|
நாளை நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐந்து பிரதான ஊடக அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பாக அந்த அமைப்புகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
2008 ஜூலை 10ஆம் திகதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தம், உழைக்கும் வர்க்கத்தின் உரிமை எனக் கருதும் எமது அமைப்புகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் துரிதமாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு முன்னால் இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மனிதத்துவத்துக்கு ஏற்ப சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
இந்நிலையின் கீழ் வாழ்வதற்கு ஏற்ற வேதனத்தைக் கோரிப் போராட்டம் நடத்துவது வாழ்வதற்குள்ள உரிமையைப் போலவே அடிப்படை மனித உரிமையென நாம் கருதுகின்றோம்.
அதேபோல், ஊடக ஊழியர்களான நாம் அனைவரும் இதே நிலைக்கு முகம் கொடுக்கின்றோம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
5000 ரூபா சம்பள உயர்வும் மற்றும் அரசு இணக்கம் தெரிவித்துள்ளவாறு அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் எதுவித குறையுமின்றி வழங்கக் கோருவது நியாயமானதென்றே எமது அமைப்புகள் எண்ணுகின்றன. எனவே, இக் கோரிக்கைகளுக்கு எமது அமைப்புகள் ஆதரவு வழங்குகின்றன.
தமது கோரிக்கைகளை வெற்றிகொள்ள நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்தம் செய்யும் ஜனநாயக உரிமையை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த அரசு யுத்த ரீதியான சுலோகங்களை முன்வைக்க எடுக்கும் முயற்சிகளை நாம் கண்டிக்கின்றோம். கடந்த காலம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை அடக்கி ஒடுக்குவதற்காக அரசு யுத்தத்தைக் காரணம் காட்டியும் புலிப் பயங்கரவாத முத்திரையைக் குத்தியும் நடவடிக்கை மேற்கொண்டது.
உழைக்கும் மக்கள் அனைவரதும் பொதுக் கோரிக்கையை ஏற்று சம்பள உயர்வை வழங்கும்படி நாம் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம். அதேபோல் அமைப்பு ரீதியாக ஒன்றுபடுவது, பேரம் பேசுவது, மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் ஜனநாயக உரிமைகளை அடக்கி, ஒடுக்க முயற்சிக்க வேணடாமெனவும் அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.(த)
|