நாளைய பணிப்புறக்கணிப்புக்கு
ம.ம. முன்னணி ஆதரவு தராது!
அக்கட்சி நேற்று அறிவிப்பு

சம்பள அதிகரிப்புக் கோரி நாளை நடத்தப்படவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்கப்போவதில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை ஐ.தே.கட்சி கிழித்து வீசினால் மாத்திரமே தாங்கள் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் அக்கட்சியின் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் எம்.பியும் பிரதி அமைச்சருமான ராதாகிருஷ்ணனே இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
முரண்பட்டு நிற்கும் இரண்டு கட்சிகள் ஜூலை 10ஆம் திகதி வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளன. இது அர்த்தமற்றது. அரசியல் லாபம் தேடும் நோக்கிலேயே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஒரு கூட்டு ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு வருடங்களுக்கு சம்பள அதிகரிப்புச் செய்யவோ அல்லது சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யவோ முடியாது.
இந்தக் கூட்டு ஒப்பந்தம் தோன்றக் காரணம் ஐ.தே.கட்சிதான். அந்த ஒப்பந்தம் ஓர் அடிமைச்சாசனம். அப்படியானதோர் ஒப்பந்தத்தைச் செய்த அக்கட்சி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான வேலைநிறுத்தத்திற்காக அழைப்பு விடுத்திருப்பது கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.
அரசியல் லாபம் கருதியே இந்த வேலைநிறத்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
தோட்டத் தொழிலாளர்களின் முதுகில் எழுதப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் என்ற அடிமைச்சாசனத்தை ஐ.தே.கட்சி கிழித்து வீசினால் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.
மாறாக மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் லாபம் கருதி மேற்கொள்ளப்படும் இவ்வாறான வேலைநிறுத்தப் போராட்டத்தை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். என்றார். (த 07)