குண்டு துளைக்காத வாகனங்கள்
பிள்ளையானிடமும் உள்ளனவா?
ஐ.தே.க. கேள்வி; பதிலளிக்க அரசு மறுப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கு அரச குண்டுதுளைக்காத வாகனங்களை வழங்கியிருக்கின்றதா என்று ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது. எனினும் அதைப் பற்றி எதுவும் கூறமுடியாது என்று அரசின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா மறுத்துவிட்டார்.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இப்போது வரை குண்டு துளைக்காத 31 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
அவை ஜனாதிபதிக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார். ஆனால் மேலும் யார், யாருக்கு இவை வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கூறமுடியாது என்று அவர் கூறிவிட்டார்.
இந்த வாகனங்கள் தாய்லாந்து, ஜேர்மனி, இந்தியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்றும் அவர் கூறினார்.
13 ஆவது நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டதன் பின்பு எத்தனை குண்டு துளைக்காத வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்றும்
அந்த வாகனங்களில் எவையேனும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டிருக்கின்றனவா என்றும் ரவி கருணாநாயக்கா அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
பிள்ளையானின் பாதுகாப்புக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் குண்டு துளைக்காத வாகனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப்பற்றி பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கூறமுடியாது என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்று வழங்கப்படும் என்று கூறிய அரசு இறுதியில் அந்த வாகனத்தை அவருக்கு வழங்கவில்லை என்றும் ரவி மேலும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவருக்குத் தேவையான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்றது என்று பதிலளித்த அமைச்சர், ரணிலுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் உள்வீட்டுப் பிரச்சினைக்கு அரசு பாதுகாப்பு வழங்க முடியாது. என்றார்.(த 07)