             |
| |
|
|
| |
|
|
எண்ணை அகழ்வு ஒப்பந்தத்தின்
விவரம் இன்று நாடாளுமன்றத்தில்!
|
|
இலங்கையில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்காக இலங்கை அரசு இந்தியாவுடன் நேற்றுமுன்தினம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் முழு விவரம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக யாரும் சந்தேகப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சபையில் பிரச்சினையைக் கிளப்பினார். அரசு நாட்டைப்பற்றிக் கவலைப்படாது நாட்டுப்பற்றற்ற முறையில் அவசரப்பட்டு இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது என்றார் அவர்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இப்படிக் கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
இலங்கையில் எண்ணெய் அகழ்வு செய்வது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன் நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.
ஆனால், எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டதன் பின்புதான் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டது. அதனால் என்னால் இதைத் தற்காலிகமாக ஒத்திப்போட முடியாது.
எண்ணெய் அகழ்வுப் பகுதி 08 துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுள் ஒரு பகுதிதான் அகழ்வுக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக யாரும் சந்தேகப்பட வேண்டாம். எனக்கும் நாட்டுப்பற்று உண்டு. நாட்டுக்கு விரோதமான வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தை நான் நாளை (அதாவது இன்று) நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன். அப்போது எல்லோரும் அதில் உள்ள விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
இந்த எண்ணெய் அகழ்வால் எமது நாட்டுக்கு நன்மை உண்டே தவிர தீமையில்லை. என்றார். (த 07) |
| |
|
|
|