தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை
தடைசெய்யுமாறு கோரிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு முன்வைப்பு

புலிகள் இயக்கத்துக்கு நிதிச் சேகரிக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்ற அமைப்புகளைத் தடைசெய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின்போது, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன இலங்கை அரசின் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மைக்கல் லுமெக்ஸ் இங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:
இலங்கையில் தமிழர்களுக்காக தனித் தாயகம் அமைப்பதற்கான கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் ஆட்சேபிக்கின்றது. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக புலிகளை ஐரோப்பிய யூனியன் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை வகித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன, புலிகள் அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் வெளிநாடுகளில் நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை விளக்கிக் கூறினார்.
அத்துடன், நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைக் காணும் வகையில் பேச்சு நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (க 09)