இலங்கைக்குரிய வளங்களில் இந்தியா கைவைக்கவேகூடாது

இலங்கைக்குரிய வளங்களில் இந்தியா கைவைக்கவேகூடாது Featured

/ Friday, 13 October 2017 03:03
"இலங்கையின் வளங்களை வாங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மக்கள் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பும் நிலை உருவாகும்."என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
 
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்தவாறு 'சுடர் ஒளி'க்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு இடித்துரைத்தார்.
 
மத்தல விமான நிலையத்தை இந்திய அரசுக்கு குத்தகைக்கு வழங்கும் இலங்கை அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கு முன்னால் பொது எதிரணியினர் கடந்த வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது பெரும் களேபரம் ஏற்பட்டது. 
 
நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து நாமல் ராஜபக்ஷ உட்பட பொது எதிரணி எம்.பிக்களும், ஆதரவாளர்களும்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், மத்தல விமானநிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டத்தை ஏன் பொது எதிரணி எதிர்க்கின்றது என்றும், நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி வெளிநாட்டுத்  தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவது முறையற்ற செயற்பாடுதானே என்றும் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
"நாங்கள் இங்கே சிரமப்பட்டு செய்த ஒரு திட்டத்தை  இந்தியா  இலகுவில் எடுத்துக்கொண்டு செல்ல முயல்கிறது. இது நீதியல்ல. அவர்கள் எங்களுடன் இதுபற்றியெல்லாம் பேசுவதில்லை. எமது நாட்டில் உள்ளவற்றை விலைக்கு வாங்க இந்தியா முயலக் கூடாது. அதனை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். 
 
நாட்டு வளங்களை விற்கும் செயற்பாடுகளுக்கு எமது நாட்டு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் இந்தியாவையும் எதிர்க்கத் துணிவார்கள்.கவனம். நான் இந்தியாவுக்கு எதிரியல்ல. ஆனால், எனது நாடும்  மக்களும் எனக்கு முக்கியம். தொலைநோக்கு பார்வையில் இந்தியா செயற்பட வேண்டும். பின்னர் வருந்தவோ கவலைப்படவோ கூடாது'' என்றார்.

Please publish modules in offcanvas position.