சசிகலாவிற்கு சிறையில் சலுகை; உண்மை அம்பலம்

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மையென உயர்நிலை விசாரணைக் குழு கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேன்முறையீட்டு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை அதிகாரி ரூபா ''சிறையில் சசிகலாவுக்கு நவீன சமையல் அறை, பிரத்தியேக வைத்திய வசதி, பணிப்பெண்கள், பார்வையாளர், யோகாசன அறை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சசிகலா தரப்பு சிறைச்சாலை அதிகாரி சத்தியநாராயண ராவுக்கு இரண்டு கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்“ முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து சசிகலா சிறையில் சீருடை அணியாமல் வலம் வருவது, அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பது, அதிக அறைகளை பயன்படுத்துவது போன்ற காணொளி, புகைப்பட ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறை முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற இந்திய அரச சேவை அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

வினய்குமார் தலைமையிலான அதிகாரிகள் 3 நாட்கள் சிறைக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டதோடு, சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமரா, வருகை பதிவேடு உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த விசாரணை தொடர்பான அறிக்கையை உயர்நிலை விசாரணைக்குழு கர்நாடக உள்விவகார அமைச்சகத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ளது.

“பெங்களூரு மத்திய சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான உயர்நிலை விசாரணை குழுவின் அறிக்கை வந்துள்ளது. முறைகேடு நடந்தது உண்மைதான் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா தொடர்பான குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த முறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.“ கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top