மன்னார் களமுனைகளில் மோதல்
இருதரப்பினரும் மாறுபட்ட தகவல்

மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சமர்களில் ஆறு இராணுவத்தினர் உயிரிழந்தனர் என்றும் 5 பேர் வரை படுகாயமடைந்தனர் என்றும் புலிகள் அறிவித்துள்ளனர்.
பாலம்பிட்டி ஊடாக நேற்றுமுன்தினம் காலை 8 மணியளவில் பின்தளச் சூட்டாதரவுடன் இராணுவத்தினர் முன்னேறினர் என்றும் அதற்கு 30 நிமிட முறியடிப்புச் சமரில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களுடன் பழைய நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர் என்றும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் பெரிய மடுவில் இருந்து சிறாட்டிக்குளம் பகுதியை நோக்கியும் இராணுவத்தினர் முன்னேற முயன்றனர் என்றும் அதற்கு சுமார் ஒரு மணிநேர முறியடிப்புச் சமரின் பின்னர் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களுடன் பழைய நிலைகளுக்குத் திரும்பிச்சென்றனர் என்றும் புலிகள் தரப்பில் மேலும் கூறப்பட்டது.
இதேவேளை, மன்னார் முன்னரங்க நிலைகளில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் ஏழுபேர் வரை காயமடைந்தனர் என்றும் தமது தரப்பில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மணலாறு ஜனகபுர, கிரிபென்வௌப் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் ஆறுபேர் காயமடைந்தனர் என்றும் படைத்தரப்பில் மேலும் கூறப்பட்டது. (க 10)