அரசியல் கைதிகளுக்காக  இன்று முடங்கியது வடக்கு

அரசியல் கைதிகளுக்காக இன்று முடங்கியது வடக்கு Featured

/ Friday, 13 October 2017 04:13
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலைசெய்யுயுமாறு கோரியும் இன்று வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்புகளும் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளன. 
 
இன்றைய ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெறுவதற்கு அனைத்துத் தரப்பினரும் தங்கள் முழு ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.
 
வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 
 
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் மைத்திரி  ரணில் அரசு தொடர்ந்தும் பராமுகமாக இருப்பதால் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலைசெய்யுமாறு கோரியும் இன்று  வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்துவதற்கு தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிக்கையூடாக அழைப்பு விடுத்திருந்தன. அதற்கமைய வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெறுகின்றது.
 
அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள்  எனப் பல்வேறு தரப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளன. 
 
இதனால் வடக்கு மாகாணம் இன்று முற்றாக முடங்கியுள்ளது. 
 
இதேவேளை, இன்று காலை  9.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.
 
அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்றைய ஹர்த்தால் போராட்டமும், கவனயீர்ப்புப் போராட்டமும்  நடைபெறவேண்டும் எனவும், இதற்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும்  வழங்கவேண்டும் எனவும் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.  

Please publish modules in offcanvas position.