புதிய அரசமைப்பை ஏற்கவே முடியாது

புதிய அரசமைப்பை ஏற்கவே முடியாது Featured

/ Friday, 13 October 2017 03:15
"புதிய அரசமைப்பு உருவாவதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை''  என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுனவின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
 
"உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளமையால்  நாம் எமது கட்சி சார்பாக பல முக்கிய விடயங்கள் தொடர்பில் தற்போது முடிவெடுத்துள்ளோம்.
 
அரசால் மேற்கொள்ளப்படும் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள், அரச வளங்களை விற்பனைசெய்யும் நடவடிக்கைகள், நாடு தற்போது முகங்கொடுத்துவரும் பொருளாதார வீழ்ச்சி, சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தாமை, புதிய அரசமைப்பை ஸ்தாபிக்கின்றமை போன்ற அரசின் செயற்பாடுகளுக்கு மக்களின் ஆதரவுடன் போராடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையாலேயே நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து மிக முக்கியமாக செயற்பட்டு வருகின்றோம்.
 
அந்தவகையில், கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணியமைத்து தேர்தலுக்கு முகங்கொடுப்பது எனும் முடிவை நாம் தற்போது எடுத்துள்ளோம். இவை தவிர, இதர பல கட்சிகளுடனும் நாம் பேச்சுகளை ஆரம்பித்துள்ளோம்.
 
எம்மைப் பொறுத்தவரை புதிய இளைஞர்களுக்கு  படித்தவர்களுக்கு  பெண்களுக்கே இம்முறை அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக எமது கட்சி சார்பில் 25 வீத ஒதுக்கீட்டையும் இளைஞர்களுக்கே வழங்கியுள்ளோம். 
 
இதனால், இத்தேர்தலில் 200இற்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளையும் எம்மால் உறுதியாகக் கைப்பற்றமுடியுமாக இருக்கும்.
 
அதேநேரம், இத்தேர்தலின் ஊடாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அரசியலுக்கு வருவாரா எனும் கேள்வியும் சமகாலத்தில் எழுந்துள்ளது. உண்மையில், அவர் 1970களில் இருந்தே எமது அரசியலுக்குப் பின்னால் சகோதரன் ஏனும் வகையில் இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார். இருப்பினும், அவர் வருவாரா இல்லையா என்பது தொடர்பில் எம்மால் உறுதியாக எந்தப் பதிலையும் வழங்கமுடியாது. ஆனால், இவ்வரசால் நாடு பிளவடையும் அபாயமொன்று ஏற்பட்டால், நாட்டுக்காக உயிரைக்கூட துச்சமெனக் கருதி போராடியவர் எனும் வகையில் அவர் அரசியலுக்கு வருவார் என்றே நாம் நினைக்கின்றோம்.
 
மேலும், தற்போது யார் என்ன குறை கூறினாலும் விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்து தொகுதிக்குப் பொறுப்புக்கூறும் பிரதிநிதியொருவரை கொண்டுவரும் தேர்தல் முறைமையை நாமே மஹிந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தினோம்.
 
அப்போது, இது தொடர்பில் மூன்று நாடாளுமன்ற அமர்வுகளின்போது விவாதிக்கப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவும் பெறப்பட்டது. மாறாக, நாம் இதனை திரைமறையில் மேற்கொள்ளவில்லை என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. ஜே.வி.பி. போன்ற சில கட்சிகளே எம்மீது குறை கூறிக்கொண்டிருக்கின்றன. 
 
எம்மைப் பொறுத்தவரை ஆடத்தெரியாதவன்தான் மேடையைக் குறை கூறுவான். எனினும், நாம் அப்படியல்ல, எந்த மைதானமாக இருந்தாலும் ஆட்டத்துக்குத் தயாராகவே இருக்கிறோம்.
 
ஆனால், புதிய அரசமைப்பு மட்டும் நாம் ஏற்றுக்கொள்ளவே போவதில்லை. ஏனெனில், இதன் தயாரிப்புப் பின்னணியில் ஏதோ உள்நோக்கமொன்று உள்ளதென்பதை நாம் அறிந்துள்ளோம். நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசமைப்புத் திருத்தமொன்று அவசியமென்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும், நாட்டை பிளவடையச் செய்யும், நல்லிணக்கத்தை மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் இந்த புதிய அரசமைப்பை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்ற  நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.   

Please publish modules in offcanvas position.