வெள்ளைவான் கடத்தல்களுக்கு
அரசும் படையினருமே பின்னணி!
ஆதாரங்களுடன் சகல விவரங்களும்
சபைக்கு வரும் என்று ஐ.தே.க. சூளுரை

நாட்டில் இடம்பெற்று வரும் வெள்ளைவான்களில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளுக்கு அரசும் இராணுவத்தினருமே பின்னணி என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி.
இத்தகைய வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பான முழு விவரங்களையும் உரிய ஆதாரங்களுடன் தமது கட்சி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் ஐ.@த.க. சூளுரைத்திருக்கின்றது.
ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பிரதம கொறடா ஜோஸப் மைக்கல் பெரேரா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
இன்று நாட்டில் ஊடகவியலாளர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தம் தொடர்பாகவும், அரசின் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.
அவ்வாறான விடயங்கள் தொடர்பான உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுத் தாக்கப்படுகின்றனர்.
தாக்குபவர்களைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு தாக்கப்பட்டவர்களை மேலும் மேலும் காயப்படுத்தும் விதத்தில் அரசு செயற்படுகிறது.
அரசு இவ்வாறான செயற்பாடுகளை உடன்நிறுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசால் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க முடியாதுவிட்டால் இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதுவிட்டால் ஆட்சியைக் கலைத்துவிடவேண்டும் .
இன்று நாட்டில் ஏராளமானவர்கள் வெள்ளைவான்களில் கடத்திச் செல்லப்படுகின்றனர். இந்தக் கடத்தல்களுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இதுவரையிலும் அரசினால் முடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இந்தக் கடத்தல்களுக்குப் பின்னணியாக இருப்பவர்களே அரசுத் தரப்பினரும் படையினரும்தான். எனவே அவர்கள்ö தாடர்பான தகவல்கள், விவரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்றார் (த 07)