முடங்கியது வடக்கு!

முடங்கியது வடக்கு! Featured

/ Friday, 13 October 2017 11:13
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த ஹர்த்தாலினால்  வட மாகாணத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியிருந்தன.
 
வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 19 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் அரசு பராமுகமாக இருந்து வருகின்றது. 
 
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் அரசு உடனடியாக விடுதலைசெய்யுமாறு கோரியும் வடக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்த தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன ஒன்றிணைந்து  அழைப்பு விடுத்திருந்தன. 
 
நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் தாமதமின்றி தீர்வு காண வேண்டிய இந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு  உணர்த்தும் இந்தக் ஹர்த்தால் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
இதற்கு சுமார்  50 இற்கும்  மேற்பட்ட அமைப்புக்கள் ஆதரவைத் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.  திட்டமிட்டவாறு வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. 
 
வர்த்தக  சங்கங்கள், வங்கிகள், போக்குவரத்துத்துறையினர், தொழிற்சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகியன ஏகோபித்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளன. 
 
இதனால் வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் இன்று முற்றாக முடங்கியுள்ளன. நகர்ப்பகுதிகள் மாத்திரமன்றி கிராமப்
புறங்களும் முடங்கியுள்ளன. 
 
போக்குவரத்து சேவைகள் இடம்பெறாததனால் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியன இழுத்து மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள் திறக்கப்பட்டபோதும் மாணவர்கள் செல்லவில்லை. அரச திணைக்களங்கள் அலுவலர்களின் வரவின்றிக் காணப்படுகின்றன.
 
வடக்கு மாகாண மக்கள் ஓரணியில் திரண்டு தமது தார்மீக பேராதரவை இன்றைய ஹர்த்தால் போராட்டத்துக்கு வழங்கியுள்ளனர். மிகவும் அமைதியான முறையில் இன்றைய ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது. 
 
 

Please publish modules in offcanvas position.