இந்தியாவுடன் முறையற்ற ஒப்பந்தம்;
நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்து!
சபையில் விமல் வீரவன்ஸ அபாயச்சங்கு!

இலங்கையில் எண்ணெய் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான இந்தியாவுடனான ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது முறையற்ற விதத்தில் செய்யப்பட்டுள்ளது என்றும்
இந்த ஒப்பந்தம் தொடர்பான சிபாரிசுகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நிபுணர்களையும் கொண்ட குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்றும் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இலங்கையில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ள இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அகழ்வுப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் செய்யப்படும் முன்னர் பின்பற்றப்படவேண்டிய எந்த விடயமும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ஒரு நாட்டின் எரிபொருள் வளம் என்பது அந்த நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்று. இதைச் சரியான முறையில் கையாண்டால் நாட்டைச் செல்வச் செழிப்புள்ள நாடாக மாற்றலாம். பிழையான முறையில் கையாண்டால் நாடு அழிந்துவிடும்.
இதைச் சரிவரக் கையாளும் ஐரோப்பிய நாடுகள் செழிப்படைந்துள்ளன. பிழையாகக் கையாண்ட நாடுகள் இப்போது அழிகின்றன.
வல்லரசு நாடுகள் எரிபொருள் வளத்தைச் சுரண்டுவதற்காகவே அவ் வளம் உள்ள நாடுகளுடன் சண்டை போடுகின்றன.
இதே அபாயம், எமது நாட்டுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. சரியாகச் செயற்பட்டால் மாத்திரமே இந்த அபாயத்தில் இருந்து தப்ப முடியும்.
இலங்கையில் எண்ணெய் அகழ்வுப் பணியை மேற்கொள்வதற்காக இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் தொடர்பில் நாம் முன்வைத்த கருத்துக்கள் ஆலோசனைகள் எவையும் கவனத்தில் எடுக்கப்படாமல் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான சிபாரிசுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக எம்.பி.க்களையும் , நிபுணர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்றார். (த 07)