மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி செல்லுப்படியானதா?; கேள்வி எழுப்புகிறது பொது எதிரணி

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி செல்லுப்படியானதா?; கேள்வி எழுப்புகிறது பொது எதிரணி Featured

/ Thursday, 12 October 2017 12:28

2015ஆம் ஆண்டு அன்னம் சின்னத்தில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி செல்லுப்படியானதா என்று பொது எதிரணி கேள்வியெழுப்பியுள்ளது.

இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு தேர்வாகியமை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளது.

பெரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

“தற்போதைய அரசில் கொள்ளையடித்தவர்களின் பெயர் விபரங்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் உள்ளது. மத்திய வங்கி கொள்ளையின் மூலம் தனது சுயரூபத்தை ஆரம்பித்த நல்லாட்சியாளர்கள், இன்று அதனை விரிவுப்படுத்தி சர்வதேச வங்கிகளில் கொள்ளையடிக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர்.

சோமாலியாவில் கடல் கொள்ளையர்கள்தான் உள்ளனர். ஆனால், எமது நாடு வங்கிக் கொள்ளையர்களின் நாடாக மாறியுள்ளது. இதுதான் நாட்டுக்கு இவர்கள் பெற்றுக்கொடுத்த கௌரவ பெயராகும்.

ஆட்சிமாற்றத்திற்கு மக்களிடம் வாக்குகளைப் பெற்றிருந்த அரசானது ஆட்சிமாற்றத்தின் பின்னர் வெளிநாட்டு பிரஜைகளையே மத்திய வங்கியின் ஆளுநராகவும், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராகவும் நியமித்துள்ளது.

இலங்கையின் பிரஜா உரிமையை பெறாத ஒருவர் இலங்கையில் கட்சியொன்றை உருவாக்கி அதில் இரண்டு முறை ஜனாதிபதி வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையாளரிடம் நாங்கள் கேட்பதானது, இலங்கையில் பிரஜாவுரிமையை இல்லாத ஒருவரின் கட்சியில் எவராவது தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அது ஏற்புடையதா? பிரஜா உரிமை இல்லாத ஒருவருக்கு கட்சியொன்றை பதிவுசெய்ய முடியுமா? அந்தக் கட்சிக்கு தலைவராக முடியுமா? அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் செல்லுப்படியாகுமா?“ என கேள்வி எழுப்பியுள்ளார் விமல் வீரவன்ச

Please publish modules in offcanvas position.