாமல் வரமாட்டேன்'' என்று அடம்பிடித்தாராம். விடயம் ஊடக அமைச்சரின் காதுகளுக்கும் சென்றுள்ளதாம். தலைவர் விரைவில் பதவியில் இருந்து தூக்கப்படுவார் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.

கிழக்கில் புதிதாக அமைந்துள்ள முஸ்லிம் கூட்டணிக்குள் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாம். அந்தக் கூட்டணி உருவாக ஆரம்பகர்த்தாவாக இருந்த குதிரையை விட்டுவிட்டு மயிலில் பறக்க நினைத்ததால்தான் இந்த நிலைமையாம்.

குதிரை அக்கரைப்பற்றில் பாய்ந்தோட விரும்பினாலும் அங்கு மயில் பறக்கவேண்டுமென சிலர் நினைக்கின்றனராம். முதல்நாள் கூட்டணி செய்தியாளர் மாநாட்டில் பிரபல ஹாஜியார் கலந்துகொள்ளாமைக்கும் இதுதான் காரணமாம்.

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய இலங்கையின் முன்னணி தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்க உரிமைகளை இலங்கை அரசு தொடர்ந்தும் பறித்துவந்தால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை செய்யவும் உத்தேசித்திருப்பதாக அவர்களால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் திணைக்கள ஊழியர்களின் தொழிற்சங்கத்தை நசுக்கும் அடக்கு முறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

“ரயில்வே திணைக்கள ஊழியர்கள் கடந்த 6 தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். எனினும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் தலையிடாமல் நேற்றுய தினமே அரசு அதில் தலையீடு செய்து குழு அமைத்து பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சி செய்தது.

எனினும் கடந்த திங்கட்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியதுடன், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதற்கு அரசே பொறுப்பு கூற வேண்டும். சாதாரணமாக தொழிற்சங்கப் போராட்டமொன்றை தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் அதனை தடுப்பதற்கு அரசு அடக்குமுறையை கையாண்டது.

அதன் ஓரங்கமாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்திய அரசு, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க முயற்சித்தமை கண்டிக்கத்தக்க விடயமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பதாக இலங்கை உறுதியளித்தது.

இருப்பினும் உள்நாட்டில் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசு தவறிவருகிறது. இதனை சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சென்று இலங்கை அரசுக்கு எதிராக முறையிட தீர்மானித்துள்ளோம்” என்றார்.

Published in உள்நாடு

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top