மனித உரிமைகள் விவகாரத்தில்
அரசுத் தரப்பின் சமாளிப்பு

16.05.2008

இலங்கையில் மிக மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை அரசு, அதை எதிர்கொள்வதற்குப் படாதபாடு படுகின்றது.
இவ்வாரம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்து உதறப்பட்டபோது அதைச் சமாளித்துத் "தாஜா' பண்ணுவதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது என்கின்றனர் அக்கூட்டத்தொடரின் பார்வையாளர்கள்.
இலங்கை நிலைவரம் பற்றிய விவகாரம் இன்று சர்வதேச மட்டத்தில் பரகசியமாகி விட்டதால் மனித உரிமை மீறல் சம்பவங்களில் சிலவற்றையேனும் ஒப்புக்கொண்டு "சடையும்' நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
""தற்போதைய இக்கட்டான சூழலில் சில தனி நபர்கள் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். சிலர் காணாமற் போயிருக்கின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். மிகவும் மர்மமான அசாதாரணமான சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.'' என்று ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கையின் சட்டமா அதிபர் ஸி. ஆர். டி. சில்வாவே ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
இப்படிச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும்
உலகின் மிகக் கொடூரம் மிக்க பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளோடு அரசுப் படைகள் மோதவேண்டிய நிலை இருந்தாலும்
எந்த விடயத்தையும் சட்டவிரோதமான முறையிலோ அல்லது சட்டத்துக்குப் புறம்பான விதத்திலோ முன்னெடுத்துக் கையாளும் கொள்கை இலங்கை அரசுக்குக் கிடையாது என்று அங்கு அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதனால் கைதோ, தடுத்து வைப்போ, விசாரணையோ, புலனாய்வோ எதுவென்றாலும் இலங்கைச் சட்டங்களுக்கு அமைவாகவும், மனித உரிமைகளை மீறாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசு தனது முகவர் அமைப்புகள் அனைத்துக்கும் கண்டிப்பான உத்தரவு வழங்கியிருக்கின்றது என்று குறிப்பிட்டும் அவர் அங்கு சளாப்பியிருக்கின்றார்.
இலங்கையின் சட்டமா அதிபர் சர்வதேச அரங்கு ஒன்றில் வைத்து இவ்வாறு வாய்ப் பேச்சில் கூறுபவை செவிமடுக்க இனிமையாகத்தான் உள்ளன. ஆனால் செயற்பாட்டில் அவை கசப்பாக இருப்பதைத்தான் அவர் மறந்துவிட்டார். இல்லை, மறைத்துவிட்டார்.
எழுதப்பட்ட சட்டங்களுக்கு மேலதிகமாக, கைது, தடுப்புக்காவல் என்பன நடைமுறையில் எப்படி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஜனாதிபதியே வழிகாட்டல் நடைமுறைகளை வெளியிட்டு வழிப்படுத்தியிருக்கின்றார் என அக்கூட்டத் தொடரில் சிலாகித்துக் கூறியிருக்கின்றார் இலங்கை சட்டமா அதிபர்.
ஆனால், இந்த வழிகாட்டல்களும் உத்தரவுகளும் வெறும் காகிதத்தில்தான் எழுத்தில்தான் இருக்கின்றன, நடைமுறையிலோ, செயற்பாட்டிலோ இல்லவே இல்லை என்பதுதான் இங்குள்ள துன்பியல் யதார்த்தமாகும்.
இலங்கையில் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் பிரதேசங்களில் வெள்ளைவானில் வந்து ஆட்களை தமிழர்களை திடீர் திடீரெனக் கடத்திச் செல்லும் சம்பவங்கள் இப்போது திரும்பவும் அதிகரித்துள்ளன. இப்படி வெள்ளைவானில் அள்ளிச் செல்லப்படுபவர்கள் அதிகாரிகளால் கைதுசெய்யப்படுகின்றார்களா அல்லது கடத்தப்படுகின்றார்களா என்பது உடன் தெரியவருவதில்லை. கடத்தப்படுவோரில் பலர் காணாமற் போகின்றனர். வேறு சிலர் பின்னர் பொலிஸ் நிலையங்களிலோ, தடுப்புக் காவல் மையங்களிலோ தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல்கள் காலம் கழித்து வெளியாகின்றன.
இந்தச் சீத்துவமுறையில்தான் இங்கு கைதுகள் தாராளமாக நடைபெறுகின்றன.
முதலில் சந்தேகத்துக்கு உரியவர் மர்மமான முறையில் கடத்தப்படுகின்றார். பின்னர்தான் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவரா வாழ்வதற்குத் தகுதியுடையவராக அல்லது மர்மமான முறையில் நிரந்தரமாகக் காணாமற் போனவராக அர்த்தப்பட வேண்டியவரா என்பது தீர்மானிக்கப்படுகின்றது போலும்.
அத்தீர்மானத்தின் அடிப்படையில்தான் சில சமயம் இத்தகைய "கடத்தல்கள்' பின்னர் "கைதுகள்' ஆகி, "கடத்தப்பட்டோர்' "தடுப்புக்காவல் கைதிகள்' ஆக மாற்றப்படுகின்றார்கள்.
ஆனால், பல சமயம் இத்தகைய "கடத்தல்கள்' அந்நிலைமையோடு "கடத்தலாக' முடிந்துவிடுகின்றன. கடத்தப்பட்டவரும் "காணாமற்போனோர்' பட்டியலில் சேர்க்கப்பட்டவராக மறக்கடிக்கப்பட்டு விடுகின்றார்.
இதுதான் இப்போது இத்தேசத்தில் "கைதுகள்' இடம்பெறும் போக்கு; சீத்துவம்; நடைமுறை.
நிலைமை இவ்வாறு இருக்கையில் கைதுகள், தடுப்புக் காவல்கள் தொடர்பாக காகிதத்தில் ஜனாதிபதி விடுத்த உத்தரவை மட்டும் காட்டி சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்ற முயல்கிறார் இலங்கையின் சட்டமா அதிபர்.
இத்தகைய சமாளிப்பு விளக்கங்கள் இனிமேலும் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்பப் பயன்படமாட்டா என்பதுதான் உண்மை.