தஸநாயக்கவின் மகளை சந்திக்க மறுப்பு; ஐ.நா நிபுணர்களின் பக்கச்சார்பின் வெளிப்பாடு

தஸநாயக்கவின் மகளை சந்திக்க மறுப்பு; ஐ.நா நிபுணர்களின் பக்கச்சார்பின் வெளிப்பாடு

தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்கவின் மகளை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் சந்திக்க மறுத்துள்ளமை பக்கச்சார்பானது என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று காலை ட்விட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய தந்தையின் அவலநிலை தொடர்பில் வேண்டுகோள் விடுப்பதற்காக தஸநாயக்கவின் மகள், இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா நிபுணர்களை அணுகியுள்ளார் என்றும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் தொடர்பான விசாரணை இல்லை என்பதற்காக,அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக நாமல் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த நிபுணர்கள், தங்களுடைய வெளிப்படையான பக்கச்சார்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு, தெஹிவளையில் வைத்து ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

அதே ஆண்டு, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகியோரும் கொழும்பில் கடத்தப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க உட்பட எழுவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் எழுவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top