மன்னார் கடலில் பிரச்சினை இல்லை;
இந்திய நிறுவனத்திற்கு அரசு சிபார்சு!

மன்னார் கடலில் பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் இல்லை என்று அங்கு எண்ணெய் அகழ்வுப் பணியை மேற்கொள்ளும் உரிமையைப் பொறுப்பேற்றுள்ள கெயர்ன் இந்தியா நிறுவனத்திற்கு இலங்கை அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
கெயர்ன் இந்தியா நிறுவனத்தின் பிரதம நிதியதிகாரி இந்திரஜித் பனர்ஜி இதனைத் தெரிவித்துள்ளார்.
""மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வின்போது பாதுகாப்பு நிலை குறித்தும் சிந்தித்தோம். அரசு அப்பகுதி ஆபத்தற்றது எனத் தெரிவித்துவிட்டது'' என்று பனர்ஜி தெரிவித்துள்ளார்.
எண்ணெய்வள ஆய்வு என்பது எப்போதும் ஆபத்தான வர்த்தகம், இதில் வெற்றி என்பது நிச்சயமாகக் கூற முடியாத விடயம் என்றும் இந்திரஜித் பனர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பகுதியில் பூகம்பத்திற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்ற ஆய்வினையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் கடலுக்கடியில் என்ன உள்ளது என்பது எதிர்வு கூற முடியாத விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.
கெயர்ன் இந்தியா நிறுவனம் தென்னாசியாவில் மூன்று தசாப்தகாலமாக செயற்பட்டு வருவதாகவும், பிராந்தியத்தின் பூகோளவியல் குறித்து அது நன்கு அறிந்துள்ளதாகவும் பனர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் இயற்கை வாயுவை தனது நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகவும் இதில் இந்தியாவின் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள மங்களாவில் மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்பு முக்கியமானதெனவும், இங்கு முவாயிரத்து ஏழுநூறு @காடி பரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த கெயர்ன் எனேர்ஜி எனும் கிளை நிறுவனமே கெயர்ன் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. (த)